Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அறிவியல் திரைப்படம்தான் ஆனால் இதமாக உருகச்செய்கிறது கதை - 'தி ஆடம் ப்ராஜக்ட்' திரைப்பார்வை!

    அறிவியல் திரைப்படம்தான் ஆனால் இதமாக உருகச்செய்கிறது கதை – ‘தி ஆடம் ப்ராஜக்ட்’ திரைப்பார்வை!

    தி ஆடம் ப்ராஜக்ட் திரைப்பார்வை 

    பலரையும் தனது ப்ரத்யேக நடிப்பால் குணநலனால் கவர்ந்த ரியான் ரெனால்ட்ஸ் கதாயாநகனாக நடிக்க, தி ஆடம் ப்ராஜக்ட் திரைப்படத்தைப் பிரபல இயக்குநர், ஷான் லெவி அவர்கள் இயக்கியிருக்கிறார். 

    கதைக்களத்தில் அறிவியல் சார்ந்தவைகளும், உணர்வுப்பூர்வமான காட்சிகளும் வைக்கப்பட்டால் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று மட்டும் கூடிவிடுகிறது.மற்றொன்று அதிகம் எடுபடாமல் சென்றுவிடுகிறது. இப்படியான நிலைமைதான் தற்காலத்தில் குறிப்பாக இந்திய சினிமாவில் பரவலாக இருந்து வருகிறது.

    இதை முற்றிலுமாய் உடைத்தெறிந்துள்ளது, தி ஆடம் ப்ராஜக்ட். அறிவியல் களத்தில் உணர்வுகளைப் பூட்டி அதை கலைரீதி திரைப்படமாக மட்டும் அல்லாமல், வெகுஜன ரீதியான திரைப்படமாக எடுக்க முடியும், மக்களை கவர முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது, இப்படம்.

    கதைக்களம் 

    அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் முன்னேறிய காலமாக 2050 ஆம் ஆண்டு காட்டப்பட்டு, அந்த ஆண்டில் இருந்து தன் மனைவியைத் தேடி 2018 ஆம் ஆண்டுக்கு பயணப்படுகிறார், கதாநாயகன். ஆனால் காலங்கடந்து பயணப்படுதலின்போது தவறுதலாக கதாநாயகன் 2020 ஆம் ஆண்டிற்குச் சென்றுவிடுகிறார். அங்கே கதாநாயகன் தனது 12 வயது கதாப்பாத்திரத்தைச் சந்திக்கிறார்.

    இப்போது இவர்கள் இருவரும் என்ன என்ன செய்கிறார்கள்? 40 வயதான கதாநாயகன் தனது மனைவியை கண்டுபிடித்தாரா? அவரின் மனைவி ஏன் காலங்கடந்து பயணித்தார்? நேர்ந்த சிக்கல்களை எப்படி சரியாக்குகிறார்கள்? என்ற கேள்விகளுக்குப் பதிலாக இத்திரைப்படம் பயணிக்கிறது. 

    பால்ய வயது 

    இப்போது நாம் இருக்கும் வயதில் இருந்து, நம்மின் பால்ய வயதிற்கு சென்றால் நிச்சயம் அது உணர்ச்சிவசமானதாகத்தான் இருக்கும். பால்யத்தில் இருந்த பல உறவுகள் இப்போது இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு, அப்போதிருந்த நமக்கும் இப்போதிருக்கும் நமக்கும் பல வேறுபாடுகள் இருக்கும். நாமே நம்மை வித்தியாசமாக பார்க்கும் தருணமாகத்தான் நிச்சயம் அது இருக்கும். 

    the adam project

    அப்படியான தருணங்களைத் தன்னிடத்தில் கொண்ட திரைப்படமாகத்தான், இப்படம் இருக்கிறது. அம்மாவின் அன்பை புரிந்துக்கொள்ளுதல், அப்பாவின் அன்பைக்காணுதல் என மிகவும் சிலிர்க்க வைக்ககூடிய உணர்வுகள் இப்படத்தில் பல இருக்கிறது. 

    மிகச்சரியான விகிதத்தில் அறிவியலும் உணர்ச்சிவசக் காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பதுதான் இப்படத்தின் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.  

    கதாப்பாத்திரங்கள் 

    ரியான் ரெனால்ட்ஸின் கதாப்பாத்திர வடிவமைப்பு அவரின் இயல்பான தொனியை நம்மால் பார்க்கும்படியே உள்ளது. நகைச்சுவையை சரசரவென நிகழ்த்தும் காட்சிகளிலும் சரி, கண்களில் நீர் ததும்பி, அவை கண்களை விட்டு வராமல் இருக்கும் காட்சிகளிலும் சரி, ரியான் ரெனால்ட்ஸ் அசத்துகிறார்.

    ரியான் ரெனால்ட்ஸ்தான் அசத்துகிறார் என்றால், அவரின் இளைய வயதாக வருபவரும் அசத்துகிறார். சிறிது நேரமே வந்தாலும் திரைக்கதையில் மட்டுமல்லாது நம்மிடத்திலும் தங்கக்கூடிய வகையில் நடித்திருக்கிறார், மார்க் ஆலன் ருஃப்பால்லோ. 

    the adam project

    ஹல்க்-காக நடித்து பலரையும் கவர்ந்தவர், இன்று வரை பலரின் மனதிலும் ஹல்க்-காக இருக்கும் மார்க் ஆலன் ருஃப்பால்லோ இத்திரைப்படத்தில் தந்தையாக நம்மை உணர்ச்சிவசத்தோடு கவர்கிறார். மேலும், தி ஆடம் ப்ராஜக்ட் படத்தின் நடிக நடிகையர் தேர்வு சிறந்ததாகவே தெரிகிறது. முக்கிய கதாப்பாத்திரத்தில் வருவோர் அனைவரும் அப்படியே பொருந்துகிறார்கள்.

    திரைக்கதை 

    தி ஆடம் ப்ராஜக்ட் திரைப்படத்தின் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுவது, படத்தின் திரைக்கதைதான். படத்தின் கதையைக்கொண்டு திரைக்கதையை எவ்வாறு வேண்டுமானாலும் அமைத்திருக்கலாம் ஆனால் ஒரு வெகுஜன திரைப்படமாக மாற்றியிருப்பது வரவேற்கதக்கதுவே! 

    அறிவியல், தொழில்நுட்பங்கள் என்றாலே பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டத்தை நிகழ்த்தி, இப்படியாகத்தான் இப்படியான திரைப்படங்களை எடுக்க முடியும் என்ற வழக்கத்தை இப்படம் உடைத்துள்ளது. அதற்காக இத்திரைப்படத்தில் பிரம்மாண்டங்கள் இல்லை என்பது அர்த்தமல்ல.

    எடுபடாதவை 

    திரைப்படத்தில் எடுபடாதவைகள் என்று பார்த்தால், டைம் ட்ராவலின் லாஜிக்குகள் ஆங்காங்கே இடிப்பதுதான். இன்னும் சற்று விளக்கியே கூறியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. மேலும், தி ஆடம் ப்ராஜக்ட் திரைப்படம் இதற்கு முன்னம் வெளிவந்த சில டைம் ட்ராவல் திரைப்படங்களை நியாபகம் படுத்துவதாகவே இருக்கிறது. 

    the adam project

    இப்படியான அனைத்தையும் தாண்டி திரைப்படம் வெற்றிப்பெறும் தருணம் எதுவெனில், அறிவியல் திரைப்படம் பலருக்குப் புரியாது என்பதை முற்றிலுமாக மாற்றியமைத்து முழுக்க முழுக்க ஒரு வெகுஜன திரைப்படமாகவே, தி ஆடம் ப்ராஜக்ட் தன்னை முன்னிறுத்தியதுதான். எந்தவித பெரிய சூத்திரங்களும் அற்று அறிவியல் மற்றும் குடும்ப உணர்வுகளை ஒன்றாய் கொண்டுள்ள திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பவர்கள் இத்திரைப்படத்தை பார்க்கலாம். ஒரு கமர்ஷியல் திரைப்படத்தை பார்க்கவேண்டும் என்பவர்களும் தி ஆடம் ப்ராஜக்டை தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். 

    தி ஆடம் ப்ராஜக்ட் நெட்ஃப்ளிக்ஸில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....