Sunday, March 17, 2024
மேலும்
  Homeஆன்மிகம்நோய்களை அகற்றி உடல் ஆரோக்கியம் காக்கும் மருந்தீஸ்வரர்!

  நோய்களை அகற்றி உடல் ஆரோக்கியம் காக்கும் மருந்தீஸ்வரர்!

  அமராவதி ஆற்றங்கரையின் மேற்கில் வயல்களும் மருத மரங்களும் சூழ்ந்த பேரமைதி தவழும் கடத்தூரில் கோமதியம்பாள் உடனமர் அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வூர், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தினைச் சேர்ந்ததாகும்.

  மருத மரங்கள் அடர்ந்த இவ்வனத்தில் சுயம்புவாக எழுந்தருளியதால், இத்தலத்து இறைவனின் திருநாமம் ‘கரைவழி நாட்டுக் கடற்றூர் ஆன இராசராச நல்லூர் ஆளுடையார் திருமருதுடையார்’ என இக்கோயில் கல்வெட்டுகள் வாயிலாக அறியவருகிறது. காலப்போக்கில் மருதீசர் என அழைக்கப்படலானார்.

  தலவரலாறு:

  இவர் மருந்தீஸ்வரர் என அழைக்கப்படுவதற்கும் தலவரலாறு உள்ளது. ஆயினும் அர்ச்சுனேஸ்வரர் என குறிப்பிடப்படுவதே தற்போது வழக்கத்தில் உள்ளது. மகாபாரதத்தில், அர்ஜுனன் தன் உறவினனை வெல்ல, சிவபெருமானிடம் இருந்த பெரும் சக்தி மிக்க பாசுபத அஸ்திரத்தைப் பெறவேண்டி கடும் தவம் இயற்றியதும், அந்த தவப்பயனால், தொடுத்த உடன் மழைபோல அம்புகளைப் பொழியும் பாசுபத அஸ்திரத்தைப் பெற்றதும் இடம் பெற்றுள்ளது. அர்ச்சுனனுக்கும், இறைவனுக்கும் இடையே மலர்ந்த பக்தி என்னும் உறவு தொடர்கதையாக பல யுகங்கள் கழிந்தும் தொடர்கின்றது.

  அர்ஜுனனைப் பாராட்டி சிவன் கருணை பொங்க உய்வித்தாலும், அவனுக்கு அந்தப் பிறவியில் முத்தி சித்திக்காது என அருளிவிட்டார். எனவே, நாம் இறைவனை வேண்டும்பொழுது தப்பித்தவறிகூட மற்றவருக்கு தீங்கிழைக்க பலம் வேண்டி வேண்டக்கூடாது என்பது புரிகிறது. நீதிதேவனுக்கும் தேவனான சிவபெருமான் நியாயமான தீர்ப்பையே வழங்கியருளுவார். ஆக அர்ஜுனன் பெற்றது வரமா? தண்டனையா? யுகங்கள் ஓடின.

  கலியுகத்தில் கி.பி.5வது நூற்றாண்டில், காளஹஸ்தி மலையை ஆண்ட வேடர்குல அரசனுக்கு மகனாக அர்ஜுனன் பிறப்பெடுத்தான். காளஹஸ்திமலை இறைவியான ஞானப்பூங்கோதையின் அருளால் ஞானம் பெற்று, மலையில் உறையும் குடுமித் தேவர்மேல் பிள்ளைப் பருவத்திலிருந்தே பக்தி உற்று, தன்வழி, தனி வழியில் வழிபாடு இயற்றி வந்தான்.

  தனது பதினாறாவது வயதில், இறைவன் தன்னை சோதித்த விதத்தில், தன் கண்ணை பறித்து இறைவனுக்கு அப்பி, அடுத்த கண்ணையும், பறித்து, குருதி பெருக்கெடுத்த இறைவனின் மற்றோர் கண்ணுக்குப் பதிலாக அப்ப நினைத்தபொழுது, தன் திருக்கரங்களால் அவனைத் தீண்டித் தடுத்ததுடன், ”நில்லு கண்ணப்ப! நீ மிகவும் நல்லனை” (நல்லவன்)” என திருவாய் மலர்ந்தருளி முக்தி தன்னை அவனுக்கு சித்திக்க வைத்தார் இறைவன்.

  அர்ஜுனன், கண்ணப்ப நாயனாராக, அயல் அறியா அன்பராக, 63 நாயன்மார்களில் ஒருவராக இடம்பெற்று வழிபாட்டிற்கு உரியவராக மாறினான். இத்தகைய பக்தி மேலீட்டால், இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்து, சுயம்பு லிங்கத்தை வழிபட்டு வரம் பெற்று, தனக்கும், இத்தல இறைவனுக்கும் ஏற்பட்ட பந்தம் தன்னை, கால காலத்திற்கும், தன் பெயரை இச்சுயம்பு லிங்கத்திற்குச் சூட்டி நீடித்து நிலைக்க வைத்ததும், இறைவனும், தனது அன்பன் பெயரிலேயே இன்றுவரை தன்னை அறிவித்துக்கொள்வதும் இத்தலத்தின் தலையாய மகிமையாக அமைகின்றது. இச்சுயம்பு லிங்கம், கொங்கு நாட்டில் உள்ள சுயம்பு லிங்கத் திருமேனிகளிலேயே அதிக உயரமானது.

  கல்வெட்டு கருவூலம்:

  இத்திருக்கோயிலில் 73 கல்வெட்டு சாசனங்கள் உள்ளதால் ‘கல்வெட்டு கருவூலம்’ என்னும் பெரும் சிறப்பும் வாய்க்கப் பெற்றுள்ளது. இக்கல்வெட்டுகள் வாயிலாகக் கடந்த காலத்தை மட்டுமல்லாது இத்தல இறைவன் எண்ணற்றவர்களின் இதயத்திலும் கோயில் கொண்டிருந்ததையும் அறிவிக்கின்றது. ஒரு மொட்டு, தன் இதழ்களை ஒவ்வொன்றாக விரித்து மனம் கவர் வண்ணத்துடனும், சுகம் தரும் சுகந்தத்துடனும் மலர்வதுபோல் இத்திருக்கோயில் கருவறை, நிலவறை (சுரங்கப்பாதை) அர்த்த மண்டபம், மகாமண்டபம், பிராகாரம், கோபுரம் என எழுந்துள்ளதைக் காண கண்களும், மனமும் நிறைகின்றன.

  நோயை தீர்த்தருளிய மருதீசர்:

  நோய் பற்றியும், பற்றிய நோயை தீர்த்தருளிய மருதீசர் பற்றியும், அரிதினும் அரிதான இக்கல்வெட்டில் உள்ள தகவல்: கி.பி.1302ல் மூன்றாம் விக்கிரம சோழ மன்னனின் 29வது ஆட்சியாண்டில், அவனது அதிகாரிகளில் ஒருவனான திரிபுவன சிங்க தேவன் என்பவனுக்கு பிரமேகம் என்னும் நீரிழிவு (சர்க்கரை) நோய் ஏற்பட்டு, கடத்தூர் மருதீசர் திருவருளால், அந்நோய் நீங்கியதால் அதற்கு நன்றி காணிக்கையாக இத்தலத்து இறைவனின் இரவு வழிபாட்டிற்குத் தேவையான அரிசிக்காக, அவனது பரம்பரைக்கே அரசால் சீதனமாக வழங்கப்பெற்ற நிலத்தையும், அதன்மீது அவனுக்கு அளிக்கப்பட்ட சகல சலுகைகள், உரிமைகளையும் அரசின் திருமுகப்படிக்கு (ஆணைப்படிக்கு) தாரைவார்த்துக் கொடுத்துள்ளான்.

  நீரிழிவு நோயினை தடுக்கும் நந்தியாவட்டை:

  உடல் உழைப்பின்றி, ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியும், இனிப்புகளை உண்டவாறும் இருந்தபடியால் விநாயகக் கடவுள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார் என்று இக்கோயில் புராணங்கள் கூறுகிறது .

  நீரிழிவினை தடுக்கும் மருத்துவ குணம் நிறைந்த அறுகம்புல், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றை விநாயகர் விரும்பி ஏற்றுக்கொள்வது அதனால்தான் என்கிறார்கள்.

  நந்தியாவட்டை மரமும் நீரிழிவு நோயினை அடக்க வல்லதாகும். தினமும் 7 கி.மீ. நடந்தாலே நீரிழிவு மருந்தின்றி நோயிலிருந்து விடுபடலாம். எனவேதான் நந்தியவட்டை கோயில் நந்தவனத்தில் இடம் பெறுவதால் கோயிலை வலம் வருதல், பாதயாத்திரை மேற்கொள்ளுதல் போன்ற நடைப்பயிற்சியை முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  திருமணத் தடைகள் நீங்க பரிகார பூஜைகள்:

  பிணி என்று ஒன்று வந்துவிட்டாலே வழிபாட்டை, வைத்தியத்தைவிட மேலாகச் செல்வதே தொன்று தொட்டு நமது இயல்பாக அமைந்துள்ளது. வைத்தியர் கைவிட்டவர்களைக்கூட இறைவன் காப்பாற்றிய இனிய நிகழ்வுகள் பல நடந்தேறியுள்ளன.

  மேலும், பிரார்த்தனைகளுக்கும், பரிகாரங்களுக்கும் பிரசித்தி மிக்க திருக்கோயிலாகவும் இது அமைந்துள்ளது. சோழ மன்னனுடைய மகளின் மாங்கல்ய தோஷத்தால் ஏற்பட்ட திருமணத் தடையினை இத்தலத்து இறைவனும், இறைவியும் தீர்த்தருளியதால் ‘தென் திருமணஞ்சேரி’ என்றும் இத்தலம் சிறப்பிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமையிலும், வளர்பிறை பஞ்சமி திதி மற்றும் பௌர்ணமி திதி அன்றும் திருமணத் தடைகள் நீங்க பரிகார பூஜைகள் நடத்தப்படுகின்றன.

  சனிதோஷம் மற்றும் நாகதோஷம் நீங்க பரிகாரங்கள்:

  இத்தலத்து இறைவன் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதால் நவகிரக சந்நதி இடம் பெறவில்லை. ஆனால், இத்தலத்து அம்பாள் இறைவனை நோக்கி கடும் தவமியற்றி இங்கு இணை சேர்ந்த திருநாள்போல ஒருநாள் தானும் இத்தலத்து இறைவன் திருதரிசனம் பெற வேண்டி, சனிபகவான் இங்கு கடும் தவம் இருந்து இறை அருள் பெற்றதால் சனிபகவானுக்கு மட்டும் தனி சந்நதி அமைந்துள்ளது. அம்பாள் சந்நதி முன்பாக பத்து அடிக்குமேல் ஒரு புற்று, சிறு குன்றளவு வளர்ந்துள்ளது. எனவே இங்கு சனிதோஷம், நாகதோஷம் முதற்கொண்டு சகல தோஷங்களும் நீங்க பிரார்த்தனையும், பரிகாரமும் செய்யப்படுகின்றன.

  ‘பத்தல பத்தல’ கமல்ஹாசனின் இந்த ‘சாகாத’ முகம் உங்களுக்குத் தெரியுமா?

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....