Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்

    கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்

    கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.11.2022) அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் புகழ்பெற்ற சோழப்பேரரசின் இரண்டாவது தலைநகரமான கங்கைகொண்டசோழபுரம் அமைந்துள்ளது. முதலாம் இராசராசனின் மகனும் அவரைத் தொடர்ந்து ஆட்சி செய்தவருமான முதலாம் இராசேந்திரனால் இந்நகரமானது சோழநாட்டின் தலைநகராக தோற்றுவிக்கப்பட்டது. முதலாம் இராசேந்திரன் கங்கை வரை சென்ற தனது வெற்றிகரமான பயணத்தை நினைவுகூறும் வகையில் தஞ்சாவூரிலிருந்து தலைநகரத்தை கங்கைகொண்டசோழபுரத்திற்கு மாற்றி அமைத்தார்.

    கங்கைகொண்டசோழபுரம் தலைநகராக உருவாக்கப்பட்டதையும் சோழப்பேரரசர்களின் அரசியல் தளமாக மாற்றப்பட்டதையும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் உறுதிப்படுத்துகின்றன. கங்கைகொண்டசோழபுரத்தை உருவாக்கிய முதலாம் இராசேந்திரனின் ஆட்சியின் போது, ​​ முடிகொண்டசோழன் திருமாளிகை, கங்கைகொண்டசோழன் மாளிகை, சோழகேரளன் திருமாளிகை என்ற பெயர்களில் இங்கு பெரிய அரண்மனைகள் கட்டப்பட்டிருந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

    சோழப்பேரரசின் மாமன்னன் முதலாம் இராசேந்திரனின் தலைநகரான கங்கைகொண்டசோழபுரத்தின் நகரமைப்பு மற்றும் மண்ணில் புதைந்துள்ள கட்டுமானங்களை வெளிக்கொணர்ந்து அரண்மனையின் வடிவமைப்பினை தெரிந்து கொள்வது இந்த அகழாய்வின் நோக்கமாகும்.கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள மாளிகைமேட்டில் அகழாய்வு மேற்கொண்டது.

    அதன்படி, புதையுண்ட செங்கல் கட்டுமானங்கள் இருந்ததற்கான சான்றுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. கிடைக்கப்பட்ட சான்றுகளின் மூலம் கட்டடப்பகுதிகள் செங்கற்களின் அடிப்பகுதியில் எழுப்பப்பட்டுள்ளது தெரியவருகிறது. மேலும், கிடைக்கப்பெற்ற செங்கற்கள் மற்றும் கூரை ஓடுகள் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகின்றன.

    செங்கல் கட்டுமானங்களுடன் பல்வேறு வகையான பானையோடுகள் மற்றும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உலோகப் பொருட்கள் குறிப்பாக அதிக அளவில் இரும்பு ஆணிகள், செம்பினாலான பொருட்கள், செப்புக் காசுகள், தங்கக் காப்பு, கண்ணாடி மணிகள் மற்றும் வளையல் துண்டுகள், தந்தத்தினாலான பொருட்கள், வட்டச்சில்லுகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் கெண்டி மூக்குகள் ஆகியவை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    செலடன் மற்றும் போர்சலைன் எனப்படும் சீனப்பானையோடுகளும் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இடைக்காலத்தின் தொடக்கத்தில் காணப்படுகின்றன. இவை 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் சீனாவுடன் கொண்டிருந்த வணிகத்தொடர்பை வெளிப்படுத்துகின்றன.

    கங்கைகொண்ட சோழபுரம் (மாளிகைமேடு) அகழாய்வுப் பணிகள் 2021 மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டன. மொத்தமாக, 5 அகழாய்வுக் குழிகளைக் கொண்ட 17 காற்பகுதிக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில் மொத்தம் 1003 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

    2022ஆம் ஆண்டு அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டன. மொத்தமாக, 5 அகழாய்வுக் குழிகளைக் கொண்ட 19 காற்பகுதிக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவ்வகழாய்வில் மொத்தம் 1010 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

    இந்த ஆய்வின் போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    பழங்கால பாத்திர கண்காட்சியாக மாறிய திருமண வரவேற்பு! பார்வையாளர்களை பரவசப்படுத்திய நிகழ்வு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....