Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குஇயலும் இசையும்தலைவனில்லாமல் தலைவி ஏக்கத்தில் வாடி... பாட... குத்தாட்டம் போட வைக்கிறது 'மல்லீப்பூ' பாடல்!

    தலைவனில்லாமல் தலைவி ஏக்கத்தில் வாடி… பாட… குத்தாட்டம் போட வைக்கிறது ‘மல்லீப்பூ’ பாடல்!

    ஒவ்வொரு பாடலுக்கும் முக்கியமானது என்ன என்று கேள்வி எழும்புமாயின், பாடல்வரிகள், இசை, பாடகர்கள் என பதில்கள் வரும். ஆனால், பாடலாசிரியர் தரப்பில் இருந்து ஒரு பாடலுக்கு முக்கியமானது எது என்ற கேள்வி தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. அதற்கு பல பதில்கள் இருந்தாலும், அவற்றுள் ஒரு பதில் யாதெனில் ‘உரிப்பொருள்’. அதாவது எந்த சூழலுக்கு, எந்தவித உணர்வை கடத்த இப்பாடல் உண்டாக்கப்படுகிறது என்பது முக்கியம். அவ்வகையில் உரிப்பொருள் என்பது முக்கியமான ஒன்று. 

    இங்கே பிரிவை உரிப்பொருளாக கொண்டு ஒருபாடல் வெளியாகி அனைவரையும் ஆட்டம் போடச்செய்கிறது. கூடவே வருந்தவும், ஏங்கவும் செய்கிறது. அப்படியான ஒரு பாடல்தான், ‘மல்லீப்பூ வெச்சு வெச்சு வாடுதே’. சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் உள்ள ஒரு பாடல்தான் இது. இப்பாடலில் உள்ள மல்லிப்பூவின் வாசத்தை ஏ.ஆர்.ரகுமான் இசையும், மதுஶ்ரீ குரலும் மணக்கச் செய்கிறது. இந்த மணத்தை எல்லாரிடத்திலும் பரவ செய்கிறது. 

    சங்க காலத்தில் தலைவி தலைவனை பிரிந்திருக்கும் போது தன் ஏக்கங்களை பாடலாக வடிப்பது நிகழ்ந்திருக்கிறது. அப்படியாகத்தான், தற்போது ஒரு பெண்ணின் பார்வையில் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் என்ற உணர்வின் கொந்தளிப்பில் இருந்து எழுந்து வரும் தீப்பொறியாகவே இப்பாடல் இருக்கிறது. இந்த தீப்பொறி தன்னுள் காதல், காமம், ஏக்கம், கொண்டாட்டம் என பல உணர்வுகளை கொப்பளிக்கிறது. 

    “ஏ மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே …அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே …மச்சான் எப்போ வரப் போறே?”  என்றுதான் பாடல் ஆரம்பிக்கிறது. இசையிலும் குரலிலூம் குதூகலம் தொற்றிக்கொண்டாலும் வரிகளில் ஏக்கம் தீப்பொறியாக கொந்தளித்துக்கொண்டே இருக்கிறது.நான் இங்கே ஒத்தையிலே தத்தளிக்கிறேன், உன்ன தினமும் கனவுல மட்டும்தான் பாக்குறேன். நேர்ல எப்போ வரப்போற… பத்தமடைப் பாயில் எப்போ வந்து நீ சொக்கி விழப்போற என வரிகள் வெளிவர காதலோடான காமம் பற்றி எரிகிறது. 

    தினம் சொப்பனத்தில் மட்டும்தான்

    உன்னை நான் சந்திச்சேன்…

    ஏ… எப்போ வரப் போறே..?

    மச்சான் எப்போ வரப் போறே ?

    பத்தமடைப் பாயில் வந்து

    சொக்கி விழப் போறே ?

    தலைவனை காணாத சோகத்தில் தலைவியின் தினந்தின வாழ்வில் நிகழ்பவை கூட ஸ்தம்பித்துப் போயிருக்கின்றன. தலைவி வாசலை பார்க்கிறாள் அங்கே கோலம் இல்லை. கிணற்றுக்குள் வாளியை விடுத்து தண்ணீர் எடுக்கிறாள் வாளிக்குள் தண்ணீர் இல்லை. தலைவனை எண்ணிய ஏக்கத்தில் கோலம் போடுவதை மறந்தும், வாளியில் தண்ணீர் நிரம்புகிறதா கவனிக்காமலும் தலைவி தனது தினப்பொழுதை கழிக்கிறாள். வேலைத் தேடிச் சென்ற தலைவனுக்காக காத்திருந்து காத்திருந்து தலைவியின் கண்களில் நீர் சுரக்கிறது. அந்த கண்ணீரானது கப்பல் விடும் அளவுக்கு இருக்கிறது என கவிஞர் தாமரை விளக்குகிறார். 

    வாசலைப் பார்க்கிறேன்

    கோலத்தைக் காணோம் !

    வாளியை சேந்துறேன்

    தண்ணியைக் காணோம் !

    சோலி தேடிப் போனே

    காணாத தூரம்….

    கோட்டிக்காரி நெஞ்சில்

    தாளாத பாரம்…

    காத்திருந்து காத்திருந்து

    கண்ணு பூத்திடும் !

    ஈரமாகும் கண்ணோரம்

    கப்பல் ஆடும் ..!

    மேலும், தலைவன் தூரச்சென்றதும் துக்கம் தொண்டையை அடைக்கும், அவன் அருகில் இருப்பதே இந்த வாழ்வுக்கு போதுமென்ற எண்ணம் தலைவியை வாட்டுகிறது. மேலும், இரவுகளில் நேரும் ஆசைகள் விடிந்து கோழி கூவியப் பிறகும் நிறைவேறாமல் வேகும் என்றும், அங்கு நீயும் இங்கு நானும் வாழும் வாழ்வு என்ன வாழ்வோ என்று தலைவி வெந்து நொந்து போகிறாள். 

    தூரமாப் போனது

    துக்கமா மாறும் …

    பக்கமா வாழ்வதே

    போதுன்னு தோணும் !

    ஊரடங்கும் நேரம்

    ஓர் ஆசை நேரும் !

    கோழி கூவும் போதும்

    தூங்காம வேகும் !

    அங்கு நீயும் இங்கு நானும்

    என்ன வாழ்க்கையோ..!

    போதும் போதும்

    சொல்லாமல் வந்து சேரும் !

    தலைவியின் ஆவல் எந்தளவுக்கு இருக்கிறதென்றால், தலைவனை நினைத்து, அவனருகில் இல்லாததை உணர்ந்து விடும் பெருமூச்சியில் துணிகள் காயப்போட்டிருக்கும் கொடிகள் ஆடுகிறது அதேபோல மூச்சில் இருக்கும் அனலில் துணி காய்கிறது. இதன்பிறகு, தலைவன் தன்னருகில் இருப்பதாக தலைவி உருவகம் செய்து, கள்ளக்காலுடன் பேசும் தோணியில் பேசுகிறாள் என்றும் அப்படி பேசும்போது சத்தம் ஏதும் கேட்டால் பொய்யாகத் அவள் தூங்குகிறாள் என்றும் இப்பாடல் தலைவியின் ஏக்கத்தை கொட்டுகிறது. 

    பெரும் மூச்சுல

    துணிக்கொடி ஆடுது

    துணி காயுதே !

    கள்ளக்காதல் போல

    நான் மெல்லப் பேச நேரும் !

    இப்பாடலில் ஏக்கங்கள், பிரிவின் கொடூரங்கள் நிரம்பியிருந்தாலும் கேட்போரை இப்பாடல் குத்தாட்டம் போட வைக்கிறது என்பதே உண்மை. ‘மல்லீப்பூ வெச்சு வெச்சு வாடுதே’ பாடலில் உள்ள மென்சோகம் கேட்போரைத் தாக்குவதில்லை மாறாக கொண்டாட வைக்கிறது.

    இதையும் படிங்க: அரசியலுக்கு மொத்தமாக கும்பிடு போட்ட நெப்போலியன் – காரணம் என்ன தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....