Monday, March 18, 2024
மேலும்
  Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நாளைய தீர்ப்பு முதல் இன்றைய வாரிசு வரை… தளபதி விஜய்யின் 30 ஆண்டுக்கால திரைப்பயணம்!

  நாளைய தீர்ப்பு முதல் இன்றைய வாரிசு வரை… தளபதி விஜய்யின் 30 ஆண்டுக்கால திரைப்பயணம்!

  தளபதி என்ற ஓர் வார்த்தை ஒலித்தால் போதும் அந்த அரங்கமே அதிரும்…

  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தளபதி விஜய்யிற்கு என்று தனி பட்டாளமே இருக்கிறது. அப்படி அனைவரையும் எப்படி கவர்ந்தார்? விஜயின் ஆரம்ப கால திரைப்படங்களை அவரின் முகத்தை வைத்து ஒதுக்கினார்கள். ஆனால், இப்போது டிக்கெட் கிடைக்காதா என்று ஏங்குபவர்கள் ஏராளம். அப்படி, அவருக்கென தனி இரசிகர்கள் உண்டாக என்ன காரணம்? இதோ.. தளபதி விஜய் அவர்களின் திரைப்படங்கள் மூலமே தெரிந்துக் கொள்ளலாம். 

  விஜய் தனது சிறுவயது முதலே குழந்தை நட்சத்திர கதாபாத்திரங்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்து வந்தார். குறிப்பாக வெற்றி, குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 

  நாளைய தீர்ப்பு

  பிறகு, 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.  1993 ஆம் ஆண்டு செந்தூரப்பாண்டி திரைப்படம் வெளியானது. அதற்கடுத்து ஆண்டு வெளியான ரசிகன் திரைப்படத்தின் மூலம் பலரையும் கவரத் தொடங்கினார் விஜய். இதனை விஜய்யே குறிப்பிட்டுள்ளார். 

  இதற்கடுத்து, 1995 ஆம் ஆண்டில் தேவா, ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்தரலேக்கா என மொத்தம் 4 திரைப்படங்கள், இவர் நடிப்பில் வெளியாகின. இதன் காரணமாக, விஜயின் முகம் மக்கள் மனதில் மெல்ல மெல்ல பதிய ஆரம்பித்தது. 

  அதேபோல், 1996 ஆம் ஆண்டு கோயம்பத்தூர் மாப்பிள்ளை, பூவே உனக்காக, வசந்த வாசல், மாண்புமிகு மாணவன், செல்வா போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இதில், கோயம்பத்தூர் மாப்பிள்ளை, பூவே உனக்காக போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படங்களாக மாறின. 

  விஜய் நடிப்பில் வெளியான, காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ் மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை போன்ற திரைப்படங்கள், 1997 ஆம் ஆண்டு இவருக்கென தனி இரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கின. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் இளைஞர் பட்டாளத்தை வெகுவாக கவர்ந்தார். 

  1998-ல் விஜய்

  1998 ஆம் ஆண்டு வெளியான நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன், நிலவே வா போன்ற திரைப்படங்கள் ஓரளவு திரையில் ஓடிய நிலையில், 1999 ஆம் ஆண்டு வந்த துள்ளாத மனமும் துள்ளும், மின்சார கண்ணா போன்ற திரைப்படங்களில் மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்பவை ஆயிற்று.

  அதே ஆண்டு வெளிவந்த நெஞ்சினிலே மற்றும் என்றென்றும் போன்ற  திரைப்படங்கள் அவ்வளாக பேசப்படாவிட்டாலும் இந்த திரைப்படங்களில், இவர் ஆடி பாடிய பாடல்கள் மக்களை வெகுவாக கவர்ந்தன. இவரின் நடனத்திற்காகவே தனி இரசிகர்கள் கூடினர். அதுவும் நெஞ்சினிலே திரைப்படத்தில் வரும் தங்க நிறத்திற்கு பாடலை இன்றும் கேட்டும் பார்த்தும் வருகிறார்கள். இந்தப் பாடலில் விஜய் தனது சொந்த குரலில் பாடி அசத்தியிருப்பார். 

  2000-ங்களில் விஜய்

  இதையடுத்து, 2000 ஆண்டு வெளியான கண்ணுக்குள் நிலவு, பிரியமானவளே, குஷி திரைப்படங்கள் மூன்றுமே மெகா ஹிட் திரைப்படங்களாக அமைந்தன. குஷி திரைப்படத்தில் விஜய்யும் ஜோதிகாவும் சேர்ந்து ஆடிய நடன காட்சிகளும் சொல்லாமல் காதலை சொல்லும் சிறு சிறு சண்டைகளும் காதலர்களை அதிகம் கவர்ந்தன. இதேபோல், 2001 ஆம் ஆண்டு வெளியான ப்ரண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான் போன்ற மூன்று திரைப்படங்களும் தனித்துவமான விஜய்யின் நடிப்பை வெளிப்படுத்தின. 

  2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன், யூத், பகவதி போன்ற திரைப்படங்கள் இவரின் நடிப்பில் புது விதமான தோற்றத்தை கொடுத்தன. அதிலும், தமிழன் படத்தில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் விஜய், பொதுநல வழக்கறிஞராக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 

  இதைத்தொடர்ந்து, 2003 தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த வசீகரா, புதிய கீதை, திருமலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார். இந்த திரைப்படங்களில் இவரின் கதாபாத்திரத்தின் பெயர்களை பார்த்த எவராலும் மறக்க முடியாது. 

  2004 ஆம் ஆண்டு வெளிவந்த உதயா, கில்லி, மதுர திரைப்படங்களில் கில்லி திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதில் விஜய்யும் த்ரிஷாவும் எதார்த்தமாக நடித்திருப்பர். குறிப்பாக, வேலும் தனலட்சுமி என்ற கதாபாத்திர பெயரில் இவர்கள் நடித்த இத்திரைப்படத்தில், நடன காட்சிகளும் வசங்களும் இன்றளவும் பெயர் பெற்றவை. இன்றுவரை தொலைக்காட்சியில் இப்படம் தோன்றினால் விஜய் இரசிகர்கள் யாரும் பார்க்க மறப்பதில்லை. thalapathy vijay

  2005 ஆம் ஆண்டு வெளியான திருப்பாச்சி, சிவகாசி போன்ற குடும்ப திரைப்படங்கள் குடும்ப திரைப்பட விரும்பிகளை அதிகம் கவர்ந்தன. அதே ஆண்டில் வெளியான சச்சின் திரைப்படம் தளபதி விஜய்யின் திரைப்பட வரிசையில் முக்கிய இடத்தை எப்போதுமே பிடிக்கும். காரணம் இதில், இவரின் நடனமும் குறும்பு தனம் கலந்த ஜெனிலியாவுடனான காதலும் மக்களை அவரின் பக்கம் இழுத்தது.  குறிப்பாக இவர்களின் கதாபாத்திரப் பெயர்களான சச்சின் ஷாலினி இன்றளவும் இரசிகர்களை அடிக்கடி பார்க்க தூண்டுபவை. 

  மேலும் 2006 ஆம் ஆண்டு விஜய்யின் ஒரே ஒரு திரைப்படம் தான் வெளியானது. அது தான் ஆதி. இத்திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு சரியாக வரவேற்பை பெறவில்லை. இருப்பினும், இதற்கு அடுத்து  2007 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி மற்றும் அழகிய தமிழ் மகன் திரைப்படங்கள் மக்களிடம் மாஸான என்ட்ரியை கொடுத்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் திரைப்படங்களில் தளபதி விஜய் ஆடிய நடனங்கள் இன்றளவும் கண்ணுக்குள் நிற்பவை.

  2008 ஆம் ஆண்டு வெளிவந்த இவரின் குருவி திரைப்படம், 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வில்லு, வேட்டைக்காரன், 2010 ஆம் ஆண்டு வெளிவந்த சுறா, 2011 ஆம் ஆண்டு வெளிவந்த காவலன், வேலாயுதம் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் இவரது இரசிகர்கள் இந்தப் திரைப்படங்களை வெற்றிப்படங்களாகவே பார்த்தனர். 

  நண்பன் மற்றும் துப்பாக்கி

  இருப்பினும், 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் மற்றும் துப்பாக்கி திரைப்படங்கள் இவருக்கு மீண்டும் மெகா ஹிட் திரைப்படங்களாக அமைந்தன. இந்தத் திரைப்படங்களில் விஜய் மாறுபட்ட திரைக்கதையில் நடித்து மக்களையும் இரசிகர் பெருமக்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். அதேபோல், 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தலைவா திரைப்படத்தின் மூலம் தலைவா என்று இரசிகர்களை நடனமாடச் செய்தார். இப்படத்திற்கு அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியது. 

  2014 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜில்லா மற்றும் கத்தி திரைப்படங்கள் விஜய்யின்  நடிப்பை மென்மேலும் வெளிப்படுத்தின. இதில் இவர் பேசிய மாஸான வசனங்கள் இரசிகர்களிடையே ஆரவாரத்தை இன்னும் அதிகப்படுத்தியது. தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு வெளிவந்த புலி திரைப்படம் குடும்ப திரைப்பட இரசிகர்களையும் குழந்தைகளைக் கவர்ந்தது. 

  2016 ஆம் ஆண்டு வெளிந்த தெறி திரைப்படம் விஜய்யின் இரசிகர்கள் மத்தியில் மாஸை தெறிக்க விட்டது.  அதுமட்டுமின்றி, சமந்தாவுடன் இவரின் காதல் நடிப்பு வெகுவாக கவர்ந்தது. மேலும், 2017 ஆம் ஆண்டு வெளியான பைரவா, மெர்சல் திரைப்படங்களில் பைரவா திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் மட்டுமே பேசப்பட்டது. ஆனால், மெர்சல் திரைப்படம், மெகா ஹிட் திரைப்படமாக தளபதி விஜய்யிக்கு அமைந்தது. விஜய் அவர்கள்  இத்திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்து சிறப்பான தோற்றத்தைக் கொடுத்தார். 

  2018 ஆம் ஆண்டு வெளியான சர்கார் திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது. மேலும், அரசியல் வட்டாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசியல் வசனங்களை அதிகம் பேசியது. 

  2019, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பிகில், மாஸ்டர், பீஸ்ட் மூன்று திரைப்படங்களும் மெகா ஹிட்டை கொடுத்து மக்கள் மனதிலும் இரசிகர்கள் மனதிலும் என்றும் நிலைத்து நிற்பவையாக அமைந்தன. 

  தளபதி விஜய், கதாநாயகனாக நடித்து இந்த ஆண்டோடு 30 ஆண்டுகள் ஆகிறது என்பது விஜய் அவர்களின் பிறந்தநாளில் பேசப்பட வேண்டிய ஒன்றாகும். அதேபோல், அடுத்த ஆண்டு வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே தான் செல்கிறது இரசிகர்கள் மனதில்… 

  திரைப்படங்களால் மட்டுமல்ல.. அவரின் உணர்வுப் பூர்வமான தன்னம்பிக்கை மிக்க குட்டி கதைகளிலும் சமூகம் மீதான அக்கைறையாலும் ஒவ்வொரு நாளும் இரசிகர்கள் மனதிலும் மக்கள் மனதிலும் நிலைத்தே நிற்கிறார் தளபதி விஜய். 

  தினவாசல் சார்பாக தளபதி விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....