Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'ஞானவாபி மசூதி விவகாரம்; சர்ச்சைகளை கிளப்பிவிட்டு வரக்கூடாது' - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

    ‘ஞானவாபி மசூதி விவகாரம்; சர்ச்சைகளை கிளப்பிவிட்டு வரக்கூடாது’ – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

    ”ஞானவாபி மசூதி – காசி விஸ்வநாதர் கோயில் பிரச்சனைக்கு சுமுக தீர்வு காணப்பட வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், ஞானவாபியின் நடுவில் உள்ள ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேடுகிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்கு வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, இந்த மனுவை வாரணாசி மாவட்ட விரைவு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ”ஞானவாபி மீது சிறப்பு பக்தி இருந்தது. அதன்படி மக்கள் ஏதாவது செய்தாலும் பரவாயில்லை. ஆனால் மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தை தேட வேண்டும். ஞானவாபி சர்ச்சை சில நம்பிக்கை சிக்கல்களை உள்ளடக்கியது. ஞானவாபி மசூதி – காசி விஸ்வநாதர் கோயில் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட வேண்டும்.

    உண்மைகளை வெறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்….

    இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினர் ஒன்றாக அமர்ந்து பிரச்னையை சமரசமாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். நீதிமன்றம் அதன் தீர்ப்பை வழங்கும்போது அது எப்படியிருந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்குவது பொருத்தமற்றது. இந்துக்களும் முஸ்லிம்களும் வரலாற்று உண்மைகளை வெறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது நீதித்துறை புனிதமானது. மிகவும் உயர்ந்தது என்று கருதி நாம் அதன் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். அதனால், அதன் முடிவுகளை எல்லாம் நாம் கேள்வி கேட்கக் கூடாது. இது தொடர்பாக இப்படி சர்ச்சைகளை கிளப்பிவிட்டு வரக்கூடாது. இந்துக்களும் சரி, முஸ்லிம்களும் சரி, வரலாற்று உண்மைகளை வெறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    எந்தவித வழிபாட்டு முறைகளுக்கும் எதிராக இந்துக்கள் ஒருபோதும் எதிர்ப்பை கொண்டிருக்கவில்லை. நாங்கள் எல்லாவற்றையும்தான் ஏற்றுக்கொள்கிறோம். எல்லாவற்றையும்தான் புனிதமாக கருதுகிறோம். அவர்கள் அந்த வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் நமது ரிஷிகள், முனிகள், க்ஷத்திரியர்களின் வழித்தோன்றல்கள். நாங்கள் அதே மூதாதையர்களின் வழித்தோன்றல்கள், இந்துக்கள், முஸ்லிம்களுக்கு எதிராக ஒருபோதும் நினைப்பதில்லை. காரணம், பண்டைய கால முஸ்லிம்களும், ஹிந்துக்கள் தான்.

    ஞானவாபி பிரச்னை பல காலமாக நடந்து கொண்டு இருக்கிறது. வரலாற்றை நாம் மாற்ற முடியாது. அதனை, இன்றைய ஹிந்துக்களோ அல்லது இஸ்லாமியர்களோ உருவாக்கவில்லை. இது முன்னர் நடந்தது. வெளியில் இருந்து தாக்குதல் நடத்துபவர்கள் மூலம் இஸ்லாம் வந்தது. இந்த தாக்குதல்களில், சுதந்திரத்தை விரும்பியவர்களின் மன உறுதியை குறைக்க கோவில்கள் இடிக்கப்பட்டன.

    புதிதாக எந்தவொரு இயக்கத்தையும் ஆரம்பிக்க ஆர்எஸ்எஸ் ஆதரவாக இல்லை. தினமும் புதிது புதிதாக பிரச்னைகளை வெளிக்கொண்டு வரக்கூடாது. பிரச்னையை நாம் ஏன் பெரிதாக்க வேண்டும். ஹிந்துக்கள் எந்தவொரு பிரச்னையை எழுப்பும் முன்னர், முஸ்லிம்களும் நமது மக்கள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    அவர்களின் நம்பிக்கை மட்டுமே மாறியுள்ளது. அவர்கள் திரும்பி வர தயாராக இருந்தால், திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும். அவர்கள் விரும்பாவிட்டாலும், நாம் அதிருப்தி அடைய தேவையில்லை. வலுவான இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து அழைத்து செல்வோம். யாரையும் புறக்கணிக்க மாட்டோம்” இவ்வாறு அவர் பேசினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....