Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மிலாது நபியை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

    மிலாது நபியை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

    மிலாது நபியை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மிலாது நபி நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநர், முதல்வர்,  அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் மிலாது நபி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் 

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: “அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நன்னாளான மீலாதுன் நபித் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். துயர்மிகு சூழலை இளம் வயதிலேயே எதிர்கொண்டு வளர்ந்து, ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாக விளங்கினார். “கோபம், பொறாமை, புறம் பேசுதல்” ஆகியவற்றை அறவே துறந்து, உயரிய பண்புகளுடன் வாழ்வதற்கான சிந்தனைகளை மனித சமுதாயத்துக்குச் சொன்னவர். “ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்” என்ற மகத்தான மனிதநேயத்திற்குச் சொந்தக்காரர்.

    அண்ணல் நபிகளாரின் சீரிய போதனைகளும், சிறந்த அறிவுரைகளும், செழுமையான வழிகாட்டுதல்களும், ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டியவை மட்டுமின்றி, அவை பொன்போல் போற்றி, ஒழுகிப் பாதுகாக்கப்பட வேண்டியவை.

    அண்ணல் நபிகளாரின் போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும் ஆழமான பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாய மக்கள் அனைவருக்கும், எனது உளம் கனிந்த மீலாதுன் நபித் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

    இதையும் படிங்க: தொல்காப்பிய பூங்காவில் இனி இதை செய்யலாம்.. வெளிவந்த அறிவிப்பு – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

    ஆளுநர் ஆர்.என்.ரவி: “மிலாதுன் நபி திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டைச் சார்ந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைதியை உலகம் எங்கும் பரப்பிய முகமது நபி பிறந்த இத்திருநாளை நினைவுகூர்ந்து, போற்றிக் கொண்டாடி மகிழ்வோம். அனைத்து மக்களும் இத்திருநாளை மகிழ்வுடனும், பரஸ்பர அன்புடனும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

    தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: “நல்ல பல நெறிகளை போதித்து மானுடத்துடன், சேவை மனப்பான்மைக்கு நல்வழிகாட்டி மகத்தான போதனைகளை அருளிய மாமனிதர் நபிகள் நாயகம் அவதரித்த திருநாளில் உலகமெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு மிலாது நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”

    பாமக நிறுவனர் ராமதாஸ்: “இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாது நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நபிகள் நாயகத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரியத் தொண்டு அவர் வழி நடப்பதுதான். இன்னா செய்தாருக்கும் நன்னயமே செய்து விடுங்கள்; அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்; இருப்பதில் ஒரு பங்கை இல்லாதவர்களுக்கு கொடுத்து இன்பம் தேடுங்கள் என்பது தான் நபிகள் காட்டும் வழியாகும். 

    உலகில் மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவற்றை எளிதாக ஏற்படுத்த நபிகள் காட்டும் வழி தான் உன்னத வழியாகும். இந்த உண்மையை உணர்ந்து உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று நபிகள் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.”

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: “அற்புதங்களை நிகழ்த்திய இஸ்லாமியர்களின் வழிகாட்டி முகமது நபியின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நபிகள் நாயகம் போதித்த பாடங்களை கடைபிடிப்பது தான் அவருக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும். அதன்படி அவரது போதனைகளை பின்பற்றி ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதி, வளம், மகிழ்ச்சி, ஒற்றுமை நிறைந்ததாக மாற்ற இந்நாளில் உறுதியேற்போம்.”

    காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: “இறை தூதரான நபிகள் நாயகம் தனது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய வரலாற்றுப் பெருமை மிக்கவர். நபிகள் நாயகம் பிறந்தநாள், மீலாது நபி திருநாளாக உலகம் முழுவதும் வாழ்கிற இஸ்லாமிய பெருமக்களால் மிகுந்த பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. 

    நபிகள் நாயகம் போதனைகளின்படி, அனைத்து மக்களிடையேயும் அன்பையும், ஏழை, எளிய மக்களிடம் பரிவையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் வகுப்புவாத சக்திகளின் பிளவு அரசியலை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகம் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.”

    அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: “அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாது நபியாகக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இறை தூதராக அவதரித்து, நம்பிய மக்களைக் காத்து நின்று, நல்லிணக்கத்தைப் போற்றி, ‘அன்பு தான் உலகில் ஆகப்பெரிய சக்தி’ என்பதை போதித்த நபி பெருமகனாரின் பிறந்தநாளில் உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் அனைவரிடமும் நிலைத்து நிற்கட்டும் என வாழ்த்துகிறேன்.”

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....