Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்இந்தியாவில் புதிய வகை வைரஸ்கள் வந்து கொண்டு தான் இருக்கும், ஆனால்...- அமைச்சர் பேச்சு!

  இந்தியாவில் புதிய வகை வைரஸ்கள் வந்து கொண்டு தான் இருக்கும், ஆனால்…- அமைச்சர் பேச்சு!

  இந்தியாவில் புதிய வகை வைரஸ்கள் வந்து கொண்டு தான் இருக்கும், ஆனால் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொண்டால் எந்த வைரஸும் பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  சர்வதேச யோகா தின விழா சேலத்தில் நேற்று ஐந்து ரோடு அருகே உள்ள சோனா இயற்கை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு கல்லூரி மாணவ, மாணவியருடன் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

  இந்த யோகா பயிற்சியில் சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவியர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். இதில் சுவாசப் பயிற்சி, சர்வாங்காசனம், உத்தன்படாசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான யோகாசனங்களை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் மாணவ, மாணவியர் அரைமணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்டனர்.

  விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

  “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 75 லட்சம் பேருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சென்றிடாத மலை கிராமங்களுக்கும் மருத்துவ சேவை தற்போது தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் கிடைத்து வருகிறது. நாள்தோறும் காலை நேரங்களில் நமக்கான நேரமாக ஒதுக்கிக் கொண்டு உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

  உடற்பயிற்சி என்பதை நாள்தோறும் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். சரியான வயதில் தொடங்கும் யோகா பயிற்சி வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை தருகிறது. எனக்கு விபத்து ஏற்பட்டு உடல் முழுவதும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேகமாக ஓட முடியாது மற்றும் தரையில் அமர முடியாது என்று மருத்துவர்கள் கூறினர். அப்போது மனத்தில் தைரியத்தை ஏற்படுத்திக்கொண்டு முதலில் மெதுவாக ஓட ஆரம்பித்து , பின்னர் தான் பங்கேற்ற முதல் மாரத்தான் போட்டியிலேயே 21கிலோமீட்டர் ஓடியதாக கூறினார்.

  இதுவரை உலகம் முழுவதும் 12 நாடுகளுக்கு சென்று மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். இந்தியாவில் இதுவரை 22 மாநிலங்களில் மாரத்தான் போட்டியில் பங்கேற்று உள்ளேன். இந்தியா முழுவதும் உள்ள 36 மாநிலங்களில் 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் ஓடிய ஒரே நபர் என்ற சாதனையை புரிவேன் என்றும் நம்பிக்கை உள்ளது.

  மகப்பேறு சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சியை கட்டாயம் ஆக்கியுள்ளோம், இதன் மூலம் சுகப் பிரசவங்கள் அதிகரிக்கும். இந்தியாவில் புதிய வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கும். ஆனால் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொண்டால் எந்த வைரஸ்களும் பாதிப்பை ஏற்படுத்த முடியாது” எனக் கூறினார்.

  தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 771 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 63 ஆயிரத்து 68 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  பன்னீர் சில்லி இப்படி செய்தா, தொட்டுக்க ரொம்ப நல்லாருக்கும்…

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....