Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அன்புமணி வலியுறுத்தல்

    சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அன்புமணி வலியுறுத்தல்

    சென்னை: மாண்டஸ் புயலால் சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

    இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    சென்னையில் மாண்டஸ் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட மரக்கழிவு குப்பைகள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நான்கு நாட்களாக குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது வருத்தமளிக்கிறது.

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசியதில் மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. புயல் மற்றும் மழையால் சாய்ந்த மரங்களும், மரக்கிளைகளும் உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி பாராட்டியிருந்தது.

    ஆனால், அகற்றப்பட்ட மரங்கள் மற்றும் மரக்கிளைகளில் இருந்து விழுந்த இலைகள் மற்றும் சுள்ளிகள்  இன்று வரை அப்புறப்படுத்தப்படவில்லை. அவை அனைத்து துப்புரவுத் தொழிலாளர்களால் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவற்றை அள்ளிச் செல்வதற்கு வாகனங்கள் வராததால், நான்கு நாட்களாக அவை அப்படியே கிடக்கின்றன.

    மாண்டஸ் புயல் கடந்த 9-ஆம் தேதி இரவே கரையை கடந்து விட்டாலும் கூட, அதன் பிறகு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களாக அகற்றப்படாத குப்பைகள் சாலைகளிலும், தெருக்களிலும்  பரவிக் கிடக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழை நீரில் ஊறுவதால் அவற்றிலிருந்து தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. மரக்கழிவு குப்பைகள் உடனடியாக அகற்றப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடைந்து, தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன.

    புயல் காற்றில் விழுந்த மரங்களையும், மரக்கிளைகளையும் அகற்றுவதில் தமிழக அரசுத் துறைகளும், சென்னை மாநகராட்சியும் காட்டிய வேகம் ஈடு இணையற்றது. துப்புரவு தொழிலாளர்கள் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கவை. அதே அளவு வேகம் மரக்கழிவு குப்பைகளை அகற்றுவதில் காட்டப்படாதது ஏன்? கடந்த காலங்களில் மிக மோசமான சூழலிலும் கூட குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது கிடையாது.

    அளவுக்கு அதிகமாக மரக்கழிவு குப்பைகள் குவிந்து கிடப்பதால் அவற்றை அப்புறப்படுத்துவதற்கு அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் தேவைப்படுவதாகவும் தெரிகிறது. தமிழக அரசு நினைத்தால் சென்னையில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான வாகனங்களை ஏற்பாடு செய்வது ஒரு பொருட்டே இல்லை. சென்னை வெளியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வாகனங்கள், தனியார் வாகனங்கள் ஆகியவற்றைக் கொண்டு, ஒரே நாளில் குப்பைகளை அகற்றி சென்னையை தூய்மையாக்க முடியும்.

    எனவே, இனியும் தாமதிக்காமல் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குவிந்து கிடக்கும் மரக்கழிவு குப்பைகளை உடனடியாக அகற்ற தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய்ப்பரவலைத் தடுக்க குப்பைகள் அகற்றப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினிகளை தெளிக்க வேண்டும்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    கோவை கார் வெடிப்பு சம்பவம்; கைதான மூவருக்கு டிசம்பர் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....