Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்விவசாயம்மாடி விவசாயம்; தக்காளி சாகுபடி செய்வோமா?

    மாடி விவசாயம்; தக்காளி சாகுபடி செய்வோமா?

    நம் வீட்டின் மாடியில் செடி, கொடி, பூ, காய்கனிகளை வளர்ப்பதென்பது ஒரு அலாதியான அனுபவமே!

    முன்பு எல்லாம் வீட்டைச்சுற்றியிருந்த தோட்டத்திற்கு இடம் இல்லாமல் போனதால் அதை மாடிக்கு மாற்றம் செய்துவிட்டோம். நிலம் வாங்கி பயிர் செய்யும் பிரச்சனைகள் இதில் இல்லாதது, இதை வரவேற்கத்தக்கதாக மாற்றியுள்ளது.

    மொட்டை மாடியில் தட்டுகளில் மண்தொட்டிகளை வைத்து.. அதில் செம்மண், தேங்காய் நார், ஆட்டுப் புழுக்கைகளைப் போட்டுத்தான் பயிர் செய்யலாம். தக்காளி, பப்பாளி, சிகப்புத் தண்டுக் கீரை, மிளகாய், வெள்ளரி, பீன்ஸ், பீர்க்கங்காய், பசலைக்கீரை, வெண்டை, காராமணி, புடலங்காய், அவரை, முட்டைகோஸ், முருங்கைக்காய், பாகல், கேரட், வாழை என்று அத்தனையையும் வளர்க்கலாம்.

    வீட்டுத் தோட்டத்தில் காலியாக உள்ள இடங்களில் காய்கறி வளர்ப்பது நமக்கு காய் வாங்கும் செலவை மிச்சப்படுத்தும். ரசாயன கலப்பில்லாத காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து உண்பதன் மூலம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

    வீட்டுத் தோட்டத்தில் தக்காளி சாகுபடி செய்வது எளிதானது. சரியான பருவத்தில் பயிரிட்டால் தரமான தக்காளியை அறுவடை செய்யலாம் என்கின்றனர் வேளாண்துறை அதிகாரிகள். நமக்கு தேவையான தக்காளியை நாமே நம் வீட்டின் பின்புறத்திலோ அல்லது மாடியிலோ வளர்க்கலாம். நாம் இந்தக் கட்டுரையில் சுவையான தக்காளி செடியை எப்படி வளர்க்கலாம் என்று பார்க்கலாம் .

    தக்காளியில் நாட்டுத்தக்காளி, வீரிய ரக தக்காளி இரண்டு ரகங்களையும் மாடித்தோட்டத்தில் சாகுபடி செய்யலாம். விதைகளைக் கொண்டு நாமே நாற்று தயாரித்து, நடவு செய்வது சிறந்த முறை. தக்காளிச் செடிகளில் 28-ம் நாள் முதல் பூப்பூக்கும். 45-ம் நாளில், முழுமையாகப் பூ எடுத்துவிடும். இரண்டு மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்குக் காய்ப்பு இருக்கும்.

    பயிரிடவேண்டிய பருவகாலம் :

    தக்காளி சாகுபடி பொதுவாக கோடைப் பருவத்திலும் இல்லாமல், மழைக்காலத்திலும் இல்லாமல் இடைபட்ட காலத்தில் செய்வது அதிக லாபம் தரும். மேலும், பூச்சிகளின் தாக்குதல், நோய் பாதிப்பில் இருந்து இப்பருவத்தில் எளிதாக காக்க முடியும்.

    மண்ணின் தன்மை :

    நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் மிகவம் ஏற்றது. மண்ணின் கார தன்மை 6.0-7.0 என்ற அளவில் இருக்கவேண்டும். வெப்பநிலை 210 முதல் 240 செ.கி வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். தோட்டத்தில் உள்ள மண்ணைத் தோண்டி அடித்தாள்களை அகற்ற வேண்டும். 10 நாள்கள் சிதைவு ஏற்பட நிலத்தை விட்டு விட வேண்டும். வடிகால் நன்றாக அமைவதற்கு உயரமான பாத்திகள் அமைக்க வேண்டும். தொட்டிகளில் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. மண் ஈரமாகும் அளவுக்கு அளவாகத் தண்ணீர் தெளித்தால் போதுமானது.

    உரத்தின் அளவு:

    தொழு உரம் அல்லது கம்போஸ்ட், செம்மண், மணல் ஆகியவற்றை சம அளவில் நன்றாக கலந்து நிலத்தில் இட வேண்டும். தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லத்தை 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும். பாஸ்போ பாக்டீரியாவையும் 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும். நாற்று அழுகல் நோயைக் கட்டுப்படுத்த கோதுமைத் தவிடு, மக்கிய மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து இட வேண்டும்.

    வீட்டுத்தோட்டத்தில் தொட்டியில் நடுவதாக இருந்தால் மண்புழு உரம் , கோகோபீட் , மணல் இந்த மூன்றையும் சரிவிகிதத்தில் கலந்து நடவு செய்யலாம் . தரையில் நடும்பொழுது மண்புழு உரம் கலந்து நடலாம். நடவுக்கு முன்பாகச் சிறிது வேப்பம் பிண்ணாக்கைத் தொட்டியில் தூவி கலந்து விட வேண்டும். நடவு செய்த 30-ம் நாள் கைப்பிடியளவு மண்புழு உரத்தையும், 45-ம் நாள் மீண்டும் ஒரு கைப்பிடியளவு மண்புழு உரத்தையும் இட வேண்டும்.

    தக்காளி நடவுமுறை 

    வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு 20 கிராமுக்கு 150 கிராம் என்ற அளவில் அசோஸ் பைரில்லத்தை கலக்க வேண்டும். நாற்றங்கால் பாத்தியில் 10 செ.மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக விதைக்க வேண்டும். முதலில் ஒரு பாத்தியில் நாற்று எடுத்து, ஓரளவு வளர்ந்த பிறகு பிரித்து நடலாம்.

    நடும்போது பொதுவாக மாலை வேளையில் எடுத்து நடுவது நல்லது. காலையில் நட்டால், மதியம் வெயிலுக்கு நாற்று வேர் பிடிப்பதற்குள் வாடி விடும். மாலையில் நடும் போது இரவு நிறைய நேரம் இருப்பதால், அடுத்த நாள் காலையில் செடி நன்றாக வந்துவிடும். மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

    வெயில் தேவை:

    தக்காளி செடி அவ்வளவாக உறுதியான செடி இல்லை. எளிதாக சாய்ந்து விடும். அதனால் நன்றாக வளர்ந்தவுடன் ஒவ்வொரு செடிக்கும் உறுதிக்காக கம்பு ஒன்றை சேர்த்து கட்டி விடுவது நல்லது. செடிகள் அதன் மேல் அப்படியே படர்த்து விடும். காய்களும் நீரில் பட்டு அழுகாது. தக்காளி செடிக்கு நிறைய வெயில் தேவை. நீங்கள் வீட்டுத்தோட்டத்தில் தக்காளி செடியை வளர்க்க குறைந்தது 6 மணி நேரம் சூரிய வெளிச்சம் உள்ள பகுதியை தேர்ந்தெடுங்கள். இதனால் அதிக தக்காளி பழங்கள் வருவதோடு நல்ல சுவையாகவும் இருக்கும்.

    மழை காலத்தை விட வெயில் காலத்தில் நிறைய காய்க்கும். தக்காளியில் நோய் பிரச்சனை அவ்வளவாக வராது. ரொம்ப அரிதாக சில செடிகள் வளர்ச்சி கம்மியாக, இலைகள் சுருண்டு போவதுண்டு. அதை எடுத்துவிட்டு வேறு செடி வைத்து விடலாம்.

    உங்கள் தக்காளி செடியில் தினமும் கவனிக்கவேண்டியவை
    • நல்ல தக்காளி செடிகளை தேர்வு செய்யுங்கள்.
    • வீட்டில் தக்காளி செடி நல்ல இடத்தை தேர்வு செய்யுங்கள்.
    • தக்காளி கன்று நடும்பொழுது நல்ல இயற்கை உரம் இட்டு நடவேண்டும் .
    • தக்காளி கன்றை நல்ல ஆழமாக நடுங்கள் புது வேர் நன்றாக பரவி வளரும்
    • வெப்ப நிலையை மற்றும் மண்ணை பார்த்து நீர் விடுங்கள் .
    • செடி பெரிதாக வளர்ந்தவுடன் அடியில் உள்ள இலைகளை எடுத்துவிடவேண்டும் .
    பூச்சி தாக்குதல் :

    இலையில் ஆங்காங்கே திட்டுத்திட்டாக இலைப்பேன்கள் காணப்படும். இவை தாக்கினால், பூக்கள் முதிர்ச்சி அடையும் முன்பே கருகிவிடும். இவை தக்காளியில் புள்ளி வாடல் நோயை உருவாக்கக்கூடிய வைரஸையும் பரப்புகின்றன. பாதிக்கப்பட்ட செடிகளில் இலைகள் சுருங்கிக் காணப்படும்.

    அப்படிக் காணப்படும் செடிகளை வேரோடு பறித்து அழித்துவிட வேண்டும். 25 கிராம் மீன் எண்ணெய்யை காதி சோப் கரைசலுடன் கலந்து தெளிக்கலாம். தொடர்ந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்பெண்ணெய் மருந்து என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

    தக்காளியில் முக்கால் பாகம் பழுத்தவுடன்தான் அறுவடை செய்ய வேண்டும். காயாக அறுவடை செய்யக் கூடாது. அதிக அளவு பழுக்க விடக்கூடாது. இலை மற்றும் செடியின் அனைத்து பாகங்களையும் எடுத்து அவற்றை கம்போஸ்ட் செய்ய வேண்டும். இந்த ஆலோசனைகளைப் பின்பற்றி இயற்கை வேளாண் முறைகளின்படி தக்காளி சாகுபடி செய்தால் நிச்சயம் மகசூல் கிடைக்கும்.

    அதிமுக பொதுக்குழு: நேரடி செய்திகள்.. என்னவெல்லாம் இனி நடக்கும்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....