Sunday, March 17, 2024
மேலும்
    Homeவாழ்வியல்சுற்றுலாத்தளங்கள்சுற்றுலா பயணிகளை கவரும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி - ஒரு பார்வை

    சுற்றுலா பயணிகளை கவரும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி – ஒரு பார்வை

    காவிரி ஆற்றின் பாதையில் உள்ள ஒரு அழகிய சிறு கிராமம் இந்த ஒகேனக்கல் அல்லது ஹொகனேக்கல் ஆகும். கன்னட மொழியில் ஹொகே என்பது புகையையும், கல் என்பது பாறையையும் குறிக்கும்.

    மலைப்பாறைகள் வழி விழுந்து சிதறும் அருவி நீர் புகை மண்டலமாக இப்பகுதி முழுவதும் வியாபித்திருப்பதால் ‘ஹொகேனக்கல்’ என்று அழைக்கப்பட்டு அதுவே ஒகேனக்கல் என்று திரிந்து நிலைத்துவிட்டது.

    இங்கே வருபவர்கள் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி, தொடர் அருவி ஆகிய அருவிகளை பரிசல் மூலம் சென்று கண்டு ரசித்து மெயின் அருவியில் குளித்து மகிழ்வர்.

    பெயர் வரலாறு:

    ஒகேனக்கலின் பழைய பெயர் உகுநீர்க்கல் என்பதாகும்.உகுநீர்க்கல் என்பதே ஒகேனக்கல் எனத்திரிந்து விட்டது.

    திப்பு சுல்தான் காலம் முடிய வரிவாங்கும் அதிகாரிகள் கன்னடம் பேசுபவர்களாக இருந்த காரணத்தால் தருமபுரி மாவட்டத்து ஊர்ப் பெயர்கள், மலைப்பெயர்கள், ஆறுகளின் பெயர்கள் ஆகியவற்றைக் கன்னடப் பெயர்களாக வருவாய்த்துறைப் பதிவேட்டில் பதிவு செய்தனர்.

    அதை அப்படியே ஆங்கிலேயர் காலத்திலும் பின்பற்றினர். அது இப்போதுவரை தொடர்கிறது.

    ஒகேனக்கலுக்கு எப்படி செல்லலாம்?

    கர்நாடகம் மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த பிரசித்தமான நீர்வீழ்ச்சி ஸ்தலம் பெங்களூரிலிருந்து 150 கி.மீ தூரத்திலும் சென்னையிலிருந்து 343 கி.மீ தூரத்திலும், சேலத்திலிருந்து 90கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

    மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டுப்பயணிகள் சேலம், தர்மபுரி மார்க்கமாக ஒனேக்கல் சென்றடையலாம். மழைக்காலங்களில் காவிரி ஆற்று வெள்ளம் பொங்கி பிரவாகமெடுத்து ஓடும் அழகே தனி.

    ஆனால் வெள்ளம் அளவுக்கு அதிகமாக இருந்தால் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் படகு சவாரி செய்யவும் தடை விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே ஒகேனக்கல் செல்வதற்கான சிறந்த மாதம் என்பது நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்தது.

    மூலிகை எண்ணெய்களை கொண்டு செய்யப்படும் ஆயில் மசாஜ்:

    கோடை தொடங்குவதற்கு சற்று முன்னரே சென்றால் வெள்ளம் குறைவாக இருப்பதால் நீர்வீழ்ச்சியில் குளிப்பது மட்டுமல்லாது ஆற்று நீரிலும் உங்கள் குழந்தைகளும் குளிக்கலாம்.

    பெண்கள் குளிப்பதற்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குளிப்பதற்கு முன்னர் ஆயில் மசாஜ் செய்து கொள்ளும் வசதியும் குறைவான விலையிலேயே கிடைக்கிறது.

    ஆயில் மசாஜ் செய்து, நீர்வீழ்ச்சியில் ஒரு சூப்பர் குளியலை போட்டுவிட்டு கரையேறியதும், புதிதாக பிடிக்கப்பட்ட ஆற்று மீன்களை ஆற்றங்கரையிலேயே சமைத்து சுடச்சுட பரிமாறும் கடைகளில் தஞ்சம் புகுவது உற்சாகத்தை தரும் அனுபவமாக இருக்கும்.

    ஆற்றின் மறுகரைக்கு சென்று வர தொங்குபாலம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்றால் மலைகளையும் காவிரி ஆற்றையும் வெவ்வேறு கோணங்களில் ரசிக்க முடியும்.

    பிரபலமான பரிசல் சவாரி:

    ஹொகனெக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்வது மற்றொரு திகில் கலந்த உற்சாக அனுபவமாகும்.

    வட்டக்கூடை போன்ற இந்த பரிசல்களில் அமர்ந்தபடி சுற்றிலும் வானுயர்ந்து நிற்கும் மலைகள் மத்தியில் நீர்த்தேக்கத்தை சுற்றி வருவது மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று.

    பார்ப்பதற்கு அளவில் சிறியதாக தோன்றினாலும் இந்த பரிசல்களில் எட்டு பேர் வரை பயணிக்கலாம். எனினும் பயணிகள் பாதுகாப்பு அம்சங்களை தங்கள் பொறுப்பில் திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது.

    ஒகேனக்கல் பகுதியில் உள்ளூர் சிறுவர்கள் கரடு முரடான மலைமுகடுகளிலிருந்து நீர் சுழித்துக்கொண்டு ஓடும் ஆழமான ஆற்றில் குதித்து காண்பிப்பது சுற்றுலாப்பயணிகளை திகைக்க வைக்கும் மற்றொரு ஒரு அம்சமாகும்.

    பிரமிக்க வைக்கும் பசுமையான இயற்கைக்காட்சிகள் இப்பகுதியில் ஏராளம் நிரம்பியுள்ளன. அடிக்கடி பல சினிமாப்படப்பிடிப்புகளும் இந்த மலைப்பகுதியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    இங்கு தங்குவதற்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் விடுதி உள்ளது.

    நெல் உற்பத்தி மற்றும் சாகுபடிப்பரப்பில் தமிழகம் சாதனை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....