‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்புக்கும், அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்ததை அடுத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலமாக குழுக்களை உருவாக்கி, பல்வேறு தீவிரவாத பயிற்சிகள் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்று வருவதாக என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது.
இந்தியா முழுவதும் சுமார் 15 மாநிலங்களில் 93 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது. மொத்தத்தில் இந்த சோதனையில் இதுவரையில் 8 மாநிலங்களில் இருந்து 170 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.
இதையும் படிங்க: அனுமதி மறுத்த தமிழக காவல்துறை., கொதித்தெழுந்த ஆர் எஸ் எஸ்., வரவேற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் …
இதைத்தொடர்ந்து, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பாக கைதானவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். உத்தரபிரதேசத்தில் சரத்பூர், மீரட், சியானா பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லியில் சகின்பாத் மற்றும் ஜமியா பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அதிரடி படை வீரர்களும் ஒருங்கிணைந்து சோதனை மேற்கொண்டனர்.
மேலும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவித்தது. மேலும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஊபா சட்டத்தின் கீழ் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பையும், அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்திலும் ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பு மீதான தடை அமலுக்கு வந்தது. மேலும், இந்த தடை தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.