சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அநேக இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில்,
அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சாந்தி விஜயா பள்ளி மற்றும் நீலகிரி மாவட்டம் மசினகுடி ஆகிய பகுதிகளில் 10 செ.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.