வடிவேலு நடிப்பில் உருவாகிவரும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளது.
நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்து உருவாகிவரும் திரைப்படம்தான், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. சுராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இத்திரைப்படம் உருவாகுவதாக அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. ஏற்கனவே, நாய் சேகர் எனும் கதாப்பாத்திரத்தில் வடிவேலு கலக்கியதை, அதனால் வயிறு வலிக்க ரசிகர்கள் சிரித்ததை எவரும் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள்.
இப்படியான நாய் சேகர் கதாப்பாத்திரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி போன்றோர் நடிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தில் வெளிவந்திருந்த போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்த நிலையில், பாடலாசிரியர் விவேக்கின் வரியிலும், வடிவேலுவின் குரலிலும் ‘அப்பத்தா’ மற்றும் ‘பணக்காரன்’ போன்ற பாடல்கள் வெளிவந்து, ரசிகர்களை கவர்ந்துவருகிறது.
இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் தொலைக்காட்சி உரிமம் குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது. ஓடிடியை பொறுத்தவரையில் நெட்ஃபிளிக்ஸ் தளமும், தொலைக்காட்சியை பொறுத்தவரையில் சன் டிவியும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை கைப்பற்றியுள்ளன.
மேலும், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திரமுகியாக மாறப்போகும் கங்கனா ரணாவத்; இணையத்தில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்