இரஷ்ய ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு பகுதியைக் கைப்பற்றியது உக்ரைன் ராணுவம். உக்ரைனின் விமானங்களின் மீது குண்டுகளை வீசியெறிந்தது இரஷ்ய ராணுவம்.
நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து உக்ரைன் மீது இரஷ்ய ராணுவம் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் போர்த்தொடுத்து வருகிறது. இரஷ்ய ராணுவத்தினர் தரைவழியாகவும், வான்வழியாகவும் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் குண்டுகளைப் பொழிந்து வருகின்றனர். அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு பின்வாங்காமல் இரஷ்யாவுடனான போரை நீட்டித்துக் கொண்டே செல்கிறது.
இரு அரசுகளுக்கு இடையேயான இந்த போரில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் அண்டைநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். மேற்கு உக்ரைனில் உள்ள லுட்ஸ்க் மற்றும் இவானோ பிரான்கிவ்ஸ்க் நகரங்களில் உள்ள விமான நிலையங்களின் மீது இரஷ்யா குண்டுகளை வீசியதால் அங்குள்ள மக்களும் வேற இடங்களுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் வெளிவரவில்லை. ஆனால், நிரோவ் நகரில் இரஷ்யா வீசிய மூன்று குண்டுகளால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறிதும் போரிலிருந்து பின்வாங்காமல் போரிட்டு வரும் உக்ரைன் ராணுவம், இரஷ்ய ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பக்லானோவா முராவிகா பகுதியை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. மேலும், உக்ரைன் ரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கிறது என்ற இரஷ்ய ராணுவத்தின் குற்றசாட்டை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதியாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனில் உள்ள இரஷ்ய படைகளுக்கு உதவி செய்ய தன்னார்வலர்களை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இரஷ்ய-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரஷ்யா சார்பாக கலந்து கொண்டு பேசிய அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.