Monday, March 18, 2024
மேலும்
  Homeஆன்மிகம்கொடியேற்றத்துடன் தொடங்கிய வைகாசி அவதாரத் திருவிழா; பக்தர்கள் கொண்டாட்டம்!

  கொடியேற்றத்துடன் தொடங்கிய வைகாசி அவதாரத் திருவிழா; பக்தர்கள் கொண்டாட்டம்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நவ திருப்பதி கோவில்களில் கடைசி தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி அவதார திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

  இந்த ஆழ்வார் திருநகரி என்ற பெருமை மிகு ஊருக்கு தன்பொருநல், ஆதிசேத்ரம், குருகாசேத்ரம், திருக்குருகூர் என பல்வேறு பெயர்கள் உள்ளன. குருகு என்றால் சங்கு என்பது பொருள். அவ்வாறு ஆற்றில் மிதந்து வந்த சங்கு, இத்தல பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் திருக்குருகூர் என்ற பெயர் வந்தது என்றும், பெரும் வெள்ளத்தால் உலகமே அழிந்து, மீண்டும் உருவானபோது முதலில் உண்டான இடம் என்பதால் ஆதிசேத்ரம் என்றும், நாம்மாழ்வார் கோயில் கொண்டு இருந்ததால் ஆழ்வார் திருநகரி என்றும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

  நம்மாழ்வார் அவதரித்த தலமான இங்கு வைகாசி அவதார திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர், சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 8 மணியளவில் நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

  விழாவில் ஆழ்வார் திருநகரி நகர பஞ்சாயத்து தலைவர் ஆதிநாதன், நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், தொகுதி இணை செயலாளர் பாலசுப்பிரமணியம், வ.உ.சி. இளைஞர் பேரவை தலைவர் கோமதிநாயகம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  வைகாசி அவதார திருவிழாவின் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார தீபாராதனைக்குப் பிறகு, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இரவில் நம்மாழ்வார் வீதியுலா நடந்தது. திருவிழா நாட்களில் தினந்தோறும் நம்மாழ்வார் பல்வேறு வாகனத்தில் வீதியுலா செல்வார்.

  இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். வருகிற 7-ந் தேதி 5-ம் திருவிழா அன்று காலை, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினி வேந்தப்பெருமாள், தொலைவில்லி மங்களம் அரவிந்தலோசனர், இரட்டைத்திருப்பதி தேவர் பிரான், பெருங்குளம் ஸ்ரீமாயக்கூத்தப் பெருமாள், தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ண பெருமாள், திருக்கோளூர் ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் ஆகியோரை வரவேற்று மங்களாசாசன நிகழ்ச்சி நடைபெறும்.

  தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு நம்மாழ்வார் வீதி உலாவும், இரவில் 9 பெருமாள்களின் கருடசேவையும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்கப்பல்லக்கிலும் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறும். 9-ம் திருநாளான 20-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 10-ம் திருநாளான 21-ந்தேதி சனிக்கிழமை மதியம் தீர்த்தவாரி நடக்கிறது.

  விழாவின் ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வேலரசு, தக்கார் அஜீத், சீனிவாச அறக்கட்டளை ஆலோசகர் முருகன், என்ஜினீயர் செந்தில் ஆகியோர் செய்து வருகின்றனர்.

  காற்று மாசுபாடு அதிகமுள்ள முதல் ஐந்து நாடுகள் எது தெரியுமா??

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....