Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மாமன்னன் ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? - சரத்குமார் காரசார பதிவு!

    மாமன்னன் ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? – சரத்குமார் காரசார பதிவு!

    மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில், தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 

    மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்த விவாதங்கள் அனலாக நடைபெற்றுக்கொண்டிருக்க நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் இது குறித்து மனம் திறந்துள்ளார். 

    அவர் தெரிவித்திருப்பதாவது: 

    மாமன்னன் ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? சைவம் இந்து மதமா? என்பது பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்று கொண்டிருக்கிறது.

    சிவன், விஷ்ணு , சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை கி.பி. 8- ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் என ஆறு பிரிவுகளாக பிரித்தவற்றை, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம், சமணம், பௌத்தம், சீக்கியம் மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக ‘இந்து சமயம்’ என வரையறுத்துள்ளது.

    1790ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது, கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும் பிரிவு சமயங்களை சேர்த்து, சிந்து நதியில் இருந்து மருவிய ‘இந்து’ என்ற பெயரிடப்பட்டது.

    இதையும் படிங்க: பொதுத் தேர்வில் முதலிடம்; முதன் முறையாக ஹெலிகாப்டரில் பயணம் செய்த மாணவர்கள் உற்சாகம்!

    குரங்கிலிருந்து வந்தவன் மனிதன், மனிதகுரங்கு எதிலிருந்து வந்தது? குரங்கு விலங்கு என்றால், விலங்கினத்திற்கு மனிதன் என பெயரிட்டது யார்? மனிதனை இப்போது குரங்கு என்று சொல்வோமா? அல்லது குரங்கை இப்போது மனிதன் என சொல்வோமா? இந்த சர்ச்சைகள் எல்லாம் நாட்டிற்கு தேவையான ஒன்று தானா?

    கிறிஸ்தவம் எப்போது உருவானது? கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? இஸ்லாம் எப்போது உருவானது? இஸ்லாமியர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? தேசம் முதலில் வந்ததா? இங்கு வசிக்கும் மக்கள் முதலில் வந்தார்களா? தமிழ்நாடு முதலில் வந்ததா? தமிழர்கள் முதலில் இங்கு இருந்தார்களா? சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றி விட்டோம், ஆனால், இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம்?

    கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்? யார் முதலில் வந்தார்கள்? எது முதலில் வந்தது? என்பதை வைத்து பின்னாளில் மாற்றியமைக்கப்பட்ட பெயரை விடுத்து ஆதிகால பெயரையே அழைக்க தீர்மானிப்பது அறிவார்ந்த செயலாக இருக்க முடியுமா? காலத்திற்கேற்ற ஆட்சியமைப்பு – ஒருங்கிணைப்பு – வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது – அப்போது ஹோமோசேப்பியன்ஸ் என்றிருந்த மனித இனத்தை இன்றும் அவ்வாறு அழைக்கிறோமா?

    சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை . அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்?

    இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாக கொண்டது. அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில், தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது.

    மனித இனத்தின் அடிப்படை தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை இருக்க இடம், சுவாசிக்க தூய்மையான காற்று, கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம், தனிமனித வாழ்க்கைத்தர உயர்வு அனைவருக்கும் சமமாக கிடைக்கப்பெறுவது எப்போது?

    புவி வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, இயற்கை சீர்கேடு, நோய்த் தொற்று பரவல், புதுப்புது வைரஸ் தாக்கம், சமூக சீர்கேடுகள் என தேசத்தில் நடந்தேறும் நிலையை தடுப்பது எப்படி? மாற்றுவது எப்போது?

    மக்கள் நலனுக்கான முற்போக்கு சிந்தனைகளில் நேரத்தை செலவிடாமல், பின்னோக்கி சென்று வரலாற்றில் சாதித்த மன்னர்களின் புகழை ஆராயாமல் சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா? பொய்யா? என மீண்டும் மீண்டும் பேசி சர்ச்சைக்குரிய ஒன்றாக உருவாக்குவது நியாயமா?

    விலங்கினமாக இருந்த இனம் இரு கற்களை உரசி தீப்பொறி உருவாகுவதை கண்டுபிடித்ததில் இருந்து, சக்கரங்கள், உலோகங்கள் என அன்றாட கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் நீண்டு செல்கிறது. அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் ஆலிஸ் என பெயரிடப்பட்ட உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்துள்ளது.

    நாளைய மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும் போது, செவ்வாய் கோள்களில் குடியேற சிந்திக்கும் போது, ராஜ ராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று விவாதிக்காமல், உலக அதிசயங்களுள் ஒன்றாக வைத்து போற்றக்கூடிய மாபெரும் புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவிலை மக்களுக்கு அர்ப்பணித்த அந்த மாமன்னன், வீரத் தமிழன் ராஜ ராஜ சோழனின் புகழை உலகின் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

    இவ்வாறாக சரத்குமார் தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....