Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமூடும் நிலையில் ஃபோர்டு நிறுவனம்: 40,000 தொழிலாளர்களின் நிலை என்னவாகும்?

    மூடும் நிலையில் ஃபோர்டு நிறுவனம்: 40,000 தொழிலாளர்களின் நிலை என்னவாகும்?

    சென்னைக்கு அருகே உள்ள ஃபோர்டு தொழிற்சாலை விரைவில் மூடப்படவுள்ளதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையை மூடுவதற்கு எதிராக, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரையிலும், எந்த சுமூகமான நிலையும் எட்டப்படவில்லை எனத் தொழிலாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

    சென்னை நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ளது ஃபோர்டு தொழிற்சாலை. இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் இயங்கி வரும் 2 தொழிற்சாலைகளையும், நட்டம் காரணமாக மூடப்போவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது.

    இதனால், ஃபோர்டு நிறுவனத்தில் நமிபியிருந்தவர்கள், தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என தொழிலாளர் சங்கங்கள் கூறுகின்றன. குஜராத்தில் இயங்கி வரும் ஃபோர்டு நிறுவனத்தை, டாடா நிறுவனம் வாங்க முன்வந்துள்ளதால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் காப்பாற்றப்படுவார்கள். ஆனால், தமிழ்நாடு தொழிலாளர்கள் நிலை மிகவும் மோசமாகியுள்ளது.

    ஃபோர்டு..

    அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 1996ஆம் ஆண்டில் சென்னைக்கு அருகில் மறைமலைநகர் கீழக்கரணை கிராமத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிறுவியது. இதில் 2,700 நிரந்தர தொழிலாளர்களை நியமனம் செய்து, ஒன்பது வகையான கார்களை தயாரித்து, ஏறக்குறைய 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.

    ஆண்டிற்கு 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், கடந்த சில வருடங்களில் 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. குறிப்பாக, கொரோனா காலத்தில் உற்பத்தி அதிகளவு பாதிக்கப்பட்டது.

    இதனால் ஃபோர்டு நிறுவனம் பெரும் நட்டத்தில் இயங்கி வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், ஃபோர்டு நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தான் தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது என ஃபோர்டு நிறுவனம் தொழிலாளர்களிடையே தெரிவித்திருந்தது.

    இதனால் தமிழகத்தில் நேரடியாக 15,000 தொழிலாளர்களும், மறைமுகமாக 25,000 தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். தொழிற்சாலைகளை மூடுவதால், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக, ஊழியர்கள் சங்கத்தைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது. கடந்த ஒரு வருடமாக ஃபோர்டு தொழிலாளர் சங்கத்துடன் ஃபோர்டு நிறுவனம், 40 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஆனால், பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது.

    ஃபோர்டு தொழிற்சாலை மூடப்படுவதற்கு இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருப்பதால், பணி செய்ய வரும் தொழிலாளர்களிடம் நாங்கள் போராட மாட்டோம் என கையொப்பம் பெற நிர்வாகம் முயற்சி செய்கிறது. தொழிலாளர்கள் அனைவரும் கடந்த 6 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், தொழிலாளர்கள் இன்னும் வீடு திரும்பாததால், இவர்களின் பிள்ளைகள் மிகவும் கலக்கத்துடன் பணிக்குச் சென்ற தங்களது பெற்றோரைத் தேடி தொழிற்சாலையை நோக்கி வருகின்றனர்.

    அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு தொழிற்சாலை, பெரும் நட்டத்தில் இயங்கி வருகிறது என சொல்லப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்நிறுவனத்தின் முதலீடு மற்றும் உற்பத்தி அனைத்துமே அமெரிக்க நிறுவனத்தைச் சார்ந்தது தான் இயங்கி வந்தது.

    தற்போது, அமெரிக்க ஃபோர்டு நிர்வாகம் தென்னாப்பிரிக்காவில் 3.6 பில்லியன் டாலர் முதலீட்டில் மூன்று தொழிற்சாலைகளைத் தொடங்கத் திட்டமிட்டு இருக்கிறது. தாய்லாந்தில் தொழிற்சாலையை விரிவுபடுத்தவும், பல நாடுகளில் புதிதாக முதலீடு செய்யவும் உள்ள நிலையில், நிறுவனம் எப்படி நட்டம் எனக் கூறி ஆலையை மூடமுடியும்? அப்படி மூடினால், இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தரப் தொழிலாளர்களுக்கு, அமெரிக்காவில் உள்ள இழப்பீட்டுத் தொகையை வழங்க அந்நிறுவனம் முன்வர வேண்டும் என ஃபோர்டு நிறுவன ஊழியர் அசோக் கூறியுள்ளார்.

    உழைத்தவர்களின் நிலை..

    கடந்த 25 வருடங்களாக சிறுநீர் கூட கழிக்க நேரமில்லாமல் இந்த நிறுவனத்துக்காக உழைத்த எங்களின் நிலை, தற்போது பரிதாபமாக உள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வலசை வரும் பறவைகள் போல் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து எச்சங்களை மட்டும் விட்டுவிட்டு மீண்டும் திரும்பிச் சென்று விடுகிறார்கள் எனக் கோபமாக பேசுகிறார், சிஐடியூ மாநில துணைப் பொதுச் செயலர் எஸ்.கண்ணன்.

    ஃபோர்டு நிறுவனம் மூடப்பட்டால் பாதிக்கப்படுவது, 40,000 தொழிலாளர்கள் அல்ல 40,000 குடும்பங்கள். தொழிற்சாலை மூடப்பட்டு விட்டால் தொழிலாளிகளின் நிலை என்னவாகும், தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை இந்நிறுவனம் வழங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    வைகாசி விசாகம் 2022 : பூஜை செய்யும் முறையும் அதன் பலன்களும் உங்களுக்காக இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....