Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியர்கள் பசியால் சாகும் அவலம்- உச்சநீதிமன்றம்

    இந்தியர்கள் பசியால் சாகும் அவலம்- உச்சநீதிமன்றம்

    இந்திய நாட்டில் வளர்ச்சி ஏற்பட்ட பிறகும் உணவு கிடைக்காமல் மக்கள் பசியால் உயிரிழப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

    உச்சநீதிமன்றத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்த வழக்கு கடந்த 2020-ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஜூலை 20 அன்று நடைபெற்ற விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்துள்ளதாவது: 

    இந்தியாவில் ஒருவர் கூட பசியால் உயிரிழக்கக் கூடாது என்பது தான் நோக்கம். ஆனால், துர்திஷ்டவசமாக நாட்டில் வளர்ச்சி ஏற்பட்ட பிறகும் நாட்டுமக்களில் சிலர் உணவு கிடைக்காமல் பசியால் உயிரிழக்கின்றனர்.

    கிராமத்தில் வசிக்கும் மக்கள் பசி தெரியாமல் தூங்குவதற்காக, தங்கள் வயிற்றை இறுக்கமாக கட்டிக் கொள்கிறார்கள். உணவுப் பொருள்களை வாங்க காசு இல்லாமல் சிறியவர்களும் பெரியவர்களும் இதுபோன்று செய்து கொள்கிறார்கள். 

    இவ்வாறு, அவர் கூறினார். 

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள், “நாட்டின் வளர்ச்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அப்படி இருக்கையில், அவர்களின் உரிமைகளை மறுக்கக் கூடாது. அவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் திட்டங்கள் சரியாக சென்றடைய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 

    விவசாயிகளுக்கு அடுத்தப்படியாக புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களுக்கு படிப்பறிவு இல்லாததால், அரசு திட்டங்களை எப்படி பெறுவது என தெரிந்திருக்காது. அதனால் அவர்களுக்கு மாநில அரசுகள் உதவ வேண்டும்” என தெரிவித்தனர். 

    அப்போது மத்திய அரசின் சார்பில் வாதாடிய கூடுதல் வழக்குரைஞர் ஐஸ்வர்யா பாட்டீ, “கடந்த ஜூலை 11 வரையில், நாடு முழுவதும் 27.95 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்கள் அல்லது புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளதாக மாநில அரசுகள் மத்திய அரசின் வலைதளத்தில் பதிவிட்டுள்ளன. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. 

    மாநில அரசுகள் கோரும் நியாய விலைக்கடையில் விநியோகிக்க கூடுதல் உணவு தானியங்கள் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தேவை இருப்பின், மாநில அரசுகள் இந்திய உணவு நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்துக் கொள்ளலாம். 

    பிரதமரின் ஏழைகளுக்கான நலத் திட்டத்தின் கீழ் வழங்கபப்டும் உணவு தானியங்கள் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றார். 

    அப்போது குறுக்கிட்டு பேசிய சமூக ஆர்வலரும், மூத்த வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷன், “மத்திய அரசு, மாநிலங்களை சந்தை விலைக்கு உணவு தானியங்களை கொள்முதல் செய்ய சொல்கிறது. பெரும்பாலான தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டைகள் இல்லாததால், அவர்களுக்கு பொருள்கள் கிடைப்பதில்லை. 

    கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மத்திய அரசு உணவு தானியங்களை வழங்கி வருகிறது.

    சுமார் 15 சதவீதம் பேர் குடும்ப அட்டை பெற தகுதி பெற்றுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு நியாய விலைக்கடை பொருள்கள் மறுக்கப்படுகிறது” என வாதம் செய்தார்.  

    இதற்கு பதிலளித்த நீதிபதிகள், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு  நடத்தப்படவில்லை என்பதற்காக ஏழைகளுக்கு நியாய விலைக்கடை பொருள்கள் வழங்காமல் இருக்கக் கூடாது. அவர்களை சகோதர சகோதரிகளாக கருத வேண்டும்.  

    புலம்பெயர் தொழிலாளர்களாக பதிவு பெற்று குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும்  நியாய விலைக்கடைகளில் பொருள்கள் வழங்குவதற்கான தீர்வை மத்திய அரசு கண்டறிய வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்து நீதிபதிகள் இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். 

    நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா இல்லையா?- உயர்நீதிமன்றம் கேள்வி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....