Monday, March 18, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைபலரும் உருகிக்கொண்டிருக்கும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் வாழ்க்கை பாதை, உங்களுக்காக இதோ!

    பலரும் உருகிக்கொண்டிருக்கும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் வாழ்க்கை பாதை, உங்களுக்காக இதோ!

    குயின்ஸ்லாந்திலுள்ள டௌன்ஸ்வில்லே மாகாணத்தில் அந்த விபத்து நடந்தது. விபத்துக்கு உள்ளான காரில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் அவரது இரண்டு வளர்ப்பு நாய்களைத் தவிர வேறு யாரும் இல்லை. அந்த விபத்து நடந்தப்பின் நேரில் பார்த்த மக்கள் சைமண்ட்ஸின் காரானது தலைகீழாகக் கிடந்ததாகவும், காரின் என்ஜின் மற்றும் ரேடியோ இயக்கத்திலேயே இருந்ததாகவும் கூறியுள்ளனர். 

    அவசர சிகிச்சையாளர்கள் தங்களால் இயன்ற முதலுதவிகளைக் கொடுத்த போதிலும் விபத்தினால் ஏற்பட்ட காயங்களினால் மயங்கிய நிலையிலேயே இருந்துள்ளார்.

    அவருடைய வளர்ப்பு நாய்கள் அவரை விட்டு பிரியாமல் அங்கேயே இருந்துள்ள நிலையில், அவைகளை சைமண்ட்ஸின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. மீட்பு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்த நிலையில் சைமண்ட்ஸின் உயிர் சனிக்கிழமை இரவு 10:30 மணிக்கு அவரது பூத உடலினை விட்டுப் பிரிந்தது. கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பினால் இறந்தார். அவர் இறந்த இரண்டு மாதங்களுக்குள் மற்றொரு வீரரின் உயிரிழப்பினால் ஆஸ்திரேலியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.

    1975ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்த சைமண்ட்ஸிற்கு தற்போது வயது 46. 1998 முதல் 2009ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாய் விளங்கியவர். 2003 மற்றும் 2007ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைகளில் ஆஸ்திரேலியாவுக்காக இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.

    சைமண்ட்ஸ் மூன்று மாத குழந்தையாக இருக்கும் போது கென் மற்றும் பார்பரா என்ற தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். சிறுவயதிலிருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவராக சைமண்ட்ஸ் வளர்ந்தார். அவரது தந்தைக்கு கிரிக்கெட் மிகப்பிடித்தமான் விளையாட்டாய் இருந்தது. தனது தந்தையுடன் தினமும் கிரிக்கெட் விளையாடிய சைமண்ட்ஸின் சிறுவயது கிரிக்கெட் வழக்கை அவரது சொந்த ஊரிலேயே கழிந்தது. குவீன்ஸ்லாந்து மாநில அணிக்காக விளையாடிய சைமண்ட்ஸ் 5000 ரன்களையும், 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

    1998ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் சர்வதேசப் போட்டியை ஆடிய சைமண்ட்ஸ் தனது அதிரடியான ஆட்டத்தினாலும், சிறந்த பீல்டிங் திறமையாலும் அறியப்பட்டவர். 2003 மற்றும் 2009ம் ஆண்டு உலகக்கோப்பைகளில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு உலகக்கோப்பைகளில் ஆடியுள்ள சைமண்ட்ஸ் 13 ஆட்டங்களில் 515 ரன்கள் அடித்துள்ளார்.

    2003ம் ஆண்டு உலகக்கோப்பை..

    2003ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது ஆஸ்திரேலியாவுக்காக அவர் அடித்த 143 ரன்கள், ஆஸ்திரேலியா வெற்றி பெற உதவியது. ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் களமிறங்கிய சைமண்ட்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். ஆட்டநாயகனுக்கான விருதினையும் பெற்றார்.

    இதேபோல இலங்கைக்கு எதிராக நடந்த அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 91 ரன்கள் குவித்து, அணியின் ஸ்கோர் 212 ஆக உயர உதவினார். அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    2007ம் ஆண்டு உலகக்கோப்பை..

    ஒட்டுமொத்தமாக ஒரு சிறப்பான ஆட்டத்தினை உலகக்கோப்பையில் வெளிப்படுத்திய சைமண்ட்ஸ், இங்கிலாந்திற்கு எதிராக 28 ரன்களும், இலங்கைக்கு எதிராக 68 ரன்களும் எடுத்திருந்தார்.

    முக்கியமான தருணங்களில் கிடைத்த கேட்ச்களை தவற விடாமல் பிடித்த சைமண்ட்ஸ், இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் மலிங்காவின் விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.

    சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 198 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5088 ரன்களும், 133 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1462 ரன்களும் 24 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பதினான்கு  டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 337 ரன்களும், 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

    ஐபிஎல் பிரவேசம்..

    2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக 13.5 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 6.5 கோடி) கொடுத்து வாங்கப்பட்டார். அந்த ஆண்டு அதிக விலை கொடுத்து வாங்கிய இரண்டாவது வீரரானார் சைமண்ட்ஸ்.

    அப்போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 117 ரன்கள் அடித்தார். அந்தப் போட்டியில் இருந்து ஒவரில் 17 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பந்து வீசிய சைமண்ட்ஸ் 19 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    2010 வரை டெக்கான் அணியில் இருந்த சைமண்ட்ஸ், 2011ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியினரால் வாங்கப்பட்டார். மொத்தமாக 39 ஆட்டங்களில்  விளையாடியுள்ள சைமண்ட்ஸ், 974 ரன்களும், 20 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

    இனவாதம் தொடர்பான சர்ச்சைகள்..

    2007ம் ஆண்டு இந்தியாவுடனான தொடரின் போது, குரங்கு என்ற கோஷம் மைதானங்களில் எழுந்தது. இது சைமண்ட்ஸைக் குறி வைத்து எழுப்பப்பட்ட கோஷம் என்றே கருதப்பட்டது. ஆனால் அப்பொழுது இதனை மறுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஹனுமான் கடவுளை எண்ணிக் கூறிய வார்த்தை தான் அது என்று கூறியிருந்தனர். ஆனால், பின்னர் நடந்த போட்டியின் போதும் குரங்கு என்ற கோஷம் மைதானங்களில் எழுந்தது. 

    2008ம் ஆண்டு இந்தியாவுடனான போட்டியின் போது ஹர்பஜன் சிங் சைமண்ட்ஸினை குரங்கு என்று கூறிய சம்பவம் பெரும் பேச்சு பொருளாக மாறியது. இந்த சம்பவத்தினால் ஹர்பஜன் மூன்று ஆட்டங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டதுடன் தனது சம்பளத்தில் பாதியினை அபாரதமாகக் காட்டினார்.

    ஐபிஎல் தொடரில் சைமண்ட்ஸ் மற்றும் ஹர்பஜன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பொழுது நல்ல நண்பர்களாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..

    2008ம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான தொடரின் போது நடந்த சந்திப்பினில் கலந்து கொள்ளாததால் அத்தொடரிலிருந்து விளக்கி வைக்கப்பட்டார். அதற்கு பின்னர் நடந்த இந்தியாவுடனான தொடரிலும் அவர் நிராகரிக்கப்பட்டார். அதற்குப் பின்னர் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப்பட்ட போதிலும் பெரிதும் ரன் அடிக்கவில்லை.

    இதன்பின் சவுத் ஆப்பிரிக்கா முதலிரண்டு போட்டியின் போது சரிவர விளையாடாத சைமண்ட்ஸ்  மூன்றாம் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலக்கி வைக்கப்பட்டார். இவ்வளவு நிகழ்ந்த போதிலும் அந்த ஆண்டுக்கான ஐசிசி வெளியிட்ட உலக ஆடும் லெவன் அணியில் ஒருவராய் இடம்பெற்றிருந்தார், சைமண்ட்ஸ்.

    2009ம் ஆண்டு மதுபானம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியதால் அந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக்கோப்பையிலிருந்து சைமண்ட்ஸ் விலக்கி வைக்கப்பட்டார். அதே ஆண்டு சைமண்ட்ஸ் தனது ஓய்வினை அறிவித்தார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் முற்று பெற்றது.

    சைமண்ட்ஸிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது இறப்புக்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் அனுதாபங்கள் வந்து கொண்டிருக்கின்றன. யுவேந்திர சஹால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று நான் எனது மிக நெருங்கிய நண்பரினை இழந்துள்ளேன். அவர் எனக்கு ஒரு நல்ல நண்பனாய் இருந்து உபதேசங்கள் செய்துள்ளார்; ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்வது எப்படி என்று கற்றுக் கொடுத்துள்ளார். மீன் பிடிக்க சென்றது, எப்பொழுதும் அலைபேசியில் தொடர்பு கொள்வது என நம் நினைவுகள் எப்பொழுதும் என்னுடன் இருக்கும். நீங்கள் எனது நண்பன் மட்டும் அல்ல, எனது குடும்பத்தினில் ஒருவர், தங்களது இறப்பிற்காக வருந்துகிறேன் சைமண்ட்ஸ்.’ என்று மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    சஹால் மட்டுமல்லாது, ஹர்பஜன், சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி என பல கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் சைமண்ட்ஸ் உடனான தங்களது தருணங்களை பகிர்ந்து நெகிழ்ந்து வருகின்றனர்.

    சைமண்ட்ஸின் சகோதரி அவரது கல்லறையில், ’நீ இன்னும் ஒரு நாள் இருந்திருக்கலாம், இன்னும் ஒரு முறை என்னைத் தொடர்பு கொண்டிருக்கலாம், என் இதயம் உடைந்துள்ளது. உன்னை எப்பொழுதுமே நான் நேசிக்கிறேன் சகோதரரே’ என்று எழுதியுள்ளார். இன்று உலகம் முழுவதும் அந்த வார்த்தை பயணித்துக் கொண்டிருக்கிறது.

    இந்த உலகத்தில் எதுவும் நமக்கென்று நிரந்தரமானது இல்லை.. பிறந்த தருணம் முதல் இறக்கும் தருணம் வரை எந்த ஒரு நொடியும் நமது கைகளில் இல்லை என்றே கூறவேண்டும். கடந்த காலத்தினை மறந்து விட்டு, எதிர் காலம் பற்றிய கனவுகளில் மூழ்காமல், நிகழ்காலத்தினில் வாழ்வோம்.. நல்ல மனிதராய் இவ்வுலகை விட்டுச் செல்வோம்.

    ‘ஐபிஎல் வெறும் தொடக்கம்தான்..’ ; அசுர வேகத்திற்கு தயாராகும் உம்ரான் மாலிக் எனும் புயல்!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....