Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக நாமும் ஏன் அப்படி நடக்க வேண்டும்?- ஓ.பன்னீர்செல்வம்

    அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக நாமும் ஏன் அப்படி நடக்க வேண்டும்?- ஓ.பன்னீர்செல்வம்

    சென்னை: அவர்கள்‌ அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள்‌ என்பதற்காக, நாமும்‌ அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்‌ என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    “யாமறிந்த மொழிகளிலே தமிழ்‌ மொழி போல்‌ இனிதாவது எங்கும்‌ காணோம்‌” என்ற பாரதியாரின்‌ வரிகளும்‌, “திங்களோடும்‌, செழும்‌ பரிதி தன்னோடும்‌, விண்ணோடும்‌, உடுக்களோடும்‌, பொங்குகடல்‌ இவற்றோடும்‌ பிறந்த தமிழ்‌” என்ற பாரதிதாசன்‌ வரிகளும்‌ தமிழ்‌ மொழியின்‌ சிறப்பை நமக்கு எடுத்துரைக்கின்றன.

    இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்‌ மொழியை பிறர்‌ போற்றும்‌ வண்ணம்‌ நாகரிகமாக நாம்‌ பயன்படுத்த வேண்டும்‌. நாகரிகம்‌ என்பது எண்ணத்தாலும்‌, சொல்லாலும்‌, செயலாலும்‌ தூய்மையாக நடந்து கொள்வது ஆகும்‌. “உயர்ந்த நிலையில்‌ இருந்தும்‌ உயர்ந்த குணம்‌ இல்லாதவர்‌ சிறியோர்‌. கீழ்‌ நிலையில்‌ இருந்தாலும்‌ இழிவான குணம்‌ இல்லாதவர்‌ பெரியோர்‌” என்றார்‌ வள்ளுவப்‌ பெருந்தகை.

    பேரறிஞர்‌ அண்ணா அவர்கள்‌ நண்பர்களோடு காரில்‌ சென்று கொண்டிருந்தார்‌. அப்போது போகிற வழியில்‌ ஒரு பொதுக்‌ கூட்டம்‌ நடந்து கொண்டிருந்தது. அதில்‌ பேசிய பேச்சாளர்‌ பேரறிஞர்‌ அண்ணா அவர்களை வாய்க்கு வந்தபடி வசைபாடிக்‌ கொண்டிருந்தார்‌. காரை நிறுத்தச்‌ சொல்லி, ஒரு ஓரத்தில்‌ யாருக்கும்‌ தெரியாமல்‌ , முழுவதும்‌ கேட்டுவிட்டுப்‌ பயணத்தைத்‌ தொடர்ந்தார்‌ பேரறிஞர்‌ அண்ணா அவர்கள்‌, காரில்‌ இருந்த நண்பர்‌ அண்ணாவிடம்‌ “ஏன்‌ அண்ணா உங்களை அவர்கள்‌ வசைபாடுகிறார்கள்‌” என்று கேட்டார்‌.

    அண்ணா பதில்‌ ஏதும்‌ பேசாமல்‌ மெளனம்‌ காத்தார்‌. கொஞ்ச தூரம்‌ சென்றபின்‌, ஒரு மாட்டு வண்டியை பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ கார்‌ முந்த வேண்டி இருந்தது. ஓரமாகச்‌ செலுத்தி மாட்டு வண்டியை கடந்தார்கள்‌. அப்போது மாட்டு வண்டியை ஓட்டியவர்‌, கார்‌ டிரைவரை நோக்கி வசைபாடினார்‌.

    அப்போது காருக்குள்‌ இருந்த நண்பர்களிடம்‌ பேரறிஞர்‌ அண்ணா அவர்கள்‌, பார்த்தீர்களா? கார்‌ வேகமாகக்‌ போகிறது. மாட்டு வண்டியால்‌ இதற்குச்‌ சமமாக வர முடியவில்லை. அதுதான்‌ கோபம்‌. அதனால்‌ நம்மை திட்டுகிறார்‌. அவருக்குச்‌ சமமாக நாம்‌ வசைபாடாமல்‌ நம்‌ வேகத்தை அதிகரித்து, போக வேண்டிய இடத்தை அடைய வேண்டும்‌. இந்த நிலைமையில்‌ தான்‌ அந்தப்‌ பேச்சாளர்‌ இருக்கிறார்‌. நம்‌ வளர்ச்சி பொறுக்காமல்‌ சிலர்‌ திட்டுவார்கள்‌. நாம்‌ அதைத்‌ தாங்கி கொண்டு வளர்ச்சி வேகத்தை கூட்ட வேண்டும்‌. பிறர்‌ ஏசும்‌ ஏச்சை உரமாக்கிக்‌ கொண்டு வளர வேண்டும்‌” என்றார்‌.

    போறிஞர்‌ அண்ணா அவர்கள்‌ சொன்னதைப்‌ போல, நம்‌ வளர்ச்சி, நமக்கு மக்களிடையே உள்ள ஆதரவு நம்மை நாகரிகமற்ற முறையில்‌ பேசுபவரை கவர்ந்திருக்க வேண்டும்‌. அவர்கள்‌ மக்களுடைய வெறுப்பிற்கும்‌,. தொண்டர்களுடைய கோபத்திற்கும்‌ ஆளாகியுள்ளனர்‌. அதை அவர்களால்‌ தாங்கிக்‌ கொள்ள முடியவில்லை. அந்த இயலாமைதான்‌ நம்‌ மேல்‌ கோபமாக மாறி  இருக்கிறது. இந்தக்‌ கோபம்தான்‌ நாகரிகமற்ற, பண்பாடற்ற, ஒழுங்கீனமான வார்த்தைகளை உபயோகப்படுத்த வைக்கிறது.

    இவற்றையெல்லாம்‌ மனதில்‌ நிலை நிறுத்தி, அரசியல்‌ ரீதியாக நம்மை யாராவது தாக்கினாலும்‌, சொல்லுக்குச்‌ சொல்‌, வாதத்திற்கு வாதம்‌, பேச்சுக்கு பேச்சு என்ற அளவிலே நயத்தகு நாகரிகம்‌ மிக்கவர்களாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர, அவர்கள்‌ அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள்‌ என்பதற்காக, நாமும்‌ அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்‌ என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்‌ தொண்டர்களையும்‌, நிர்வாகிகளையும்‌ அன்போடு கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

    இவ்வாறு, தனது அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....