Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்'மகனுக்கு சுதந்திரத்தை பரிசளிக்க 30 வருடங்களுக்கும் மேலாய் போராடிய தாய்' - பேரறிவாளன் விடுதலை!

  ‘மகனுக்கு சுதந்திரத்தை பரிசளிக்க 30 வருடங்களுக்கும் மேலாய் போராடிய தாய்’ – பேரறிவாளன் விடுதலை!

  21 மே 1991.. வரப்போகும் தேர்தலையொட்டி தென்னிந்திய மாநிலங்களில் தனது பிரச்சாரத்தினை தொடர்ந்து கொண்டிருந்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி அவர்கள் அடுத்த கட்டமாக தமிழகத்திற்கு வருகை புரிகிறார்.

  சென்னையினை வந்தடைந்த ராஜிவ் காந்தி அங்கிருந்து பாதுகாப்பாக வெள்ளை நிற அம்பாசிட்டரில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி செல்கிறார். ஸ்ரீபெரும்புத்தூரிலுள்ள தேர்தல் களத்தினை அடைந்தவர், காரினை விட்டு இறங்கி மேடையினை நோக்கி செல்கிறார். 

  மேடையினை நோக்கி செல்கையில்.., அவரது தொண்டர்களும், பள்ளிக் குழந்தைகளும் கோஷங்களை எழுப்பியும் மாலைகள் அணிவித்தும் வரவேற்கின்றனர். அந்த நேரத்தில் ‘தேன்மொழி ராஜரத்தினம்’ என்ற பெண் ராஜிவ் காந்தியினை அணுகி, அவருக்கு தனது வணக்கத்தினைத் தெரிவித்தது மட்டுமல்லாது ராஜிவ் காந்தியின் காலில் விழப்போகிறார்.

  அந்தோ..!! அங்கு கூடியிருந்த ஒருவரும், அந்த ஒரு மகிழ்ச்சியான வேளையில், அந்த ஒரு இனிய பொழுதில், அப்படி ஒரு கோர சம்பவம் நிகழும் என்று எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.  

  கோர சம்பவமா?? ஆமாம்.. அது ஒரு கோர சம்பவம் தான்.. இந்திய அரசியல் சரித்திரத்தில் அழியா சம்பவமாய் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சி அன்று.. அந்த இடத்தில் நிகழ்ந்தது. 

  காலில் விழச்சென்ற தேன்மொழி ராஜரத்தினம் திடிரென்று வெடித்துச் சிதறுகிறார். பிரதமர் ராஜிவ் காந்தி உட்பட ஏராளமானோர் சதைத் துணுக்குகளாய் சிதறுகின்றனர். சற்று நேரத்திற்கு முன்னர் கரகோஷங்களினாலும், வாழ்த்து ஒலிகளினாலும், மகிழ்ச்சிக் கூக்குரல்களாலும் நிரம்பியிருந்த அந்த இடம்.. குழப்பத்திலும், கலவர கூச்சல்களாலும், அபயக் குரல்களாலும், ரத்தக் கரைகளினாலும் சூழத்தொடங்கியது..

  சரியாக இரவு 10:10க்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தில், ஒரு குழந்தையினையும் சேர்த்து மொத்தமாக 16 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர் காயமுற்றனர். இந்த நிகழ்ச்சியானது இந்திய அரசியலின் போக்கினை மாற்றியது மட்டுமல்லாது 7 பேருடைய வாழ்க்கையினையும் மாற்றியது.

  ராஜிவ் காந்தி கொலைக்கு காரணமாய் இருந்ததாய்க் கூறி முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பியோஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரைக் கைது செய்தது இந்திய அரசு.

  கிட்டத்தட்ட 30 வருடங்களாய் சிறைவாசத்தினை அனுபவித்து வந்த இவர்களில் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்வதாய் அறிவித்துள்ளது. பேரறிவாளனுக்கு கிடைத்த இந்த விடுதலை அவ்வளவு எளிதில் கிடைத்த ஒன்று அல்ல.. 30 வருடங்கள் அவர் சிறை வாசத்தினை அனுபவித்த வேளையில்.. தனது மகனினை காப்பாற்ற 30 வருடங்களாய் அவரது அன்னை அற்புதம் அம்மாள் சிறைக்கு வெளியில் காலநேரம் கருதாது செய்த போராட்டத்தினால் கிடைத்த விடுதலை. தமிழக அரசின் பல முயற்சிகளுக்குப் பின் கிடைத்த விடுதலை.

  சிறைவாசம்..

  1991ம் ஆண்டு ஜூன் மாதம் பேரறிவாளன் கைது செய்யப்பட்ட போது அவருக்கு வயது 19. அவரது தந்தை குயில்தாசன் ஒரு கவிஞராவர்.

  வெடிகுண்டினை இயக்குவதற்காக இரண்டு 9 வோல்ட் பேட்டரியினை வாங்கிக் கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பேரறிவாளன் மின்னணுவியலில் பட்டய படிப்பு முடித்தவர்.

  1998ம் ஆண்டு பயங்கரவாதம் மற்றும் சீர்குலைவு தடுப்புச் சட்டத்தின் படி பேரறிவாளன் மற்றும் 25 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

  1999ம் ஆண்டு பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதுடன், 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

  அதே ஆண்டு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோர் சார்பாக அனுப்பப்பட்ட கருணை மனுவானது ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது.

  2000ம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை தீர்ப்பினை மாற்றியமைக்குமாறு அப்போதைய முதல்வர், மறைந்த மு.கருணாநிதி கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் இதற்காக கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

  அதே ஆண்டு நளினியின் கோரிக்கையினை ஏற்ற தமிழக ஆளுநர், மீதமுள்ள மூன்று பேரின் கருணை மனுக்களையும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

  2006ம் ஆண்டு பேரறிவாளனின் சுயசரிதை வெளியிடப்படுகிறது. இந்த புத்தகமானது அவர் எப்படி இந்த வழக்கில் மாட்டினார் என்பதைப் பற்றி கூறுகிறது.

  2011ம் ஆண்டு அப்போதைய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில்  மூன்று பேரின் கருணை மனுவினையும் நிராகத்தார்.

  2011ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தூக்கிலிட இருந்த நிலையில், அப்போதைய தமிழக முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதா அவர்கள் தூக்கு தண்டனையினை நீக்கக்கோரி கோரிக்கை ஒன்றினை வைத்தார்.

  2013ம் ஆண்டு புலனாய்வுத் துறை அலுவலர் வீ தியாகராஜன் என்பவர், பேரறிவாளன் தான் வாங்கிய பேட்டரிதான் வெடிகுண்டுக்கு பயன்படுத்தப் பட்டது என ஒரு போதும் கூறியதில்லை என்று கூறினார்.

  2014ம் ஆண்டு உச்சநீதி மன்றம், பேரறிவாளனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

  2015ம் ஆண்டு சட்டம் 161ன் படி தனக்கு விடுதலை அளிக்கும் படி ஒரு கருணை மனுவினை தமிழக ஆளுநருக்கு அனுப்பினார். அவரிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில், உச்ச நீதிமன்றத்தினை நாடினார்.

  2017ம் ஆண்டு முதல் முறையாக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. அவரது தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால், பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்தது.

  2018ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி 7 பேரையும் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தார்.

  ஜனவரி 2021 கவர்னரின் மிகுதியான தாமதத்திற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதி மன்றம் மேலும் காலம் தாழ்த்தாமல் முடிவு எடுக்கும் படி கேட்டுக் கொண்டது.

  மே 2021 பேரறிவாளன் மீண்டும் பரோலில் வெளிவந்தார். புதிய திமுக அரசு பரோலினை நீடிக்க கோரிக்கை விடுத்தது.

  மார்ச் 9, 2022 பேரறிவாளனுக்கு நிபந்தனையற்ற பெயில் கிடைத்தது.

  மே 11, 2022 உச்ச நீதிமன்றம் தனது விசாரணையினை முடித்துக்கொண்டது.

  மே 18, 2022 பேரறிவாளனுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. 142 வது சட்டத்தின் படி பேரறிவாளனுக்கு விடுதலை அளிக்கப்படுவதாய் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

  பேரறிவாளனின் தாய்..

  ‘செங்கல்பட்டு சிறைச்சாலையில் ஒரு பெரிய ஜன்னலுக்கு அருகில் பேரறிவாளன் நிறுத்தப்படுவார். ஜன்னலுக்கு மறு பக்கத்தில் நான் நின்றிருப்பேன். அந்த ஜன்னல் என்னை விட உயரமான இடத்தில் இருக்கும். மிகவும் சிரமப்பட்டே அவனைப் பார்க்க முடியும்.’

  ‘சேலம் ஜெயிலில், எங்களுக்கு இடையில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருக்கும். நாங்கள் கத்தி கத்தி தான் பேச முடியும். பூந்தமல்லி சிறைச்சாலையில் கண்ணாடி தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு தொலைபேசியின் மூலம் மட்டுமே நாங்கள் தொடர்பு கொள்ள முடியும். சில நாட்களில் அவையும் வேலை செய்யாது. காவலர்களிடம் சொன்ன பிறகு சிறிய கதவு சந்தின் மூலம் பேச அனுமதித்தனர். அதன் மூலமாகவே வழக்கறிஞரும் பேரறிவாளனிடம் பேசுவார்.’ இவையெல்லாம் அற்புதம்மாள் பேரறிவாளனைச் சந்தித்த பொழுது நடந்தவையாக கூறியவை.   

  ‘நீங்கள் ஜெயிலுக்குச் சென்று எனது மகனைப் பற்றி அந்த அலுவலர்களிடம் விசாரியுங்கள்; அவள்கள் அவனைப் பற்றிய நல்ல விடயங்களை மட்டுமே கூறுவார்.’ என்று தனது மகனினைப் பற்றி பெருமையாய்க் கூறவும் அவர் தவறுவதில்லை.

  ‘அவன் கட்டாயம் விடுதலையாக வேண்டும்; சிறைவாசம் என்பது மக்களைக் துன்புறுத்துவதற்காக கட்டப்பட்டது அல்ல; நல்ல மனிதர்களாக வெளியில் வருவதற்கு’ என்றும் கூறியுள்ளார்.

  பேரறிவாளனின் தாய், தமிழக அரசு மற்றும் எண்ணற்ற மக்களின் பிரார்த்தனைகள் என்று பேரறிவாளனுக்காக துணை நின்ற நிலையில்.. 30 வருடங்கள் கழித்து இன்று அவர் விடுதலையாகியுள்ளார். 19 வயதில் சிறைக்குச் சென்ற பேரறிவாளனுக்கு இப்போது 50 வயதாகிறது.

  விடுதலையாகி வெளிவரும் பேரறிவாளன் நெகிழ்ந்து போயுள்ளார். தன்னுடன் துணையாய் நின்ற தனது அன்னைக்கும், தமிழக அரசிற்கும், தமிழக மக்களுக்கும் நன்றி கூறியுள்ளார். இறுதியாக ஒரு அன்னையின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.. வென்றுள்ளது.

  தமிழர்கள் – சிங்களர்கள் இணைந்து அஞ்சலி; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....