Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி வன்முறை; காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் புதிய அனுமதி

    கள்ளக்குறிச்சி வன்முறை; காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் புதிய அனுமதி

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஶ்ரீமதி உயிரிழந்த வழக்கில், வன்முறையின்போது வதந்தி பரப்பியதாக யூ டியூப் உள்ளிட்ட 63 இணையதளங்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளி விடுதி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.  

    இதைத்தொடர்ந்து, பள்ளி தரப்பில் மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார், தன் மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காணொளி ஒன்றில் தெரிவித்தார். 

    இதுகுறித்து, காவல்நிலையத்தில் ஸ்ரீமதியின் பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், கடந்த ஜூலை 17-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி உயிரிழப்புக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர், சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு இப்போராட்டம், வன்முறையாக மாறியது.  

    இதனிடையே, உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இந்த உடற்கூராய்வு அறிக்கை கடந்த 17-ம் தேதி வெளிவந்தது.

    அந்த அறிக்கையில், மாணவி ஶ்ரீமதி இறப்பதற்கு முன், அவரது உடலில் காயங்களும் அவர் அணிந்திருந்த உடைகளில் ரத்த கறைகளும் இருந்தது தெரியவந்தது. மேலும், காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும், இரத்தம் உறைந்ததாலும் மாணவி உயிரிழந்திருக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மாணவி ஶ்ரீமதியின் தந்தை மீண்டும் உடற்கூராய்வு செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 17-ம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு அவசர வழக்காக கடந்த ஜூலை 18-ம் தேதி காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதன்பிறகு, கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் உடலை பெற்றுக் கொள்ள உத்தரவிடக் கோரிய மனு, ஜூலை 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    இந்த விசாரணையின்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலைப் பெற, ஏன் தாமதம் செய்கிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

    மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது, முதல் உடற்கூராய்வுக்கும் இரண்டாவது உடற்கூராய்வு அறிக்கைகளுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை, இரண்டாவது உடற்கூராய்வு அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை என்று தடயவியல் நிபுணர் சாந்தகுமார் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.

    இந்நிலையில், உடற்கூராய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து பெற்றோர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மாணவியின் இரண்டு உடற்கூராய்வு அறிக்கைகளையும் மூன்று மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதிஷ்குமார் முன்னிலையில் நேற்று (ஜுலை 29) விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி தெரிவித்ததாவது:

    உடற்கூராய்வு ஆய்வின்போது முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    இந்த வன்முறையின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யூ டியூப் இணையதளங்கள், 31 ட்விட்டர் கணக்கு, 27 முகநூல் பக்கங்களில் உள்ள பதிவுகளை நீக்கவும், முடக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. யாரையும் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. 

    இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, விரைவில் பள்ளியிலேயே வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். 

    மேலும், காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, காவல்துறை முடிவெடுக்கலாம் என தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி வன்முறை: பதில் தர மறுக்கும் டெலிகிராம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....