Wednesday, May 8, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'கெட்ட பையன் சார் இந்த காளி' -இன்றும் கொண்டாடப்படும் ரஜினியின் வசனங்கள்

    ‘கெட்ட பையன் சார் இந்த காளி’ -இன்றும் கொண்டாடப்படும் ரஜினியின் வசனங்கள்

    ரஜினிகாந்த் – இந்திய சினிமாவின் முதன்மையான அடையாளமாய் தற்போது திகழ்ந்துக் கொண்டிருக்கும் நடிகர். ஆக்‌ஷன், ஸ்டைல், நகைச்சுவை, உணர்ச்சிவசம் என சகலத்திலும் வல்லவனாய் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இந்திய திரையுலகின் முக்கியமான நட்சத்திரம் என்றால் அது மிகையாகாது. எங்கே தொடங்கியது ரஜினிகாந்தின் திரைப்பயணம், எப்போது நிகழ்ந்தது ரஜினிகாந்தின் பரிணாமங்கள்? வாருங்கள் காண்போம்.

    கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975-ம் ஆண்டு சிவாஜி ராவ் என்பவர் ‘ஆபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அந்த அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் கதவைத் திறப்பதுப்போல், ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சி திரைப்படத்தில் வரும்போது இந்திய திரையுலகத்தை ஆள, ஒருத்தர் திரைத்துறை கதவைத் திறந்துக்கொண்டு வந்திருக்கிறார் என்று எவருக்கும் தெரியாது.

    கதவைத் திறந்துகொண்டு வந்தவருக்கு ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டப்பட்டது. அபூர்வ ராகங்களுக்குப் பிறகு, சில திரைப்படங்களில் நடித்தாலும், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1976-ம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சு திரைப்படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு வெகுஜன மக்களையும், திரைத்துறையினரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

    பலரும் கொண்டாடிய நடிகர் ரஜினியின் சிகெரட் ஸ்டைல், மூன்று முடிச்சு திரைப்படத்தில்தான் முதல்முதலாக அரங்கேற்றப்பட்டது. எந்தக் கதாப்பாத்திரமாக இருந்தாலும், தனது ஸ்டைலை கதாப்பாத்திரத்தின் தகவமைப்பு சிதையா வண்ணம் புகுத்தக்கூடிய கெட்டிக்காரராக திகழ்ந்தார், நடிகர் ரஜினிகாந்த்.

    1977-ம் ஆண்டு வெளியான அவர்கள், கவிக்குயில், 16 வயதினிலே போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தார், நடிகர் ரஜினிகாந்த். 16 வயதினிலே திரைப்படத்தில் ‘இது எப்படி இருக்கு’ என்று ரஜினிகாந்த்  பேசிய வசனம், 45 ஆண்டுகள் கழித்தும் இன்றளவும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.

    வில்லன் கதாபாத்திரத்திற்கு என்று திரைப்படச் சமூகம் வைத்திருந்த அத்தனை அளவுகோல்களுக்கும் கனக்கச்சிதமாக பொருந்திய ரஜினிகாந்த்தை, வில்லன் கதாப்பாத்திரமாகவே பாவிக்கத் தொடங்கியது, தமிழ்த் திரையுலகம். ஆனால், அந்த பாவித்தலை உடைத்தெறிந்து, கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்து 1978-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் பைரவி. ‘சூப்பர் ஸ்டார்’ என்று பட்டம் முதன்முதலில் பைரவி திரைப்படத்தின் போது தான் நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.   

    பைரவி திரைப்படம் வெளியான அதே ஆண்டு வெளியான மற்றொரு திரைப்படம்தான், ‘முள்ளும் மலரும்’. இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், காளி எனும் கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் தனது நடிப்பின் காந்தத்தால் பெரிய ஈர்ப்பை நிகழ்த்தினார். 

    ‘கெட்ட பையன் சார் இந்த காளி’ இப்போதும் ரசிகர்களிடத்தில் பரவலாக உபயோகிக்கப்படும் ஒரு வசனமாக திகழ்கிறது. ரஜினிகாந்த் தன்னை மீண்டும் மீண்டும் சிறந்த நடிகனாக நிரூபனம் செய்துகொண்டே இருந்தார்.

    தனது கதாப்பாத்திரங்களினூடே பல வேறுபாடுகளைக் காண்பித்த ரஜினிகாந்த் 1978-ம் ஆண்டு இறுதியில் வெளிவந்த ப்ரியா திரைப்படத்தில், அதுவரை இல்லாத கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். ‘ஓ பிரியா’ என்று ரஜினிகாந்த சிங்கப்பூரில் பாடி உழல்வது இன்றளவும் பலருக்கும் விருப்பமான ஒன்றுதான். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது திரை வாழ்வில் மற்றொரு பரிணாமத்துக்கு சென்றார் என்றே கூற வேண்டும்.

    ஆம், புவனா ஒரு கேள்விக்குறி, ஆடு புலி ஆட்டம், ப்ரியா, ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்கள் இருவர் கூட்டணியிலும் வெளியாகி நற்பெயரை மக்களிடம் ஈர்த்துக்கொண்டிருந்த வேளையில், ரஜினிகாந்தை கொண்டாட வைத்த திரைப்படம்தான் முரட்டுக்காளை. இத்திரைப்படத்தில் கிராமப்புற ஆக்‌ஷனில் ரஜினிகாந்த் காளையாக சீறிக்கொண்டிருக்க.. முரட்டுக்காளை மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. 

    இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் ஆக்‌ஷன் மற்றும் மசாலா கலந்த திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து நடிக்க ஆரம்பித்தார். ஆக்‌ஷன் மற்றும் மசாலா என்று ஒரே தலைப்பின் கீழ் கொண்டு வந்தாலும், அதிலும் வேறுபாடுகளை நிகழ்த்தியவாறே ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருந்தார். 

    பில்லா, ஜானி, பொல்லாதவன், முரட்டுக்காளை, கழுகு போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தில்லு முல்லு, போக்கிரி ராஜா போன்ற திரைப்படங்களில் நகைச்சுவையாகவும் நடித்திருப்பார். தில்லு முல்லு திரைப்படத்துக்கு திரையரங்குகள் சிரிப்பலையால் நிறைந்ததை, இப்போதும் பலர் சொல்லக் கேட்கலாம். 

    ரஜினிகாந்தின் திரைப்பயணம் அடுத்தப்பாகம் விரைவில் வெளிவரும்!

    பொன்னியின் செல்வன் இசை வெளியீடு! யாரெல்லாம் வருகிறார்கள் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....