Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குஇயலும் இசையும்சோர்ந்த மனதை தேற்ற யுவன் பாடிய பாடல்; வாழ்வு என்பது இவ்வளவுதான்!

    சோர்ந்த மனதை தேற்ற யுவன் பாடிய பாடல்; வாழ்வு என்பது இவ்வளவுதான்!

    வாழ்வு, நமக்கு வாழ்வு என்ற ஒன்று இருக்கிறதா எனும் கேள்வியை நம்முன் வைக்கும் மாத்திரத்தில், தொடர்ந்து இருள் மட்டுமே நிலவிக்கொண்டிருக்கும் தினசரி நாட்களில், வெறுமை மேகமாய் நம்மின் மீது படர்ந்திருக்கும் பொழுதில், நம்மை வாழ்வில் கொஞ்சம் முன்நகர்த்த எதுவோ ஒன்று நமக்குத் தேவைப்படுகிறது.  நபரோ, நண்பர்களோ, காதலோ, ஒரு பொருளோ, கவிதையோ பாடலோ எதுவாக வேண்டுமானாலும் அந்த ஒன்று இருக்கலாம். 

    அப்படியான ஒன்றாக பலருக்கும் பாடல்கள் இருக்கும். இருண்டப் பொழுதில் சிறு ஒளியாய் பாடல் வந்து செவியின் வழியே மனதிற்குள் இறங்கும். அப்படி இறங்குகையில் குறைந்தப் பட்சம் சில நிமிடங்களாவது வாழ்வின் மீதான ப்ரியம் அல்லது பாத்துக்கலாம் என்ற உணர்வு ஏற்படும். இப்படியான உணர்வுகளைத் தரும் பல பாடல்களில் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் நிச்சயம் இருக்கும். விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படத்தில் ‘ஏ ராசா’ என்ற பாடலும் மேற்சொன்ன உணர்வைத் தரும் வல்லமையைப் படைத்ததுவே! 

    ‘ஏ ராசா’…

    பா. விஜய் அவர்களின் வரிகளில் யுவன் இசைத்து பாடிய இப்பாடலானது இருளின் அடர்த்தியில் ஒளிரும் மின்மினி பூச்சிகளின் சாயலைக் கொண்டுள்ளது. முதலில் பல்லவி ஆரம்பிக்கும் முன்னமே மெல்லிய இசை நம் செவிக்குள் அனுப்பப்படுகிறது. பிறகு ‘நெனச்சது ஒன்னு நடந்தது ஒன்னு ஏ ராசா – நீ கேட்டது ஒன்னு கெடச்சது ஒன்னு ஏ ராசா’ என யுவன் நம்மின் தனிப்பட்ட வாழ்வை பாடுகிறார். ஏ ராசா என அவர் சொல்ல நாமும் பாடலுக்குள் செல்லும் மாயை நிகழ்ந்து விடுகிறது. 

    வாழ்வில் எதை எதையோ தேடி,  ஓடி அலைந்து, நம்மைத் தேட நாமே சென்று, பிறகு அவ்வழியில் நம்மை நாமே தொலைத்து நிற்கையில் கேட்க விரும்பும் உணர்வுகளில் ஒன்றான ஆறுதலை யுவன் கீழ்காணும் வரிகளின் மூலம் நமக்கு நல்கிறார்.

    வாழ்க்க ஒன்னும் பாரமில்ல வா லேசா

    நம்பிக்கைய விட்டுடாத வா ராசா

    தன்னம்பிக்கை ஒன்னே ஒன்னு போதாதா

    உன் சோகம் தீரும் பாதை மாறும் வா ராசா

    இதற்கு முன்பு பல்லவியில் நம் வாழ்வில் நிகழும் தேய்ப்பிறையைக் கூறிய பா. விஜய் அவர்கள் சரணத்தில் வாழ்வில் வளர்ப்பிறையும் வரும் துவளாதீர்கள் என யுவனின் மெல்லிய குரலின் வழியே நமக்கு நம்பிக்கையைத் தர முயலுகிறார். 

    தன்னால எதுவும் இங்க மாறப்போறதில்லை

    முன்னால நீயும் எழுந்து வா மெல்ல

    யாரால ஆகுமுன்னு மலைச்சுப்போயி நின்ன

    உன்னால எதுவும் முடியும் வா முன்ன

    இந்த முயற்சியைக் கடந்த பின் வாழ்வின் சாராம்சத்தில் ஒன்றை பாடலில் சுருக்கமாக விதைக்கிறார், பாடலாசிரியர் பா. விஜய். ஆம்! “எல்லாருக்கும் நேரம் வரும்….நல்லாருக்கும் காலம் வரும்” என வாழ்வின் அழகிய அம்சத்தை விதைத்து விட்டு பாடலின் அடுத்த தளத்திற்கு செல்கிறார். பாடலில் அடுத்த தளம் என்பது உண்மையினூடே நேர்மறை எண்ணங்களை தெளிப்பதாக உள்ளது.  அந்த மெல்லிய தெளிப்பு, மாற்றங்கள்தான் மாறாதது..உன் வாழ்க்கையும் கைமாறுது என்ற வரிகளில் வெளிப்படும்.

    இவை அனைத்தையும் கேட்டப்பிறகும் நமக்கு ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்வி நமக்குள் எழும்ப துடிக்கும். அந்த துடிப்பிற்கு பதிலாய் பாடலின் முன்னிறுதியில் ஒரு சரணம் உள்ளது.  அச்சரணம் யாதெனில், 

    அப்பப்போ தெய்வமும் குட்டிவிடும்

    அப்பத்தான் புத்தி வரும்

    எண்ணங்கள் உன்னிடம் சுத்தம் என்றால்

    வெற்றி உன்னை சுற்றி வரும்….

    அண்டத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அவ்வபோது நிம்மதியாய் வாழும் நேரம் அமைவதென்பது அண்ட சாராசரத்தின் நியதியாம். ஆக, நிம்மதியாய் வாழும் காலங்கள் உங்கள் வாழ்வில் அரும்பட்டும்! வாழ்வு இனிதாகட்டும்! 

    61 வருடங்களுக்குப் பிறகும், பல திரைப்படங்களில் இப்பாடல் ஒலிக்கிறது; ஏனென்றால்…….?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....