Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'திமுக தலைவர் ஸ்டாலின் செய்வது திசை திருப்பும் முயற்சியே' - அதிமுக குற்றச்சாட்டு..

    ‘திமுக தலைவர் ஸ்டாலின் செய்வது திசை திருப்பும் முயற்சியே’ – அதிமுக குற்றச்சாட்டு..

    திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை எதிர்ப்பது தனது அரசின் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அரசின் செயலற்ற தன்மையை மக்களிடம் இருந்து திசை திருப்பும் நாடகம் என அன்பழகன் குற்றச்சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று (10-01-2023) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை உரையாகும். ஆளுநரால் வாசிக்கப்பட்ட தமிழக அரசின் உரையை நீக்கம் செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் செயல் சட்டமன்ற மரபுக்கும் சட்டமன்ற நடத்தை விதிகளுக்கும் எதிரான ஒன்றாகும்.

    ஆளுநர் என்பவர் ஆளும் மாநில அரசுக்கு அடிமை இல்லை. தனது இயலாமையை மூடி மறைத்து, தனது அரசின் செயலற்ற தன்மையை செயலுள்ளதாக மிகைப்படுத்தி, பிரிவினை அர்த்தங்களை வார்த்தை ஜாலங்களால் புகுத்தி தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் அப்படியே வாசித்துதான் ஆக வேண்டும் என்பது சர்வாதிகாரத்தனமான செயலாகும்.

    சுதந்திரம், உண்மைத்தன்மை, சமத்துவம், பிரிவினையற்ற செயல் உள்ளடக்கியது இந்திய அரசியலமைப்பாகும். அதன்படி தனக்கு உள்ள சுதந்திரத்தின் அடிப்படையில் தமிழக ஆளுநர் தனக்கு ஏற்புடையதாக இல்லாத ஒருசில வார்த்தைகளை தவிர்த்துள்ளார்.

    ஆளுநர் உரை முடிந்த பிறகு அதன் தமிழாக்கம் சட்டப்பேரவை தலைவரால் வாசிக்கப்பட்ட பிறகு அத்துடன் சபை நடவடிக்கை முடிவுக்கு வரும். ஆனால் சட்டப்பேரவை தலைவரின் தமிழ் வாசிப்பிற்கு பிறகு தமிழக முதல்வர் ஆளுநருக்கு எதிரான கண்டன தீர்மானத்தை எந்த விதியின் கீழ் கொண்டுவந்தார். இது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சட்டமன்ற நிகழ்வில் உள்ள முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

    சட்டமன்ற நடத்தை விதிகளுக்கு புறம்பாக நடைபெற்ற சபை நடவடிக்கையை கண்டித்து கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடியார் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு விழித்துக்கொண்ட ஆளுநர் அரசின் செயலை கண்டித்து வெளியேறிய போது ஆளுநரை பார்த்து ஒரு அமைச்சர் ஆளுநரே வெளியே போ என குரல் கொடுப்பது அநாகரீகத்தின் உச்சகட்டமாகும்.

    ஆளுநரை சட்டசபையில் அவமதிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் மக்கள் விரோத திமுகவின் நடவடிக்கை இருந்தது. முன்கூட்டியே தனது கூட்டணி கட்சிகளுக்கு ஆளுநரை அவமதிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரால் கொடுக்கப்பட்ட ஆணையினை திமுகவின் கூட்டணி கட்சிகள் சிறப்பாக அரங்கேற்றினர்.

    ஆளுநர் உரையை வாசிக்க துவங்கியதும் திமுகவின் அத்தனை கூட்டணி கட்சிகளும் சட்டசபையில் ஆளுநருக்கு முன்பாக எதிர்கோஷம் போட்டபோது முதல்வர் ஸ்டாலினும், சபாநாயகரும் குறைந்தபட்சம் அவர்களை சபையில் இருந்து வெளியேற உத்தரவு கூட பிறப்பிக்காமல், தாங்களாகவே தொடர்ந்து கோஷம் போட முடியாமல் வெளிநடப்பு செய்யும் வரை முதல்வரும், சபாநாயகரும் ரசித்து பார்த்து கொண்டிருந்தது நியாயமற்ற செயலாகும்.

    எதிர்கட்சியாக இருக்கும் போது ஆளும் அதிமுகவை ஒடுக்க, நசுக்க, குற்றம்சுமத்த மாதந்தோறும் ஆளுநரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து, வென்சாமரம் வீசிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆளும் கட்சியாக திமுக வந்தவுடன் ஆளுநரை எதிர்ப்பது ஏன்?

    ஆளும் அதிமுக ஆட்சியில் கிழியாத சட்டையை தானே கிழித்துக்கொண்டு கவர்னரை தேடி ஓடிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆளுநரை எதிர்ப்பது தனது அரசின் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அரசின் செயலற்ற தன்மையை மக்களிடம் இருந்து திசை திருப்பும் நாடகமாகும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

    இவ்வாறு கூறினார்.

    நீலகிரியில் கடும் பனிப்பொழிவு! உதகை உறைபனியில் உறைந்த பொதுமக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....