Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅர்ச்சகர்கள் நியமனத்தில் அரசின் விதிமுறைகள் செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

    அர்ச்சகர்கள் நியமனத்தில் அரசின் விதிமுறைகள் செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

    தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசின் விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தமிழக கோயில்களில் உள்ள அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் ஆகியோரின் பணி நியமனம் மற்றும் பனி நிபந்தனைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய பணி விதிகள் கடந்த 2020ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

    இந்த பணி நியமன விதிகளின் படி, 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும், இது மட்டுமல்லாது அர்ச்சகராவதற்கு ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்திருக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

    இந்த புதிய விதிகளை எதிர்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில், ஆகம விதிகளைக் கடைபிடிக்காமல் தமிழக அரசு, கோவில்களில் அர்ச்சகர், ஓதுவார்களை நியமிக்க உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அர்ச்சகர்களின் பணிநியமனம், இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக் கூறி கடந்த 2021ம் ஆண்டு அக்டோபரில் இடைக்கால உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் தொடர்ந்து நடந்து வந்தது.

    இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில், ‘கோவில்களில் இன்னும் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலமாக அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது. அறங்காவலர்களுக்கு மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளது’ என வாதாடப்பட்டது.

    மேலும், குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில், அதை மீறி அர்ச்சகர் பயிற்சி முடித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை, கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களின் காலி இடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், ஆகம விதிகள் பயின்ற அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் அடிப்படையிலும், கோவில் செயல் அலுவலர்கள் மூலமாக அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘தமிழக கோவில்களில், அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசின் விதிகள் செல்லும். கோவில்களை பொறுத்த வரை, ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்கள், ஆகம விதிகளை பின்பற்றாத கோவில்களைக் கண்டறிவதற்கு 5 பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும். ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்.’ என உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....