Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி மாணவி மரணம் கொலை அல்ல.. நீதிமன்றம் கூறியது என்ன?

    கள்ளக்குறிச்சி மாணவி மரணம் கொலை அல்ல.. நீதிமன்றம் கூறியது என்ன?

    மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிருஷ்டவசமானது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த மாணவி ஶ்ரீமதி மரணம் தொடர்பாக அப்பள்ளியின் தாளாளர் ரவிகுமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து, 5 பேரும் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதுதொடர்பாக விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

    இந்நிலையில், இவர்கள் 5 பேருக்கும் உரிய ஜாமின் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஜாமீன் நிபந்தனை குறித்து உத்தரவு பிறப்பித்தார்.

    அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    மாணவி மரண வழக்கில் கைதான பள்ளியின் தாளாளர், செயலர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும். ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிபிரியா ஆகியோர் 4 வாரங்களுக்கு சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். பின்னர், 4 வாரங்களுக்கு நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிபிசிஐடி காவல்துறையினர் முன் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும். 

    இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதன்பின்பு, மாணவியின் இரு உடல்கூறாய்வு அறிக்கைகளையும் ஆய்வு செய்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த மூவர் குழு உயர்நீதிமன்றத்தில் அண்மையில் அறிக்கை தாக்கல் செய்தது. 

    அந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதி கூறியதாவது:

    மாணவி பாலியல் பலாத்காரமோ, கொலையோ செய்யப்படவில்லை என்பது மருத்துவக் குழு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெளிவாகிறது.

    மேலும், மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிருஷ்டவசமானது. பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய துரதிருஷ்டவசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

    மாணவியின் தற்கொலைக் குறிப்பில்கூட, ஆசிரியர்கள் அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை. நன்றாக படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உத்தரவிடுவது என்பது ஆசிரியர் பணியின் ஓர் அங்கம்.

    இவ்வாறு நீதிபதி கூறினார்.

    மேலும், படிப்பில் சிக்கல்களைச் சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு நீதிமன்றம் வருத்தத்தை பதிவு செய்கிறது என்றும் இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறக் கூடாது என்றும் நீதிபதி தெரிவித்தார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....