Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்20,000 கோடி மதிப்பில் புதிய விமான நிலையம்; என்ன சொல்கிறார் மு.க.ஸ்டாலின்?

    20,000 கோடி மதிப்பில் புதிய விமான நிலையம்; என்ன சொல்கிறார் மு.க.ஸ்டாலின்?

    பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

    இந்தியாவின் வளர்ச்சிப் பெற்ற கட்டமைப்பு வசதிமிகுந்த மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும், அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு, திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்தி வருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

    மேலும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

    நம் மாநிலத்திற்கு வருகைப் புரியும் முதலீட்டாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    தற்போது உள்ள சென்னை விமானநிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. மேலும், தற்போது நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு, அடுத்த 7 ஆண்டுகளில் சென்னை விமானநிலையம் அதிகபட்ச அளவான ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை எட்டக்கூடும்.

    சென்னை விமானநிலையத்தில் மென்மேலும் அதிகரித்துவரும் விமானப்பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையிலும், சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பணியை அரசு நிறுவனமான டிட்கோ நிறுவனம் மூலம் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.

    புதிய விமானநிலையம் அமைக்க நான்கு பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில், இந்திய விமானநிலைய ஆணையம் ஆய்வு செய்து சாத்தியமான இடங்களாக பரிந்துரைத்த இரண்டு இடங்களில் ஒன்றான பரந்தூரில் புதிய விமானநிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

    தற்போதைய சென்னை விமானநிலையம் மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள விமானநிலையம் ஆகிய இரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    புதிதாக அமையவுள்ள விமானநிலையம், 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஓடுதளங்கள் (Runways), விமானநிலைய முனையங்கள் (Terminal Buildings), இணைப்புப்பாதைகள் (Taxiways), விமானங்கள் நிறுத்துமிடம் (Apron), சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது.

    இத்துடன், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தப்பின் புதிய விமானநிலையத்திற்கான திட்டமதிப்பு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்டமதிப்பு 20,000 கோடி ரூபாய் ஆகும்.

    மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் 2008-ம் ஆண்டு வெளியிட்டுள்ள புதிய விமானநிலையம் அமைப்பதற்கான வழிகாட்டுதலின்படி, தேர்வுசெய்யப்பட்ட இடத்திற்கான ஒப்புதல் பெற, மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள குழுவிற்கு, விரைவில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும். இட அனுமதி ஒப்புதல் பெற்றபின், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இதனைத் தொடர்ந்து, விமானநிலைய திட்டத்திற்கான கொள்கை ஒப்புதல் மற்றும் விமான நிலையம் செயல்படுவதற்கான அனுமதி மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பெறப்படும்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு, முன்னேற்ற அடையாளத்தைக் காண்கிற நிலையில், எதிர்காலத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு வளர்ச்சியினைக் காட்டும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

    மேலும், பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு என்றும், தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில், இது மற்றொரு மைல் கல் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

    23.66 கோடி மதிப்பில் புதிய வாகனங்கள்- தமிழக அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....