Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஎல்லை மீறினார்களா இந்திய நீதிபதிகள்?

    எல்லை மீறினார்களா இந்திய நீதிபதிகள்?

    நுபுர் சர்மா மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள், நீதித்துறை உரிமை மற்றும் நேர்மையை மீறுவதாகக் கூறி, முன்னாள் நீதிபதிகள் உள்ளடங்கிய குழு இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது.

    பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொலைக்காட்சியில், இறைத் தூதர் நபிகள் நாயகம் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். இவரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனால், நாட்டின் பல பகுதிகளில் இவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு பல்வேறு நாடுகளிடம் இருந்து எதிர்ப்புகள் வந்திருந்தது. இதனை அடுத்து, பாஜக இவரை கட்சியிலிருந்து நீக்கியது.

    அதனை தொடர்ந்து, நுபுர் ஷர்மா மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட அத்தனை வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 1-ம் தேதி நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜே பி பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், நூபுர் சர்மா மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள், லட்சுமண ரேகையை மீறியுள்ளதாக கூறி, 15 முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய “அக்கறையுள்ள குடிமக்கள்” குழு இந்திய தலைமை நீதிபதிக்கு ஜூலை 4ம் தேதி ஒரு கடிதம் எழுதியது.

    அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :

    அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் அனைத்து நிறுவனங்களும் இயங்கும் வரை, அந்நாட்டின் ஜனநாயகமானது நிலைத்து நிற்கும் என ஜனநாயகத்தின் மீது அக்கறையுள்ள குடிமக்களாகிய நாங்கள் நம்புகிறோம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் சமீபத்தில் கூறிய கருத்துகள் இந்திய அரசியலமைப்பின் லட்சுமண ரேகையை மீறியுள்ளது. இதன் காரணமாக ஒரு திறந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

    1. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜே.பி.பார்டிவாலா ஆகியோர் நுபுர் சர்மா வழக்கு தொடர்பாக கூறிய துரதிர்ஷ்டவசமான மற்றும் இதற்கு முன் கூறியிராத கருத்துகள், இந்தியா முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துகள் அனைத்து செய்தி நிறுவனங்களிலும் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. இது நீதிமன்றம் சார்ந்த நெறிமுறைகளுடன் ஒத்து போகவில்லை. நீதிமன்ற ஆணையில் வராத இந்த கருத்துகள், எந்த விதத்திலும் நீதிமன்ற நேர்மையையும், மரியாதையையும் பின்பற்றவில்லை. இத்தகைய மூர்க்கத்தனமான அத்துமீறல்கள் நீதித்துறை வரலாற்றில் மிகவும் மோசமான நிகழ்வு.
    2. தனக்கு நியாயம் வழங்க நீதிமன்றத்தால் மட்டுமே முடியும் என நுபுர் சர்மா நம்பியதால், அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு தொடர்பான நீதிபதிகளின் பார்வையானது, சட்ட ரீதியாக மனுவில் தெரிவிக்கப்பட்ட விவரங்களுடன் ஒத்துப்போகவில்லை. மேலும், நீதி வழங்குவதற்கான அனைத்து நியதிகளும் மீறப்பட்டுள்ளது. அவர் சட்டப்படி நீதியை அணுகுவதற்கு மறுக்கப்பட்டுள்ளார். இந்த செயல்முறையில் இந்திய அரசியலமைப்பின் ஆன்மா மீதும்,  முன்னுரை மீதும், சாராம்சத்தின் மீதும் சீற்றம் மிகுந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
    3. இந்த வழக்குக்கு சம்பந்தமே இல்லாத விவகாரத்தில் நுபுர் சர்மா கடுமையான குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு நுபுர் சர்மா முழு காரணம்.’ என்று நீதிபதிகள் கூறிய கருத்து எந்த விதத்திலும் தர்க்கத்தின் அடிப்படையிலானது அல்ல. நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு நுபுர் சர்மா தான் முழு காரணம் எனப் புரிந்து கொள்ளப்பட்டது, உதய்பூரில் நடந்த கொடூரமான தலைதுண்டிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் குற்றத்தின் தன்மை, இதன் மூலம் மறைக்கப்பட்டுள்ளது. “பிரபலபடுத்தும் நோக்கத்துக்காக மட்டும் நடத்தப்பட்டதாக” கூறப்படும் கருத்தானது நியாயப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது.
    4. ஒரு நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டால், அவரை கைது செய்யவேண்டும் என்கிற நீதிமன்றத்தின் பார்வையானது சட்டரீதியாக ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. நாட்டில் உள்ள பிற நிறுவனங்களிடம் அறிவிக்காமல், அதன் மீதான நிதிமன்றத்தின் பார்வை கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
    5. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள இந்த துரதிஷ்டமான கருத்துகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் நீதித்துறை வரலாற்றல் ஒரு மோசமான நிகழ்வாகவும், அழிக்கமுடியாத தழும்பாகவும் மாறிவிட்டது.  இந்த வகையான கருத்துகள் ஜனநாயகத்தின் மதிப்புக்கும் பாதுகாப்புக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு முன்பாக, அவசரமாகச் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
    6. நீதிமன்றத்தின் கருத்துகளால் பெருமளவு உணர்ச்சிகள் ஏற்பட்டுள்ளது. தற்போது விசாரணையில் இருக்கும் காட்டுமிராண்டித்தமான, கொடுரமான முறையில் நடந்த உதய்பூர் தலை துண்டிப்பு சம்பவத்தை நீர்த்து போகும் வகையில் நீதிமன்றத்தின் கருத்துகள் உள்ளது.
    7. நீதிமன்றத்தின் முன் இல்லாத பிரச்சனைகளுக்கு நீதிபதிகள் கூறிய கருத்துகள், இந்திய அரசியலமைப்பின் சாராம்சத்தையும், ஆன்மாவையும் சிலுவையில் அறையும் விதத்தில் அமைந்துள்ளது. விசாரணையின்றி அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது மற்றும் மனுவில் எழுப்பப்பட்ட பிரச்சனைக்கு நீதி காண மறுத்தது ஆகியவை எந்த வகையிலும் ஒரு ஜனநாயக சமூகத்தின் முகமாகாது.
    8. நீதித்துறையின் இந்த எல்லைமீறல், பகுத்தறிவு சித்தாந்தத்தை திகைக்கவைத்துள்ளது. மேலும் நுபுர் ஷர்மாவின் செல்வாக்குக்கு எதிரான கருத்துகளை பரப்புவதற்கு செய்தி நிறுவனங்களையும் கட்டவிழ்த்துள்ளது.
    9. ஒரு சட்டத்தின் ஆட்சியில், ஜனநாயகம் நிலைத்து நிற்க வேண்டும், மலர வேண்டும், நீதிக்காக அக்கறை கொண்ட மனதை அமைதிப்படுத்தும் விதத்தில் நினைவுகூறபட வேண்டும். இவை ஏதும் நடக்கவில்லையெனில், நீதிமன்றத்தின் பார்வை, கவனிக்கப்பட முடியாத அளவுக்கு தீவிரமானதாக மாறிவிடும்.
    10. உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்துகளுக்கு சம்பந்தம் இல்லாதபோதிலும், குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம் உள்ளது. முன்னமே கூறியது போல, தொலைக்காட்சியில் பேசிய கருத்துக்காக, பல்வேறு மாநிலங்களில் தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை மாற்றக்கோரி நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தை அணுகினார். ஒரே குற்றத்துக்காக பல்வேறு இடங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஒரே குற்றத்துக்காக பல முறை தண்டிப்பதை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ‘சட்டவிதி 20 (2)’ தடுக்கிறது. அரசியலமைப்பு சட்டம் பகுதி மூன்றில் வரும் சட்டவிதி 20 (article 20) ஒரு உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமை ஆகும்.  அர்னாப் கோஸ்வாமிக்கும் இந்திய ஒன்றியத்துக்கு 2020ல் நடைபெற்ற வழக்கின் போதும், டி.டி.அந்தோணிக்கும், கேரளா மாநிலத்துக்கும் நடைபெற்ற வழக்கின்போதும் ஒருவர் மீது ஒரே குற்றத்துக்காக இரண்டாவது முறை முதல் தகவல் அறிக்கை பதிய முடியாது எனவும், ஒரே குற்றத்துக்காக மீண்டும் விசாரணை நடத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
    11. மரியாதைக்குரிய உச்சநீதிமன்றம், மனுதாரரின் அடிப்படை உரிமைக்கு பாதுகாவலனாக இருக்காமல், மனுவில் கூறப்பட்ட விவரங்களை ஏற்றுக்கொள்ளாமல், மனுவை திரும்ப பெற்றுகொள்ளுமாறும், உயர்நீதிமன்றத்தை நாடுமாறும் மனுதாரரை வலியுறுத்தியுள்ளது. ஆனால் உயர்நீதிமன்றத்துக்கு, அவர் மீது பதியப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளை ஒன்று சேர்க்கும் அதிகாரம் இல்லை என்பது உச்சநீதிமன்றத்துக்கு தெரியும். நுபுர் சர்மாவின் வழக்கு ஏன் வித்தியாசமான முறையில் அணுகப்பட்டது என்பதை எவராலும் புரிந்துகொள்ள இயலவில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த அணுகுமுறையானது எந்தவிதமான பாராட்டுக்கும் தகுதியற்றது. மேலும் நீதிமன்றத்தின் புனிதத்தன்மையையும், கௌரவத்தையும் பாதிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

    இந்தக் கடிதத்தில், 15 முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள்  77 அதிகாரிகள் மற்றும் 25 ராணுவ வீரர்கள் என 117 பேர் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும், தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட மற்றொரு கடிதத்தில்,  நூபுர் ஷர்மா மீதான நீதிமன்றத்தின் கருத்துகளை நீதிபதிகள் திரும்ப பெற வேண்டும் என்று வழக்கறிஞர் எஸ் எஸ் நந்தா தலைமையிலான மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

    யார் இந்த நுபுர் சர்மா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....