Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுகவினைக் கைப்பற்றப்போவது யார்? பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ள பொதுக்குழு கூட்டம்.

    அதிமுகவினைக் கைப்பற்றப்போவது யார்? பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ள பொதுக்குழு கூட்டம்.

    தேர்தலுக்குப் பிறகு அதிமுக கட்சியில் சச்சரவுகளும், குழப்பங்களும் அதிகமாகியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராய் இருந்த ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு கட்சித் தலைமை தொடர்பான சலசலப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வந்துள்ளது அதிமுக.

    கட்சியினை வழி நடத்துவதற்கு ஒருங்கிணைப்பாளராக திரு.ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக திரு.எடப்பாடி பழனிசாமியும் கட்சி நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இருப்பினும் கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்கிற விவாதம் தொண்டர்களிடையே தொடர்ந்து எழுந்து வந்த வண்ணம் இருந்தது.

    எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக இந்த விவாதமானது தீவிர கட்டத்தினை எட்டியுள்ளது.

    தீவிரமான ஒற்றைத்தலைமை..

    ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்மானங்கள் பற்றி ஆலோசிக்க 14ம் தேதி கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் ஒற்றைத்தலைமை குறித்த சலசலப்பு ஆரம்பமானதிலிருந்து பிரச்சினையின் தீவிரம் அதிகரிக்கத்தொடங்கியது.

    கூட்டத்தின் உள்ளே இருந்த நிர்வாகிகளும், வெளியே குவிந்திருந்த தொண்டர்களும் ஒற்றைத்தலைமையினை அடிப்படையாகக் கொண்டு இரு அணிகளாகப் பிரிந்து விவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த கூட்டத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தத்தமது இல்லங்களில் தங்களது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும், தங்களுக்கு ஆதரவு அளிக்க வெளிப்படையாகவே வாக்கு சேகரிப்பில் ஈடுபடலாயினர்.

    கடிதம் அனுப்பிய பன்னீர்செல்வம்..

    இந்நிலையில், ஜூன் 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவினை தள்ளிவைக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியநாதன் ஆகியோர் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி இருந்தனர்.

    இதுவரை நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டங்களில் பின்பற்றப்பட்ட விதிமுறைகள் தற்போது நடத்தப்படவுள்ள பொதுக்குழுவில் பின்பற்றப்படவில்லை எனவும், எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஒற்றைத்தலைமை பற்றி விவாதம் எழுந்ததைக் குறிப்பிட்டும் பொதுக்குழுவானது தள்ளிவைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மூன்று பக்கங்களைக் கொண்ட இந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் அனுப்பியதாகத் தெரிகிறது. ஆனால் அந்தக் கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது என்பது பற்றிய செய்திகள் இதுவரை வெளியாகவில்லை.

    இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூட்டத்தினைத் தள்ளிவைக்கக்கோரி தீவிர எதிர்ப்பில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் கூட்டமானது குறிப்பிட்ட தேதியில் நடந்தே தீரும் என்று எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர்.

    அணி மாறிய ஆதரவாளர்கள்..

    நாளை பொதுக்குழுவானது நடைபெறவுள்ள நிலையில் நேற்றுவரை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருந்த அதிமுக நிர்வாகிகள் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    நேற்று 12 மாவட்டச் செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி ஆறு மாவட்டச்செயலர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவியுள்ளனர்.

    இதனால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள மாவட்ட செயலர்கள் எண்ணிக்கை ஆறாகக் குறைந்துள்ளது. 

    திட்டமிட்ட படி நடக்குமா பொதுக்குழு? 

    பரபரப்பான நிலையில் நேற்று, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பானது பலப்படுத்தப்பட்டுள்ளது.

    நாளை நடைபெறும் பொதுக்குழுவில் இரட்டைத்தலைமை விதிகளை நீக்கப்படப்போவதாக தகவல்கள் வெளியாகின்றன.

    பொதுக்குழு கூடுவதினையொட்டி வானகரத்தில், பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பொதுக்குழுவிற்கு ஓ.பன்னீர்செல்வம் வருகை தருவார் என்கிற நம்பிக்கை உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்துள்ளார்.

    இது மட்டுமின்றி, ‘ஒற்றைத்தலைமையினை எடப்பாடி பழனிசாமி ஏற்கவேண்டும் என்பதே பெரும்பாலான அதிமுக தொண்டர்களின் விருப்பம். தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். கட்சியில் அராஜகத்திற்கு இடமில்லை.’ என்றும் அவர் கூறியுள்ளார்.

    பொதுக்குழுவில் பங்கேற்குமாறு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று மதியம் அழைப்பு விடுத்துள்ளார்.

    ஒருங்கிணைப்பாளர்கள் என்கிற முறையில் இருவரும் இனைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்ன??

    அதிமுக கட்சியினருக்கு ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாய் சென்றுகொண்டிருக்கின்ற இந்த வேளையில், ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் ஜெயலலிதா நினைவிடத்தில் அவரது தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

    மேலும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். தனது ஆதரவாளர்கள் ஆறு பேருடன் ஆலோசனை நடத்திவருவதாகவும் கூறப்பட்ட நிலையில், பொதுக்குழுவைப் புறக்கணிப்பதே நமது கடைசி ஆயுதம் என்று கூறி இருக்கிறார்.

    இந்த ஒற்றைத்தலைமை விவகாரமும், நாளை நடைபெறப்போகும் அதிமுக கட்சியின் பொதுக்குழுவும் தற்போது உச்சகட்ட பரபரப்பினை எட்டியுள்ளது. 

    பொதுக்குழுவில் என்ன மாதிரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும், ஒற்றைத்தலைமை அதிமுக கட்சிக்கு சாத்தியப்படுமா?

    வருங்கால அதிமுக கட்சியினை வழிநடத்தப்போவது யார்?

    ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்ன?

    என்பது போன்ற பல கேள்விகள் அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களின் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. 

    சுதந்திர இந்தியாவின்  தமிழக அரசியல் வரலாற்றில் அதிமுகவின் பங்கு அளப்பறியதாய் இருந்துள்ளது. அத்தகைய கட்சியின் வருங்காலத்தினை நாளை நடைபெறப்போகும் கூட்டத்தினை வைத்தே தீர்மானம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....