Sunday, April 28, 2024
மேலும்
    Homeஆன்மிகம்தேவாரம்: “பித்தா பிறை சூடி” பாடல் மற்றும் விளக்கம்- பாகம் 3

    தேவாரம்: “பித்தா பிறை சூடி” பாடல் மற்றும் விளக்கம்- பாகம் 3

    தேவாரம்: “பித்தா பிறை சூடி” பாடல் மற்றும் விளக்கம்- தொடர்ச்சி:

    பாடல் 8:

    ஏற்றார்புரம் மூன்றும்எரி
    உண்ணச்சிலை தொட்டாய்
    தேற்றாதன சொல்லித்திரி
    வேனோசெக்கர் வானீர்
    ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    ஆற்றாயுனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    விளக்கம் :

    பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாகியதற்கு மாறாக இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

    பாடல் 9:

    மழுவாள்வலன் ஏந்தீமறை
    ஓதீமங்கை பங்கா
    தொழுவார்அவர் துயர்ஆயின
    தீர்த்தல்உன தொழிலே
    செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    அழகாஉனக் காளாயினி
    அல்லேன்எனல் ஆமே.

    விளக்கம் :

    மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகேன, உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, “அடியவன் அல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

    பாடல் 10:

    காரூர்புனல் எய்திக்கரை
    கல்லித்திரைக் கையால்
    பாரூர்புகழ் எய்தித்திகழ்
    பன்மாமணி உந்திச்
    சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூர் அருட்டுறையுள்
    ஆரூரன்எம் பெருமாற்காள்
    அல்லேன்எனல் ஆமே.

    விளக்கம் :

    மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளி வந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென்பால், திருவெண்ணெய் நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் “அடியவல்லேன்” என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ.

    நாயன்மார்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் – பாகம் 2

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....