Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராணுவமே வந்தாலும் பூட்டு போடுவோம்.. என்எல்சிக்கு அன்புமணி எச்சரிக்கை!

    ராணுவமே வந்தாலும் பூட்டு போடுவோம்.. என்எல்சிக்கு அன்புமணி எச்சரிக்கை!

    கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் பா.ம.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்ற அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் தெரிவித்துள்ளாவது:

    கடலூர் மாவட்டத்தில் 64 ஆண்டுகாலமாக இந்த மண்ணையும், மக்களையும் ஏமாற்றி பழுப்பு நிலக்கரியை எடுத்து நிலத்தடி நீரை உறிஞ்சி பாலைவனமாக என்.எல்.சி நிறுவனம் மாற்றிக்கொண்டிருக்கிறது. 

    ஆசியாவில் தன்னூற்று இருந்த பகுதி நெய்வேலி தான். 8 அடி இருந்த தண்ணீர் தற்போது ஆயிரம் அடிக்கு சென்றுவிட்டது. இதற்கு முழு காரணம் என்.எல்.சி நிறுவனம் தான். 

    நிலம் கொடுத்த மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் வேலை இல்லை. அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லை. எந்த நிறுவனத்தையும் நான் வேண்டாமென்று கூறியதில்லை. ஆனால் மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை. 

    என்.எல்.சி நிறுவனத்தை மூட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. ராணுவத்தை கூட்டி வந்தாலும் என்.எல்.சி நிறுவனத்துக்கு பூட்டு போடுவோம். இனி யாரும் ஏமாற மாட்டோம். நிலம் எடுக்க வந்தால் முடியாது எனக்கூறுங்கள். உங்கள் அனுமதி இல்லாமல் ஒருபிடி மண்ணை கூட எடுக்க முடியாது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, அன்புமனி ராமதாஸ் என்.எல்.சி குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்துள்ளார். 

    அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

    கடலூர் மாவட்டத்தில் உள்ளூர் மக்களின் நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைத்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம், உள்ளூர் மக்களின் நலன்களையும், சுற்றுசூழலையும் மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. மண்ணின் பிரச்சினைகளையும், மக்களின் சிக்கல்களையும் தீர்க்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தினாலும் அதை செவி மடுக்க என்.எல்.சி மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

    நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள 23 கிராமங்களில் இருந்து 36,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலங்களில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு தான் ஆண்டுக்கு ரூ.10,662 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாக  என்.எல்.சி வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் மூலதனமான நிலங்களை வழங்கிய உள்ளூர் மக்களுக்கு போதிய இழப்பீடோ, வேலை வாய்ப்போ வழங்கப்படவில்லை.

    என்.எல்.சி. நிறுவனம் லாபம் ஈட்டுவதற்கான விலையை கடலூர் மாவட்டம் தான் கொடுத்து வருகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன் கடலூர் மாவட்டத்தில் 8 அடியில் நிலத்தடி நீர் கிடைத்தது. ஆனால், இப்போது நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. நிலத்தடி நீரை உறிஞ்சி கடலுக்கு அனுப்புவது, மழைக் காலங்களில் வெள்ளநீரை வெளியில் தள்ளி பயிர்களை மூழ்கடிப்பது போன்ற செயல்களைத்தான் என்.எல்.சி. நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது.

    நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் கடலூர் மாவட்டம் முழுவதும் கடல் நீர் உட்புகத் தொடங்கி விட்டது. இதனால் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் பட்டியலிட முடியாத அளவுக்கு மிக நீளமானவை. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஒட்டு மொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

    நிலக்கரி மூலம் கடந்த 5 ஆண்டுகளில் என்.எல்.சி சுமார் ரூ.45,000 கோடி வருவாய் ஈட்டியுள்ள நிலையில், அதனால் கடலூர் மாவட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.447 கோடி, அதாவது 1% தொகையை மட்டுமே என்.எல்.சி. ஒதுக்கியுள்ளது. இது மிக மிகக் குறைவு. இவ்வளவு தீமைகளை செய்து வரும் என்.எல்.சி நிறுவனம், இன்னும் 12,250 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, நிலக்கரியை  வெட்டி எடுக்கத் தொடங்கினால் கடலூர் மாவட்டம் பாலைவனமாக மாறுவதை தடுக்கவே முடியாது.

    என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு இன்று வரை வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. பொறியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைத்து நிலை பதவிகளிலும் பிற மாநிலத்தவர் தான் நியமிக்கப்படுகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களும் கூட பிற மாநிலங்களிலிருந்து தான் வரவழைக்கப்படுகின்றனர். அண்மையில் நியமிக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதால் மண்ணின் மைந்தர்களும், நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலம் அளித்தவர்களும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

    என்.எல்.சி நிறுவனத்திலிருந்து கிடைக்கும் லாபத்தைக் கொண்டு ஒடிசா , உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு செய்யப்படும் நலத்திட்டங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், நிலம் கொடுத்த கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் செலவிடப்படும் தொகை மிக மிகக் குறைவு ஆகும். கடலூர் மாவட்டத்தின் வளங்களை சுரண்டி, வட இந்தியர்களுக்கு வளம் சேர்க்கும் பணியைத் தான் என்.எல்.சி செய்கிறது.

    நிலம் கொடுத்த மண்ணின் மைந்தர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க என்.எல்.சி. நிறுவனம் மறுக்கிறது; சுற்றுச்சூழலை சீரழித்து கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்குகிறது; இத்தகைய  நிறுவனம் தேவையில்லை என்பது தான் ஒட்டுமொத்த கடலூர் மாவட்ட மக்களின் நிலைப்பாடு ஆகும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....