Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்செந்தில் பாலாஜிக்கு 'செக்' வைத்த உச்சநீதிமன்றம்.. பண மோசடி வழக்கில் திருப்பம்

    செந்தில் பாலாஜிக்கு ‘செக்’ வைத்த உச்சநீதிமன்றம்.. பண மோசடி வழக்கில் திருப்பம்

    தமிழ்நாடு மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போடப்பட்டிருந்த பணமோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பு தவறானது என உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தததோடு, இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

    2011 – 16 வரையிலான மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான, ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக, கணேஷ் குமார், தேவசகாயம் என்பவர்கள், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

    இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார், தனி உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னை, கரூர், திருவண்ணாமலை, கும்பகோணம் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது மோசடி நடைபெற்ற காலகட்டங்களில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள், பணம் பெற்றதற்கான விவரப் பட்டியல் போன்றவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட 3 குற்ற வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான செந்தில் பாலாஜியின் உதவியாளர் சண்முகம் தாக்கல் செய்த மனுவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு விட்டதால், அவர்கள் சமரசமாக போக விரும்புவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து கூறியிருந்தார்.

    இதனையடுத்து இரண்டு தரப்பினரின் கருத்துக்களையும் பதிவு செய்துகொண்ட உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து 30.07.2021 அன்று உத்தரவிட்டது.

    சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, பொறியாளர் தரப்பில் பாதிக்கப்பட்டு போலீஸ் தரப்பு சாட்சியாக இருந்த தர்மராஜ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில் பொறியாளரான தர்மராஜுக்கு உரிய கல்வி தகுதி இருந்தும் வேலை கிடைக்காமல் போனதாகவும், தகுதியற்ற நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வேலை மோசடி பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் சண்முகம் ஆகியோர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர், போபண்ணா, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

    இந்நிலையில், இந்த வழக்கிற்கான விசாரணை நேற்று நடைபெற்று அதற்கான தீர்ப்பையும் நீதிபதிகள் வழங்கினர். அதில் பொதுவாக சமரசமாக செல்வது என்ற காரணத்துக்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் ரத்து செய்ய முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு தவறானது என்பதால் அதை நாங்கள் செல்லாது என்று ரத்து செய்து தீர்ப்பளிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

    அரசு ஊழியர்கள் ஊழல் செய்வது, அரசுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்துக்கும் எதிரான செயல். இந்த வழக்கை, தமிழக அரசு மீண்டும் துவக்கத்தில் இருந்து முழுமையாக விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல மற்ற 2 வழக்குகளிலும் சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை நீக்க தமிழக அரசுமனு தாக்கல் செய்து, அந்த வழக்குகளையும் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

    உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இந்த உத்தரவுகளை அடுத்து, செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் மீண்டும் துவக்கத்திலிருந்து விசாரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், செந்தில் பாலாஜி பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....