இவ்வுலகு இன்னமும் உயிர்ப்புடனும் , ஒரு மனிதர் இன்னொரு மனிதரை புசித்து வாழ ஆரம்பிக்காமல் இருப்பதற்கு காரணம் மனிதர்களிடத்தில் இருக்கும் மனிதாபிமானம் தான் என்றால் அது மிகையாகாது. மானுட இனம் தோன்றிய காலத்தில் இருந்து தற்போது வரை மானுடத்தின் தலைச்சிறந்த பண்புகளில் முக்கியமானவையாக பாரக்கப்படுவது மானுட இனத்தில் நிலவும் மனிதாபிமானம் என்ற உணர்வுதான்.
தற்காலத்தில் குறைந்து வருவதாக காணப்பட்டாலும், தற்போதும் மனிதர்களிடத்தில் மனிதாபிமானம் இருக்கத்தான் செய்கிறது. இதை நிறுபிக்கும் வண்ணம் அவ்வபோது நிகழ்வுகளும் உலகில் ஏதோவொரு மூலையில் அரங்கேற, நாம் அதை கைப்பேசிகளில் கண்டுகளித்து மனிதாபிமானம் இன்னமும் இருக்கிறது என்று கூறிக்கொள்கிறோம்!
உலகம் முழுவதும் உள்ள மக்கள் தற்போது திகைக்கும் அளவிற்கு, இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் நடைபெற்று வருகிறது. இரஷ்யா உக்ரைனின் தலைநகரை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாய் இறங்கியிருக்கிறது. இதனால் உக்ரைன் மீதான தாக்குதலை தொடரந்து நிகழ்த்தி வருகிறது, இரஷ்யா! இதனை தடுக்க உக்ரைன் பதிலடிக்கொடுத்து வந்தாலும் உலக அரங்கில் இரஷ்யாவின் பலமே மேலோங்கி இருக்கிறது.
இப்போரால், உக்ரைனில் உள்ள பலரும் தங்களின் உடைமைகளை, உறவுகளை, இருப்பிடங்களை இழந்து தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் அலைந்து ஆங்காங்கே தங்கி வருகின்றனர். இப்போரினால் உக்ரைன் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இரஷ்யாவினால்தான் இப்போர் மூண்டதென்பது உலகு அறிந்த நிகழ்வு. தற்போதும் இரஷ்யா பின்வாங்கிவிட்டால் போர் நின்றுவிடும் ஆனால் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.
இந்நிலையில், இரஷ்ய மக்கள் இரஷ்யாவின் பல பகுதிகளில் இப்போர் வேண்டாம் என்று போராடி வருகின்றனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் கைகளில் நோ டூ வார் என்ற வாசகத்தை எழுதியபடியுள்ள பதாகைகளை கையில் ஏந்தியும், தங்கள் கோஷங்களில் நோ டூ வார் என்றும் இரஷ்ய மக்களில் சிலர் இப்போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும், உக்ரைன் மக்களிடம் மன்னிப்பு கேட்பது போன்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் பதாகைகளை ஏந்தினர்.

ஆனால், போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களை இரஷ்ய அரசு கைது செய்து வருகிறது. இருப்பினும் இரஷ்ய மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, மாஸ்கோவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதியில் இரஷ்ய மக்கள் அதிக அளவில் கூடி இப்போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது உலக மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.