Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜி.எஸ்.டி என்றால் என்ன?- பாகம் 1

    ஜி.எஸ்.டி என்றால் என்ன?- பாகம் 1

     ஜி.எஸ்.டி என்றால் என்ன?

    வரி யார் கட்டுகிறார்கள், வரி எப்படி வசூலிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து வரிகள் நேரடி வரி, மறைமுக வரி என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

    பொதுவாக வருமானம், லாபம் அல்லது சொத்துகளின் மீது வரிகள் விதிக்கப்படுகிறது. நேரடி வரிகளுக்கு உதாரணங்களாக வருமான வரி, நகராட்சி வரி, சொத்து வரி மற்றும் செல்வவரி போன்றவற்றைக் கூறலாம்.

    இதற்கு மாறாக சரக்குகள் அல்லது சேவைகள் மீது விதிக்கப்படும் வரிகள் மறைமுக வரிகள் ஆகும்.

    இவை விற்பனையாளரால் அல்லது வாங்குபவரால் செலுத்தப்படுகின்றன. ஆனால், பெரும்பாலும் இந்த வரியை பொருள்களை விற்கும் விற்பனையாளர்கள் பொருளை வாங்குபவர்கள் மீதே சுமத்திவிடுகின்றனர்.

    மறைமுக வரிகளுக்கு உதாரணங்களாக, பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் சுங்கவரி, வர்த்தக நிறுவனம் வழங்கும் சேவை மீது விதிக்கப்படும் சேவை வரி, உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் மீது விதிக்கப்படும் கலால் வரி, விற்பனை செய்யப்படும் பொருள் மீதான விற்பனை வரி போன்றவற்றைக் கூறலாம்.

    சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) என்பது ஒரு மறைமுக வரியாகும். மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பெரும்பான்மையான மறைமுக வரிகளுக்கு மாற்றீடாக இந்த ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் இந்த ஜி.எஸ்.டி வரியானது ஜூலை 1, 2017 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை வாட், மத்திய விற்பனைவரி, கலால் வரி, சேவை வரி, செஸ்கள் என்று பலப் பெயர்களில் வசூலிக்கப்பட்டு வந்த வரிகளுக்குப் பதிலாக இனி ஜி.எஸ்.டி என்கிற ஒற்றை வரி மட்டுமே வசூலிக்கப்படும். அவ்வளவுதான்.

    இந்த ஜி.எஸ்.டி வரியில் ஒரே ஒரு சிறப்பு என்னவென்றால், முதலில் பொருளை வாங்குபவர், ஒரு குறிப்பிட்டத் தொகையை வரியாகச் செலுத்துவார். அதற்கடுத்ததாக அந்தப்பொருளை வாங்குபவர், தான் செலுத்த வேண்டிய வரித் தொகையில், முதல் நபர் செலுத்திய வரித்தொகையை வரவாக வைத்துக் கொள்ளலாம்.

    இன்புட் டாக்ஸ் க்ரெடிட் என்றால் என்ன ?

    உதாரணமாக ரவி மற்றும் முருகன் எனும் நபர்களை உதரணமாக எடுத்துக்கொள்வோம். ரவி ஒரு பொருளுக்கு வரியாக 10 ரூபாய் செலுத்துகிறார் . பின் ரவி தன் லாபத்தை வைத்து முருகனிடம் விற்கும் போது, முருகன் வரியாக 12 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். அப்போது ரவி செலுத்திய 10 ரூபாயை முருகன் தன் வரிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டு 12 ரூபாய் வரியில் வெறும் 2 ரூபாயை மட்டும் வரியாக அரசுக்குச் செலுத்தினால்போதும். இப்படி வரியை வரவு வைத்துக் கொள்வதற்குதான் இன்புட் டாக்ஸ் க்ரெடிட் (Input Tax Credit) என்று சொல்லப்படுகிறது.

    ஜி.எஸ்.டி யின் முக்கிய இரண்டு அம்சங்கள்:

    ஒவ்வொரு உற்பத்திப்பொருளுக்கும், சேவைக்கும் ஒரே வரிதான் விதிக்கப்படும்.
    இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த வரியானது மாறாமல் ஒன்று போலவே இருக்கும்.

    அதே சமயம் தற்காலிகமாக பெட்ரோலியம், மது மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியன ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு கீழ் வராது எனச் சொல்லப்படுகிறது. இவை முந்தைய வரி விதிப்பு முறைக்குக் கீழேயே தொடர்ந்து இருக்கும். சுங்க வரிகள் தொடரும்.

    ஆனால் அவை ஜி.எஸ்.டியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும். அதே போன்று நகராட்சி, கிராமப்பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் வரிகளுக்கும் ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய சில விலக்குகள் தவிர, இதற்கு முன்பு நடைமுறையில் இருந்து வரும் மறைமுக வரிகள் அனைத்தும் ஜி.எஸ்.டியால் பதிலீடு செய்யப்பட உள்ளன. ஜி.எஸ்.டி யின் கீழ் உள்ளடக்கப்படக்கூடிய முக்கியமான மறைமுக வரிகளாக, கலால் வரி, சேவை வரி, சிறப்புக் கூடுதல் சுங்கவரி, மாநில வாட் வரி, மாநில விற்பனை வரி, கேளிக்கை வரி, நுழைவு வரி மற்றும் சொகுசு வரி உள்ளது.

    ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்படுவதால் பாதிப்பு அடையக் கூடிய மூன்று முக்கிய பங்குதாரர்கள் யார் யார் என்றால்;

    நுகர்வோர்

    அரசாங்கங்கள்

    வர்த்தகர்கள்.

    முந்தைய வரி அமைப்பில் இருந்து ஜி.எஸ்.டி எவ்வாறு வித்தியாசப்படுகின்றது?

    ஒரு நுகர்வோர் தனது சொந்தப் பயன்பாட்டுக்காக ஒரு குறிப்பிட்ட சரக்கு சேவையை வாங்குவதற்கு முன்பு, அந்தச் சரக்கானது உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பல படிநிலைகளைக் கடந்து வருகின்றது.

    அந்தப் பயணத்தில் அந்தச் சரக்கு மீது பல படிநிலைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மறைமுக வரிகள் விதிக்கப்படுகின்றன. இதில் சில வரிகளை மத்திய அரசானது விதிக்கின்றது. சில வரிகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வசூலிக்கின்றன.

    உதாரணமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு டி.வி. பெட்டிக்கு அது தொழிற்சாலையை விட்டு வெளியில் போகும் போது கலால் வரி விதிக்கப்படுகிறது.

    இந்த டி.வி.யைத் தயாரிப்பதில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உபரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தால் அந்தப் பாகங்கள் மீது சுங்க வரி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    உற்பத்தியாளரிடம் இருந்து மொத்த விற்பனையாளருக்கு டி.வி பெட்டி செல்லும் அடுத்தகட்டப் பயணத்தில் விற்பனை வரியானது வருகின்றது. பிறகு கடைசியாக மொத்த விற்பனையாளரிடம் இருந்து சில்லறை விற்பனையாளருக்கு டி.வி பெட்டி போகும் போது வாட் வரியானது வசூலிக்கப்படுகிறது.

    இந்த வரி விதிப்பு நிலைமை சரக்குகள் மாநிலம் விட்டு மாநிலம் போகும் போது மேலும் சிக்கலாகின்றது. இவ்வாறு வேறு மாநிலத்துக்குச் செல்லும் போது மத்திய விற்பனை வரி வசூலிக்கப்படுகின்றது.

    அதே சமயம் மாநிலத்துக்கு மாநிலம் வரி விகிதமும் வேறுபடுகின்றது. உதாரணமாக ஜி.எஸ்.டிக்கு முன்பு மராட்டிய மாநிலத்தில் மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட் வரி) 12.5% என இருந்தது. இதே வரி குஜராத்தில் 15% என இருந்தது. பல தருணங்களில், குறிப்பிட்ட சில பொருள்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்த அல்லது ஊக்கத்தொகையைக் குறைக்க சில வரிகள் விதிக்கப்படுகின்றன. சொகுசு வரி அல்லது போதை தரும் பொருள்கள் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

    இவ்வாறு பல படிநிலைகளில் விதிக்கப்படும் வரிகள் மற்றும் வரி விதிக்கப்படும் பல படிநிலைகள் இரண்டும் சேர்ந்து இரு பிரச்சனைகளை உருவாக்குகின்றன – முதலாவது, வரி செலுத்துபவர்கள் வரி விதிப்புக்கு ஏற்ப இசைந்து நடப்பதை சிரமத்துக்கு உள்ளாக்குவதோடு, வரி ஏய்ப்புக்கான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

    புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையின்படி, ஒரு குறிப்பிட்ட சரக்கு மற்றும் சேவை என்பது ஒரே ஒரு வரி விதிப்பு விகிதத்தை மட்டுமே பெற்றிருக்கும். அதுவும் இந்த வரி விகிதம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விதமாகவே இருக்கும்.

    மேலும் ஒவ்வொரு உற்பத்தியாளர் / விற்பனையாளர் / வர்த்தக நிறுவனமும் உள்ளீட்டு வரி கிரெடிட் (ஐ.டிசி.) என்றழைக்கப்படும் திட்டத்தின் பலன்களைப் பெற முடியும்.

    ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டால் காணாமல் போகும் மத்திய அரசின் மறைமுக வரிகள் :

    எக்ஸைஸ் டியூட்டி என்றழைக்கப்படும் கலால் வரிகள் (சிவிடி, எஸ்.ஏ.டி, கூடுதல் கலால் வரிகள், மத்திய விற்பனை வரி, கலால் வரிகளுக்கான செஸ்கள்), சேவை வரி, ஸ்வச் பாரத் செஸ், க்ருஷி கல்யாண் செஸ், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செஸ், செகண்டரி அண்ட் ஹயர் எஜுகேஷன் செஸ், சர்சார்ஜ் போன்றவை. மத்திய அரசின் மறைமுக வரிப் பட்டியலில் உள்ள கஸ்டம்ஸ் என்றழைக்கப்படும் சுங்க வரி ஜி.எஸ்.டியில் இணைக்கப்படவில்லை. வழக்கம் போல் சுங்க வரிகள் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

    ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டால் காணாமல் போகும் மாநில அரசின் மறைமுக வரிகள்:

    கொள்முதல் வரி, மாநில வாட் வரி, பொழுதுபோக்கு வரி, சொகுசு வரி, நுழைவு வரி (Entry Tax), விளம்பரங்களின் மேலான வரி, லாட்டரிகள் – சூதாட்டங்கள் மேலான வரிகள் மற்றும் மாநில செஸ்கள், மாநில சர்சார்ஜ்கள் போன்றவை.

    எதற்கு ஜி.எஸ்.டி – அரசு முன் வைக்கும் காரணங்கள்:

    1. ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே விலையாகக் கொண்டு வரவே ஜி.எஸ்.டி.
    2 . வரி மேல் வரி விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஜி.எஸ்.டி.
    3. இந்தியாவில் மத்திய அரசு வரி விதிகள் மற்றும் ஒவ்வொரு மாநில அரசுக்கும் ஒரு தனி வரி விதிகள் எனப் பல சட்டங்கள் இருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து ஒரே சட்டமாகக் கொண்டு வர ஜி.எஸ்.டி.
    4. இதுவரைச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி அரசுப் பதிவு செய்யப்படாமல், மிகக் குறைந்த வருமானமே வருவதாகப் பொய்க் கணக்குக் காட்டி வரி செலுத்தாமல் இருப்பவர்களை வரி செலுத்த வைக்க ஜி.எஸ்.டி.
    5. ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டதில் இருந்து, எங்கெல்லாம்  விநியோகிக்கப்பட்டது, யார் இறுதியாக வாடிக்கையாளரிடம் விற்றார் என்பது வரையான முழு வணிகப் பயணத்தையும் (Audit Trial) கணிணிமயமாக்க ஜி.எஸ்.டி.

    இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவும்- ஜெய்சங்கர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....