Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தேசிய போட்டிகளில் வென்ற 190 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

    தேசிய போட்டிகளில் வென்ற 190 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

    தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூபாய் 4.85 கோடி உயரிய ஊக்கத்தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை, கலைவாணர் அரங்கத்தில், இன்று (24.11.2022) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 85 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

    விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

    அந்த வகையில், இவ்வாண்டு கொலம்பியாவில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான உலக தடகள வாகையர் போட்டியில், டிரிப்பிள் ஜம்ப் பிரிவில் (Triple Jump) வெள்ளிப்பதக்கம் வென்ற திரு. டி. செல்வபிரபு, 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஒட்டப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற திரு. பரத் ஸ்ரீதர் ஆகியோருக்கு தலா 4 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 8 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;

    இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை வளைகோல்பந்து வாகையர் போட்டியில் (ASIA CUP HOCKEY CHAMPIONSHIP-2022) இந்திய அணியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் திரு. எஸ். மாரீஸ்வரன் மற்றும் திரு. எஸ். கார்த்தி ஆகியோருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;

    குஜராத்தில் 29.9.2022 முதல் 12.10.2022 வரை நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் (36th NATONAL GAMES 2022) வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 விளையாட்டு வீரர்கள் மற்றும் 112 விளையாட்டு வீராங்கனைகள், என 180 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 4 கோடியே 29 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள்;
    என தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 85 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

    இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்றுவரை 1433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.90 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்விழாவில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் செல்வி. அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் மருத்துவர் கா. ப. கார்த்திகேயன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர்கள் இராமச்சந்திரன், மரு. பொன். அசோக் சிகாமணி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஐசரி கே. கணேஷ், பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வரலாற்று வெற்றியைப் படைத்த ஸ்பெயின் மற்றும் ஜப்பான்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....