Saturday, March 16, 2024
மேலும்
  Homeபொழுதுபோக்குஇயலும் இசையும்அவளை கண்ட உயிரற்ற கல்லுக்கே இந்த நிலைமை? - சீதா ராமம் பாடல் ஒரு பார்வை!

  அவளை கண்ட உயிரற்ற கல்லுக்கே இந்த நிலைமை? – சீதா ராமம் பாடல் ஒரு பார்வை!

  முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் இருந்து அனுப்புநர் முகவரி ஏதும் இல்லாமல் காதலால் நிரம்பிய கடிதங்கள் ராமுக்கு வந்து சேர்கிறது. வரும் கடிதங்கள் சீதா மஹாலக்‌ஷ்மி என்ற பெயரில் கடிதங்கள் வந்தபடியே இருக்கின்றன. யாருமற்ற அவனுக்கு, அநாதை என்ற பட்டத்துடன் திரியும் அவனுக்கு இந்த கடிதங்கள் உற்ற துணையாய் இருக்கின்றன. 

  கடிதங்களில் பூத்திருக்கும் காதலின் வார்த்தைகளை கண்டு திகைத்துக் கொண்டிருந்தவன், ஒருநாள் அவளைத் தேடிச்செல்கிறான். அவளைக் கண்டுகொள்கிறான். அவளின் கடிதங்களுக்கு பதில் கடிதங்களை கையில் தந்துவிடுகிறான். மீண்டும் அவளை சந்திக்கும் வாய்ப்பை கோட்டையும் விடுகிறான். அப்போது அவளாக முயற்சித்து இவனை வந்து காண்கிறாள். 

  அப்போது, இவன் அவளிடம் கவிதையாக காதலைச் சொல்கிறான். அவளோ புன்னகைத்தபடியே நகர்கிறாள். ஆனால் காதலுக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. வேண்டாம் என்றும் மறுக்கவில்லை. இப்போது ராமுவும், சீதாவும் தெருவில் நடக்க மழை பெய்துக்கொண்டிருக்கிறது. சுகமாய் தேனருவியாய் ஒரு பாடலும் ஆரம்பமாகிறது. 

  குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்

  மழைகொண்டு கவிதை தீட்டினார்

  இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்

  சிரித்திடும் சிலையை காட்டினார்

  ‘மொட்டுகளில் நீர்த்துளிகளை தூவியது யார்’ என்ற கேள்வியை முதலில் முன்வைக்கும் பாடலாசிரியர் மதன் கார்கி அடுத்த வினாடியே ‘மழைகொண்டு கவிதை தீட்டிவைத்துள்ளார்கள்’ என்கிறார். அப்படியே அடுத்த வரிக்குச் சென்றால், ‘இளம்பிறையை உன் இதழ் இடையில் யார் சூட்டியது’ என்று கேள்வி கேட்டுவிட்டு அவரே, ‘சிரித்திடும் சிலையை காட்டினார்’ என்று கூறுகிறார். மதன்கார்கி கூறுவது அனைத்தும் சீதாவுக்கு பொருந்திப்போகும். 

  மேலும், ராம் தற்போது அடைந்திருக்கும் மகிழ்ச்சியை அவ்வளவு எளிதில் யாராலும் விவரித்திட முடியாது. ஆனாலும், அதை ஒரு காட்சி படிமத்தின் வழியே அழகாக தெளிவுற விளக்குகிறார். மதன்கார்கி. 

  ஆம், ‘எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை’ என்று காட்சியை கூறியவர், ‘இருதயம் சுமந்து போகுதே இனிக்கிற காதல் ஒன்றினை’ என்று ராமின் மனதை வெளிக்கொணர்கிறார். மேலும், ‘என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரமே ஏற்றி வைத்தது யார்’ என்று ராம் ஒலிக்கிறான். 

  இதன்பின்பு, ராம் சீதாவை வருணிக்க முற்படுகிறான். தற்போதைய காலக்கட்டத்தில் வர்ணனை என்ற வெவ்வேறு வடிவங்களில் ஒலித்துக்கொண்டிருக்க இங்கே ராம் சிறப்பாக சீதாவை வர்ணிக்கிறான். 

  கம்பன் சொல்ல வந்து

  ஆனால் கூச்சங்கொண்டு

  எழுதா ஓர் உவமை நீ

  வர்ணம் சேர்க்கும்போது

  வர்மன் போதை கொள்ள

  முடியா ஓவியமும் நீ

  ராமின் கூற்றுப்படி, கவிஞன் கம்பன் சொல்ல வந்தும், தனது கூச்சத்தால் எழுதாத சொல்லாத ஓர் உவமை அவள். ரவிவர்மன் எனும் ஓவியக் கலைஞன் சீதாவை வரையும்போது வர்ணம் சேர்க்க முற்பட…வர்மனையும் போதைக்கொள்ளச் செய்யும் அழுகு இவள். 

  இதற்கு பின்பு ராம் கூறுவதெல்லாம் காதலின் தவிப்பில் துயரம் கலக்காமல் வெளிவந்தவையே. எல்லோரா சிற்பங்கள் அவள் மீது காதல் கொள்ளும் என்றும், உயிரே இல்லாத கல் கூட அவளைக் கண்டால் காமமுறும் என்றும் தெரிவிக்கிறான். உயிரற்ற கல்லுக்கே இந்த நிலைமை என்றால் உயிருள்ள மானிடன் என் நிலைமை என்ன? என்பதையும் ராம் கேட்கிறான். 

  இல்லை. இது போதாது நான் இன்னும் சொல்ல வேண்டும் என்று முன்வந்த ராம், ‘உடையால் மூடி வைத்தும், இமைகள் சாத்தி வைத்தும்

  அழகால் என்னை கொல்கிறாய்….அருவி கால்கள் கொண்டு, ஓடை இடையென்றாகி கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்….’ என்று பித்தேறுகிறான். 

  கடலில் மீனாக நானாக ஆணையிடு 

  அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு

  பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்

  இந்த பித்தின் மூலமே, ‘நெஞ்சம் எனும் உன் கடலில் நான் மீனாக ஆணையிடு என்றும், அலைகள் மீதேறி உன் மார்பில்என்னை நீந்தவிடு….உன் பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்’ என்று காதலில் உருகுகிறான். 

  சமீப காலங்களில் வெளிவந்த ஒரு அழிகிய பாடல் இதுவென்று சொன்னால் அது மிகையாகாது. வரிகளை எந்த வித சங்கடத்திற்கும் உட்படுத்தாமல் இசையும் குரலும் இருக்கிறது. பாடல் வரிகள் எளிமையாகவும் ஆழமாகவும் கவிதையாகவும் இருக்கிறது. கேட்போரை மயங்கச் செய்கிறது.

  இந்த அழகிய பாடலுக்கு குரல் தந்தவர் சாய் விக்னேஷ் எனும் பாடகர். இசையைமைத்தவர் விஷால் சந்திரசேகர். பாடல் வரிகளை எழுதியவர் மதன் கார்கி. இப்பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம் ‘சீதா ராமம்’. 

  இந்த பாடலைக் காண க்ளிக் செய்யவும் – https://www.youtube.com/watch?v=sdFbWEg2QVI

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....