இலங்கையில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்க அந்நாட்டு அரசு புதிய முயற்சி ஒன்றினை கையில் எடுத்துள்ளது. ‘சொர்ண சொர்க்க விசா‘ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கையில், கடந்த ஒரு மாத காலமாக, மிகக் கடுமையான பொருளாதர நெருக்கடி நிலவி வரும் நிலையில், மக்கள் பசியிலும் பட்டினியாலும் அவதிப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதனால், ஒரு வேலை உணவைக் கூட முழுமையாக உண்ண முடியாத நிலை உருவாகி உள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று பொது மக்கள் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்தியாவும் சீனாவும் இலங்கை அரசுக்கு தன்னால், முடிந்த உதவிகளை செய்து வருகிறது. இருப்பினும் பற்றாக்குறை என்பது நீடித்து தான் வருகிறது. இலங்கைத் தமிழர்கள், பலரும் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு தெரிவித்தது போலவே நேற்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, “நான் பதவி விலக மாட்டேன், எவருக்கும் அஞ்சி ஓட மாட்டேன்” என்று ஆளுங்கட்சி பொது கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார். இதனால், மக்கள் இன்னும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நிதி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு இலங்கை அரசு வெளிநாட்டவர்களுக்கு ‘சொர்ண சொர்க்க விசா’வை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்திய மதிப்பில் 76 லட்சம் ரூபாய் கொடுத்தால் பத்து ஆண்டுகள் வேலைப் பார்த்துக்கொள்ளவும் தங்கவும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில், 57 லட்சம் செலவு செய்து வீடு வாங்குபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் தங்க அனுமதி அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இலங்கை பொருளாதாரத்தில் சில மாற்றங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதே நிலை நீடித்தால், மக்களின் அதிதீவிர போராட்டம் தொடரவும் வாய்ப்புள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை அரசில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினர் முழுவதுமாக பதவி விலக வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒருமித்த குரலாக உள்ளது.