சென்னை: தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில்,
அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் 20 செ.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.