Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதிய இராமதாஸ் - குறிப்புகள் உள்ளே!

    வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதிய இராமதாஸ் – குறிப்புகள் உள்ளே!

    தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, 7 காரணங்களைக் கூறி வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. 

    தமிழக அரசுக்கு நன்றி..

    வன்னியர்களுக்கான 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளில் தமிழக அரசு மற்றும் அதன் துறைகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி சிறப்பான வாதங்கள் முன்வைக்கப்படுவதை உறுதி செய்ததற்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராமதாஸ் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    வன்னியர் சங்க போராட்டங்கள்..

    அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் சமூகநிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், 1980-ஆம் ஆண்டில் ராமதாஸால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், “பத்து ஆண்டுகள் நடத்தப்பட்ட தொடர் போராட்டங்கள், 1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 7 நாட்கள் தொடர் சாலைமறியலின் போது 21 உயிர்கள் காவல்துறை துப்பாக்கிச் சூடு மற்றும் கொடியத் தாக்குதல்களில் கொல்லப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, 1989-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த முதல்வர் கலைஞர், என்னை அழைத்து வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பேச்சு நடத்தினார்” என்றும் ராமதாஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    வன்னியர் உள்ளிட்ட 108 சமுதாயங்களை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவை உருவாக்கி, அதற்கு 20% இட ஒதுக்கீட்டை கலைஞர் வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ராமதாஸ் அவர்கள், 38 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சமுதாயங்களுக்கு ஒரே பிரிவாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், அப்போது தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 30%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 20% என இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதையும் தெரிவித்துள்ளார்.

    வன்னியர்களின் பின்தங்கிய நிலை.. 

    இந்த இட ஒதுக்கீடுகளுக்குப் பிறகும் கூட கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலையில் தான், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி 43 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை 2020-ஆம் ஆண்டில் தீவிரப்படுத்தினோம் என்றும், அதன் பயனாகத் தான் முந்தைய அதிமுக ஆட்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50%, சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 7%, பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் நாள் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    புது ஆட்சி..

    “2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தங்கள் (மு.க.ஸ்டாலின்) தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு , வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது. அதையேற்று வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையை 26.07.2021 ஆம் நாளில் தங்கள் தலைமையிலான அரசு பிறப்பித்தது”

    வன்னியர் உள் இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்கான காரணங்களாக சென்னை உயர்நீதிமன்றம் பட்டியலிட்டிருந்த  7 காரணங்களும் மிகவும் ஆபத்தானவை என்றும், உயர்நீதிமன்றம் முன்வைத்த காரணங்கள் அனைத்தும்  தவறு என்பதை நிரூபிக்காவிட்டால் தமிழ்நாட்டில் இனி இட ஒதுக்கீடு வழங்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் ராமதாஸ் தனது கடிதத்தில் தெரிவித்தார். 

    இத்தகைய நெருக்கடியான சூழலில் தான் வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் அதன் துறைகள், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் எனது சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். 

    தமிழக அரசுக்கு வழிகாட்டுதல்..

    “அந்த வழக்கில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி  தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம்… அது வன்னியர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் புள்ளி விவரங்களுடன் நியாயப்படுத்தி வழங்கப் பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது” என ராமதாஸ் தெரிவித்தார்.

    உச்சநீதிமன்றம் கூறியவாறு, வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவரங்களைத் தொகுத்து, அவற்றின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான புதிய சட்டத்தை இயற்றி செயல்படுத்துவதன் மூலம் தான் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க முடியும் ஆகவே அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    “தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் நியாயங்கள் தங்களுக்கு நன்றாகத் தெரியும். வன்னியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்கள் தான் கல்வி, வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாட்டுக் குறியீடு, தனிநபர் வருமானம் ஆகியவற்றில் கடைசி இடங்களில் உள்ளன” என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள மற்ற பிரிவினரை விட  வன்னியர்கள் எந்த அளவுக்கு பின்தங்கியிருக்கிறார்கள் என்பது குறித்த தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக வழிகாட்டியிருக்கிறது என்றும், உச்சநீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும் தமிழக அரசிடம் உள்ளன என்றும் அவற்றின் அடிப்படையில் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அறிக்கை பெற்று வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை அரசு வழங்க முடியும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தொடங்கப்படவிருக்கிற நிலையில் அவற்றைக் கருத்தில் கொண்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக புதிய சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில்  நிறைவேற்றி பாட்டாளி மக்களுக்கு உரிய சமூகநீதியை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ராமதாஸ் அவர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....