Sunday, March 17, 2024
மேலும்
  Homeசெய்திகள்தமிழ்நாடு‘அறிவினை விரிவு செய்’- கல்லூரிக் கனவு நிகழ்ச்சியினைத் துவங்கி வைத்துள்ள தமிழக முதல்வர்!!

  ‘அறிவினை விரிவு செய்’- கல்லூரிக் கனவு நிகழ்ச்சியினைத் துவங்கி வைத்துள்ள தமிழக முதல்வர்!!

  தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்த ‘நான் முதல்வன்’ என்கிற திட்டத்தின் ஒரு பகுதியாக ‘கல்லூரிக் கனவு’ என்னும் நிகழ்ச்சியினை இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் தமிழக முதல்வர் அவர்கள் துவங்கி வைத்துள்ளார்.

  12ம் வகுப்பு முடித்த மாணவர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக தமிழகம் எங்கும் இந்த கல்லூரிக் கனவு நிகழ்ச்சியானது துவங்கப்படவுள்ளது.

  என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், தங்களுக்குப் பிடித்த துறையினைக் கண்டு பிடிப்பது எப்படி போன்ற மாணவர்களின் கேள்விகளுக்கு திறமையான ஆசிரியர்களின் மூலம் விளக்கும் நிகழ்ச்சியே இந்த ‘கல்லூரிக் கனவு.’

  இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தின்போது ஹெச்சிஎல் நிறுவனத்திற்கும் தமிழக அரசிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 2500 மாணவ மாணவியர்கள் தகுதியின் அடிப்படையில் ஹெச்சிஎல் நிறுவனமானது தேர்வு செய்து, பயிற்சிகள் வழங்கி பணி நியமனத்திற்கு ஏற்பாடு செய்யும். இதற்கான முழு செலவினையும் தமிழக அரசு ஏற்கவுள்ளது.

  சுமார் 5000 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட இந்த விழாவினைத் துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்களிடையே உரையாற்றினார்.

  இந்த நிகழ்ச்சியானது ஜூன் 29, 30 மற்றும் ஜூலை முதல் இரண்டு தேதிகளில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் கூறியுள்ளார்.

  இதற்காக உயர்கல்வித் துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், வேளான்மைப் பலக்லைக்கழகம், டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வலைப்பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், கல்லூரி இயக்குனரகம் ஆகியவை சார்பில் இந்த நிகழ்ச்சியானது நடைபெறுகிறது.

  முதலமைச்சர் உரையின் சுருக்கம்..

  நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்த முதல்வர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று வணக்கம் கூறித் தனது உரையினைத் துவங்கினார்.

  கடந்த ஐந்து நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், இந்த காலை வேளையில் மாணவர்களை பார்க்கும் போது உற்சாகமாக உள்ளது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மட்டும் இந்த நிகழ்ச்சிக்கு நான் வரவில்லை; உங்களை எனது சொந்தப்பிள்ளைகள் என்று கருதி வாழ்த்த வந்துள்ளேன்.

  மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கும் என்பது மாதிரியான ஆலோசனைகள் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த நிகழ்ச்சி. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  பள்ளிக்கல்வி என்ற படியினைத் தண்டி கல்லூரி என்ற படியில் அடியெடுத்து வைக்கப்போகின்றீர்கள்; மாணவர்களாகிய நீங்கள் தான் இந்த மாநிலத்தின் சொத்துக்கள். உங்களை வளர்க்க வேண்டிய முக்கிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

  இந்த மாநிலத்தின் முதல்வனாக வேண்டுமெனில் நான் இருக்கலாம்; ஆனால் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக மாணவர்களாகிய நீங்கள் வர வேண்டும்.

  படித்து பட்டம் பெற்று கை நிறைய சம்பளம் வாங்கினோம் என்பதோடு உங்களது பணி முடிந்துவிடுவதில்லை. எத்தகைய ஆற்றல் படைத்தவர்களாக நீங்கள் வளர்ந்தீர்கள், உங்களது ஆற்றலை வைத்து இந்த சமூகத்தினை உயர்த்த எவ்வளவு முயன்றீர்கள் என்பது தான் முக்கியம்.

  அரசுப்பள்ளிகளில் படித்து பெரிய மனிதர்களாக உயர்ந்தவர்கள் நிறைய உள்ளனர். முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் காலம், இஸ்ரோ தலைவர் சிவன், சந்திராயன் விண்கலம் அனுப்பிய மயில்சாமி அண்ணாதுரை, இந்த மேடையில் வீற்றிருக்கும் பொதுச்செயலர் வெ.இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு ஆகியோர் அரசுப்பள்ளியில் படித்தவர்களே.

  எப்படியாவது படி, எங்கேயாவது போய் முன்னேறி விடு என்று தந்தை பெரியார் கூறியுள்ளார். அவரைத்தொடர்ந்து முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜர் தமிழகம் முழுவதும் பள்ளிகளைத் திறந்தார், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தமிழகமெங்கும் கல்லூரிகளைத் திறந்து வைத்தார். இன்று நாங்கள் உயர்கல்வியினை ஊக்கப்படுத்தி வருகிறோம்.

  இந்தியாவின் சராசரி அளவினை விட தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் அதிகம், இந்தியாவில் சிறந்த கல்விக்கொள்கையை தமிழகம் கொண்டுள்ளது.

  கல்லூரி காலத்தில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாகிறது. எனவே இந்த காலத்தினை மிக கவனமாகக் கையாளவேண்டும். பெற்றோரின் கனவையும் புரிந்து கொள்ள வேண்டும்.

  பொறியியல், மருத்துவம் சிறந்த படிப்புகள் தான். ஆனால் அந்த இரண்டுடன் உங்களது வாய்ப்பினை நிறுத்திக்கொள்ள வேண்டாம். அனைத்துத் துறைகளிலும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

  உலகில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே அவர்களுக்கு பிடித்த துறையினைத் தேர்ந்தெடுத்து அதில் கடினமாக முயன்றவர்களாகவே இருப்பார்கள்.

  பிடித்த துறையினை தேர்ந்தெடுப்பதும், அதில் கடினமாக உழைத்ததுமே அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது. ‘பிடித்த துறையினைத் தேர்ந்தெடுங்கள்; கடினமாக உழையுங்கள், வெற்றி பெறுங்கள்.’

  இந்தியாவின் நூறு சிறந்த கல்லூரிகளைப் பட்டியலிட்டால், அதில் முப்பது கல்லூரிகள் தமிழகத்தில் இடம்பெற்றிருக்கும்.

  தனித் திறமை இருந்தால் தான் தனித்து ஜொலிக்க முடியும். அதற்கு தன்னம்பிக்கை வேண்டும், நம்மால் முடியும் என்கிற தைரியம் வேண்டும், மொழியாற்றல் இருக்க வேண்டும்.

  விரக்தி மனோபாவம் ஒருபோதும் இருக்க கூடாது. உங்களோடு பிறரை ஒப்பீடு செய்யதீர்கள்.

  இன்று முதல் புதிய மனிதர்களாக நீங்கள் உருவாகின்றீர்கள், வருங்காலம் உங்களுக்கு ஒளிமயமாய் இருக்கும், வாழ்வில் தென்றல் வீசும், உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றுவதற்கான வாப்பினைப் பெற்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன்.

  கல்வி உரிமையினைப் போராடி பெற்றுள்ளோம்; கல்வியினைப் பற்றி சிறுமைப் படுத்துவோரின் பேச்சினைக் கேட்காதீர்கள். படிப்பில் கவனம் செலுத்துங்கள். அறிவார்ந்த தமிழ் மக்கள் என பார்புகழ நீங்கள் விளங்க வேண்டும்.

  உங்களை எல்லாம் அவையத்து முந்தி இருக்கச் செய்யும் தந்தை எனும் பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்கிறேன். ‘படியுங்கள் படியுங்கள் பகுத்தறிவோடு சிந்தியுங்கள். சிறகுகளை விரித்து உலகமெனும் திறந்த வெளியில் சிறகடித்துத் திரியுங்கள், பின்னால் வருபவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழுங்கள்.

  ஏதோ ஒன்றில் உங்கள் அறிவுக் கூர்மை பெருமானால் அந்த அறிவு உங்கள் வாழ்வினை வளமானதாக ஆக்கும்.’ 

  இவ்வாறான கருத்துக்களை முதலமைச்சர் தனது உரையில் பதிவு செய்துள்ளார்.

  இந்தியாவில் நண்பர்கள் சொல்வது மட்டுமே கேட்கப்படும் – ராகுல் காந்தி விமர்சனம்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....