Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்தமிழ்நாடுசாதி விட்டு சாதி திருமணம்; தீர்ப்பு வந்த கண்ணகி மற்றும் முருகேசன் ஆணவக்கொலை வழக்கு!

  சாதி விட்டு சாதி திருமணம்; தீர்ப்பு வந்த கண்ணகி மற்றும் முருகேசன் ஆணவக்கொலை வழக்கு!

  விருதாச்சலம் அருகே சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொண்ட கண்ணகி மற்றும் முருகேசன் தம்பதி, கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் நாள், உறவினர்களால் ஆணவக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் கண்ணகியின் அண்ணனான மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ஆயுள் தண்டனையாக குறைத்தும், இரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகிய இருவரை விடுதலை செய்தும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குப்பநத்தம் புதுக்காலனியில் வசித்த சாமிகண்ணு என்பவரின் மகன் முருகேசன். தலித் சமூகத்தைச் சார்ந்த முருகேசன், அதே பகுதியில் வசித்து வந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகியை காதலித்தார். இதனை அடுத்து இருவரும் கடந்த 2003 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

  விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில், கண்ணகியை தங்க வைத்த முருகேசன், வண்ணாங்குடிகாட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார். காணாமல் போன கண்ணகியை தேடிய அவரது உறவினர்களுக்கு அப்போது தான், காதல் விவகாரம் தெரிய வந்தது. இதனையடுத்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8 ஆம் தேதி முருகேசன் மற்றும் கண்ணகியை அழைத்து வந்தனர். இருவரையும் அருகில் இருந்த மயானத்துக்கு கூட்டிச் சென்று, மூக்கு மற்றும் காது வழியாக விஷத்தை ஊற்றி அவர்களை கொலை செய்தனர். பிறகு இருவரின் சடலங்களையும் தனித்தனியாக எரித்தனர்.

  கொலை வழக்கு

  இந்த கொலை வழக்கு நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. பிறகு, 2004 ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. பிறகு, சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், 15 நபர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், கடலூர் சிறப்பு நீதிமன்றம் கண்ணகி – முருகேசன் கொலை வழக்கில் 13 நபர்கள் குற்றவாளிகள் என கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது.

  கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனையை உறுதிப்படுத்த, வழக்கை கடலூர் நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியது. அதேபோல கடலூர் நீதிமன்றம் அளித்த தண்டனையை இரத்து செய்யக் கோரி, 13 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

  மேல்முறையீடு மனுக்களை நீதிபதிகளான பி.என்.பிரகாஷ் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில், முதலில் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதியப்பட்டது. பிறகு, கொலை வழக்காக பதியப்பட்டது என்றும், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் ஏதும் இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் பட்டியலினத்தவர்கள் என்பதால், இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டம் பொருந்தாது என்றும் வாதிடப்பட்டது.

  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதில் கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும், கண்ணகியின் தந்தை துரைசாமி, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், அப்போதைய காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

  துரைசாமியின் உறவினர்களான ரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகிய இருவரையும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், அப்போது உதவி ஆய்வாளராக இருந்த தமிழ்மாறன் மீதான ஆயுள் தண்டனையை இரத்து செய்த விட்டு, வேறு ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையையும் உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  சுற்றுச்சூழல் முன்னெச்சரிக்கை; ஏற்றுக்கொள்ளாத இந்தியா!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....