Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஅசத்திய குஜராத் டைட்டன்ஸ்; ஆரவாரமில்லாமல் நடந்த இறுதிப்போட்டி!

    அசத்திய குஜராத் டைட்டன்ஸ்; ஆரவாரமில்லாமல் நடந்த இறுதிப்போட்டி!

    நேற்று நடந்த ஐபிஎல்லின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியினை வீழ்த்தி கோப்பையினைக் கைப்பற்றியது குஜராத் டைட்டன்ஸ். அகமதாபாத் மைதானத்தில் நேற்று இரவு எட்டு மணிக்கு இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது.

    இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னதாக நேருக்கு நேர் மோதிய இரண்டு போட்டிகளிலும் குஜராத் அணி வெற்றிப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜோஸ் பட்லரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் பெங்களூரு அணியினை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் அணி தகுதிபெற்றிருந்தது.

    முதலாவது குவாலிஃபையர் போட்டியில் குஜராத் அணியிடம் பெற்ற தோல்விக்கு ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் பழிதீர்ப்பது மட்டுமல்லாமல், இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையினை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகளும், முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற குஜராத் அணி கோப்பையினை வென்று சாதனைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணிக்கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கினைத் தேர்ந்தெடுத்தார்.

    இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தது. அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 35 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்களை எடுத்தார். தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 22 ரன்களை எடுத்தார்.

    குஜராத் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்களுக்கு 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகளையும், ஷமி, யாஷ் தயாள் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

    போட்டியின் ஐந்தாவது ஓவரினை வீசிய பெர்குசன் இந்த தொடரின் மிக வேகமான பந்தினை வீசினார். மணிக்கு 157.3 கிலோமீட்டர் வேகத்தில் அவர் வீசிய பந்தானது இதற்கு முன்னர் உம்ரான் மாலிக் கைவசம் இருந்த ‘மிக வேகமான பந்து’ என்கிற பெருமையினைத் தட்டிச்சென்றது.

    உம்ரான் மாலிக் மணிக்கு 157 கிலோமீட்டர் வேகத்தில் வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆரவாரமில்லாமல் கோப்பையினைக் கைப்பற்றிய குஜராத் ‘டைட்டன்ஸ்’..

    131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியானது, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் ஆகியோரின் தெளிவான பேட்டிங்கினால் ராஜஸ்தான் அணியினை எளிதாக வீழ்த்தி கோப்பையினை வென்றது.

    43 பந்துகளை எதிர்கொண்ட கில் 45 ரன்களும், பாண்டியா 30 பந்துகளில் 34 ரன்களும், டேவிட் மில்லர் 19 பந்துகளில் 32 ரன்களும் அடித்தனர்.

    ராஜஸ்தான் தரப்பில் ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா மற்றும் சஹால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

    இந்த தொடரில் மொத்தமாக 863 ரன்களைக் குவித்த ஜோஸ் பட்லர், அதிக ரன்கள் அடித்தவருக்கான ஆரஞ்சு கேப்பிணைப் பெற்றார். தொடர் நாயகனுக்கான விருதினையும் பட்லர் தட்டிச் சென்றார். இப்போட்டியில் ஒரு விக்கெட்டினை எடுத்ததன் மூலம் 27 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்த சஹால் அதிக விக்கெட்டுகள் எடுத்தவருக்கான பர்பில் கேப்பிணை பெற்றார். வளர்ந்து வரும் வீரருக்கான விருது உம்ரான் மாலிக்கிற்கு கொடுக்கப்பட்டது.

    மூன்று விக்கெட்டுகள் மற்றும் 34 ரன்கள் அடித்ததற்காக ஆட்ட நாயகன் விருது ஹர்திக் பாண்டியாவிற்கு கொடுக்கப்பட்டது.

    இந்த வெற்றியின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே கோப்பையினை கைப்பற்றிய அணி என்கிற பெருமையினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் பிறகு பாண்டியா தலைமையிலான குஜராத் அணி பெற்றுள்ளது.

    2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல்லில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் அணி கோப்பையைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    முற்றுப்பெற்ற ஐபிஎல்..

    தனிப்பட்ட ஒருவரது முயற்சியில் வெற்றி பெறாமல், ஒட்டுமொத்த அணியின் முயற்சியின் மூலம் இறுதிப் போட்டிக்கு வந்த குஜராத் அணி இந்த முறை கோப்பையினை வென்றுள்ளது.

    ஒவ்வொரு போட்டியிலும் அந்த அணியில் பங்கேற்ற ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்கினை சிறப்பாக அளித்ததன் மூலம் மட்டுமே குஜராத் அணி வென்றுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் ஹர்திக் பாண்டியா தனது திறமையினை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளார். தொடர் காயங்களின் காரணமாக பந்து வீச சிரமப்பட்டிருந்த காலங்கள் கடந்து இந்த தொடரில் ஒரு சிறப்பான பந்து வீச்சினை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

    அணித் தலைவராக பல சிக்கலான தருணங்களின் போதும் தனது கட்டுப்பாட்டினை இழக்காமல் அணியினை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    பாண்டியா தவிர்த்து டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, சுப்மன் கில், வ்ரிதிமான் சாஹா, லோகி பெர்குசன் என அனைத்து வீரர்களும் தங்களது திறமையினை இந்த தொடரில் நிரூபித்து உள்ளனர்.

    ஐபிஎல்லின் தொடரின் ஆரம்பத்தில் பெரிதாக யாருடைய கவனத்தினையும் ஈர்க்காத குஜராத் அணி அனைவருடைய எதிர்பார்ப்புகளையும் உடைத்து இந்த முறை கோப்பையினை வென்றுள்ளது.

    பெரிய வீரர்கள் யாருமே இல்லாத அணியாக இருந்த போதிலும் ஒவ்வொருவரும் தங்களின் திறமை என்ன என்பதினை நிரூபித்ததன் மூலம் குஜராத் டைட்டன்ஸ், ஒரு  அணியாக கோப்பையினை வென்றுள்ளது. கோப்பையினை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள்.

    டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால்….இனி அவ்வளவுதான்!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....