Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மக்களை துன்பப்படுத்தும் திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் அறிவிப்பு...

    மக்களை துன்பப்படுத்தும் திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் அறிவிப்பு…

    உயர்த்தப்பட்டுள்ள பால் விலையைக் கண்டித்து வருகிற நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

    பச்சைக் குழந்தை முதல், முதியவர் வரை, பாமர மக்கள் எல்லாம் பரவலாக பயன்படுத்தும் அத்தியாவசியமான பால் விலை ஏற்றத்தை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

    விடியல் நேரத்தில் பால் விலையைப் பார்த்தால் கண்கள் இருட்டுகிறது. விடியலை தருகிறோம் என்று சொல்லிவிட்டு, பால் விலையை உயர்த்தி இருப்பதுதான், மக்கள் விடியலுக்குத் தரும் விலையா? தமிழக அரசின் “ஆவின்” பால் வழங்கும் நிறுவனம், அதன் நிர்வாக சீர்கேட்டினால், நஷ்டத்தில் நடத்தப்படுகிறது. 

    தமிழக அரசின் தகுதியின்மையால், கட்டிங், கமிஷன், கலெக்ஷன் போன்ற தவறான நடைமுறையால் ஏற்படும் நஷ்டத்தை மக்கள் தலையிலே சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    ஏற்கனவே வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, தண்ணீர் வரி உயர்வு, பதிவுக்கட்டண உயர்வு, கழிவுநீர் வரி உயர்வு, என்று அத்தனை வரிகளையும் உயர்த்தி விட்டு, சொன்னபடி பெட்ரோல் விலையை குறைக்காமல், எரிவாயு சிலிண்டருக்கு மானியம் தராமல், மகளிருக்கு மாதாந்திர உரிமை தொகை தராமல், நகை கடன் தள்ளுபடி செய்யாமல், கல்வி கடனை தள்ளுபடி செய்யாமல், விவசாயிகளுக்கு நன்மை செய்யாமல், ஏராளமான, ஏமாற்றங்களை மட்டுமே, எக்கச்சக்கமாக வழங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசு, பச்சிளம் குழந்தைகளுக்கு பயன்படும் பாலுக்கான விலையையும் உயர்த்தி இருப்பது, வாக்களித்த தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

    இதையும் படிங்க: விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்..! தைரியத்துடன் புரோமஷனில் களமிறங்கும் சமந்தா…

    1789ஆம் ஆண்டு, ஃபிரான்சில் மக்களும், விவசாயிகளும், உணவில்லாமல், வரி கட்டமுடியாமல் தவித்தனர். ஆனால் ஆட்சியாளர்கள் ஆனந்தக்களியாட்டத்தில் இருந்தனர். அதனால் வெடித்தது ஃபிரெஞ்ச் புரட்சி. சாப்பாட்டிற்கு ரொட்டி கூட கிடைக்காமல் மக்கள் அரண்மனை முன்பு கூடி கோஷமிட்ட போது, ‘ரொட்டி கிடைக்காவிட்டால் கேக் வாங்கி சாப்பிட வேண்டியது தானே’ என்று கூறிய அரசி அன்டாய்னாய்ட், மக்களால் ‘பற்றாக்குறைஅரசி’ (Madam deficit) என்று பட்டம் சூட்டப்பட்டாள். அராஜக ஆட்சி அகற்றப்பட்டது. மக்கள் போரட்டம் வென்றது.

    அனைவரும் அறிந்த சம்பவம். ரோம் நகரம் பற்றி எரியும் போது, நீரோ மன்னன் ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்தாராம். மக்களைப் பற்றிய கவலை இல்லாத ஆட்சிகள் மாற்றப்படும் என்பது வரலாறு. அதுபோல தமிழகத்தில் வரிகள் எல்லாம் ஏறுமுகம்.

    அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எல்லாம் ஏறுமுகம். ஆனால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் மட்டும் இறங்குமுகத்தில் இருக்கிறது. மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் திமுக ஆட்சியில், கோபாலபுரத்து கோமான்களின் சொத்துக்கள் மட்டும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    ஆளும் திமுக அரசு, கலர் கலரான வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, ஆவின் பால் பாக்கெட்களை, கலர் கலராக வேறுபடுத்தி, கண்டபடி விலையை உயர்த்தி, மக்களை துன்பப்படுத்தும் திமுக ஆட்சியை கண்டித்து, தமிழகத்தின் 1200 ஒன்றியங்களில், வரும் நவம்பர் 15ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படுகிறது.

    மக்களின் வேண்டுகோளின்படி நடத்தப்படும் இப்போராட்டத்தில், விவசாய பெருங்குடி மக்களும், தமிழகத் தாய்மார்களும், சகோதரிகளும், அனைத்து தரப்பு மக்களும், பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள். நவம்பர் மாதம் 15ஆம் தேதி அந்தந்தப் பகுதியில் நடைபெறும் போராட்டத்தில், அனைவரும் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: விண்வெளியில் குழந்தை பிறக்குமா? குரங்குகளை வைத்து சீனா போட்டுள்ள புதிய திட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....