Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பலரிடத்திலும் வியப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்ட பாமக-வின் நிழல் நிதிநிலை அறிக்கை

    பலரிடத்திலும் வியப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்ட பாமக-வின் நிழல் நிதிநிலை அறிக்கை

    நாளை 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக அரசு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தனது நிழல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது பலரின் கவனத்தைப் பெற்று வருகிறது. பாமகவின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் தி.நகரில் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். வரவு-செலவு, தமிழக பொருளாதாரம், பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கை, வேலைவாய்ப்பு என பல்வேறு துறைகளை அடிப்படையாக கொண்டு வெளிவந்து பலரும் ஆர்வத்துடன் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிதி நிலை அறிக்கைகளை இங்கு காண்போம்.

    வரவு – செலவு

    1. 2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.4,87,460 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,94,670 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.1,78,470 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.

    2. நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,05,786 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,32,426 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கும்.

    3. 2022-23 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.55,034 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.18,326 கோடி என்ற அளவில் மிகக் குறைவாக இருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.

    தமிழக பொருளாதாரம் – ஓர் ஆய்வு! 

    4. 2021-22ஆம் ஆண்டில் ரூ.2,02,495 கோடி மொத்த வருவாய் ஈட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழகப் பொருளாதாரம் இன்னும் முழுமையாக மீளாததால், திசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் ரூ.97,887 கோடி மட்டுமே, அதாவது 48.45% மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்ட வருவாய் இலக்கை எட்டுவது சாத்தியமல்ல.

    5. 2021-22ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.68 கோடியாகவும் நிதிப்பற்றாக்குறை ரூ.92,520.65 கோடியாகவும் இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசின் வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால், வருவாய் பற்றாக்குறையும், நிதிப்பற்றாக்குறையும் அதிகரிக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    6. 2021-22ஆம் ஆண்டில் தமிழக அரசு ரூ.92,484 கோடி கடன் பெறுவதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால், அரசின் வருவாய் குறைந்து, வருவாய் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக்குறையும் அதிகரிக்கக்கூடும் என்பதால், தமிழக அரசு வாங்கவுள்ள கடனும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22ஆம் ஆண்டில் தமிழக அரசு வாங்கும் கடன் அளவு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டுவதற்கு வாய்ப்புள்ளது.

    7. 2022 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, தமிழக அரசின் மொத்த கடன் தொகை ரூ.5,77,987 கோடியாக இருக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதுவும் சுமார் ரூ.6 லட்சம் கோடி என்ற அளவை நெருங்கக்கூடும்.

    8. 2021-22ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளின் அடிப்படையில், 2022-23ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு ரூ.23,82,031 கோடியாக இருக்க வேண்டும். பொருளாதார மந்தநிலையில் இருந்து விலகி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருந்தாலும் கூட, 2022-23ஆம் ஆண்டில் இந்த அளவுக்கு பொருளாதார வளர்ச்சி இலக்கை தமிழ்நாட்டால் எட்ட இயலாது. மாநில உற்பத்தி மதிப்பு ரூ.23 லட்சம் கோடிக்கும் குறைவாகவே இருக்கும்.

    9. 2022 – 23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு சுமார் ரூ-.90,000 கோடி கடன் வாங்கக்கூடும். 31.03.2022 அன்று தமிழக அரசின் நேரடிக் கடன் சுமார் ரூ.5.95 லட்சம் கோடியாக இருக்கும் என்பதால், புதிதாக வாங்கப்படும் கடனையும் சேர்த்து 31.03.2023 அன்று தமிழக அரசின் நேரடிக்கடன் ரூ.6.85 லட்சம் கோடியாக இருக்கும்.

    10. 2022-23ஆம் ஆண்டின் முடிவில் பொதுத் துறை நிறுவனங்களின் கடன் ரூ.4.65 லட்சம் கோடியாக இருக்கும் என்று உத்தேசிக்கலாம்.

    11. 2022-23ஆம் ஆண்டின் நிறைவில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ.11.5 இலட்சம் கோடியாக இருக்கும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரிலும் ரு.1,44,836 கடன் இருக்கும். 4 பேர் கொண்ட குடும்பத்தின் பெயரில் ரூ.5,79,345 கடன் தமிழக அரசால் வாங்கப்பட்டிருக்கும்.

    பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கை

    12. அடுத்த 4 ஆண்டுகளில் தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை ரூ.32 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும். இதற்கு ஆண்டுக்கு 10%க்கும் கூடுதலான வளர்ச்சி எட்டப்பட வேண்டும்.

    13. மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    14. மத்திய அரசு வசூலிக்கும் மேல்வரி, கூடுதல் தீர்வை போன்றவை அடிப்படை வரியோடு இணைக்கப்பட வேண்டும். அதன் மூலம், அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்தும் மாநில அரசுகளுக்கு பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000

    15. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.

    16. ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 உதவி வழங்கப்பட்டாலும், அக்குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்படும் பிற சமூகப் பாதுகாப்பு திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும்.

    வேலைவாய்ப்பு பெருக்க சிறப்பாண்டு

    17. தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கும் நோக்குடன் 2022-23ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பெருக்க சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.

    18. 2022-23ஆம் ஆண்டில் அரசுத் துறைகளில் 20,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஏற்கெனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள 80,000 காலியிடங்கள் நிரப்பப்படும். அதன் மூலம் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% இடஒதுக்கீடு

    19. தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் மாத வருமானம் ரூ.40,000 வரை உள்ள பணிகளில் 80% தமிழர்களுக்கு வழங்க புதிய சட்டம் நிறைவேற்றப்படும்.

    20. தமிழ்நாட்டில் தொழில் திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவது கட்டாயம் ஆக்கப்படும்.

    21. தொழில் திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களில் உள்ள வேலைவாய்ப்பு பெற தகுதியானவர்களின் பட்டியல், முதலில் நிலம் கொடுத்தவர்களில் முன்னுரிமை என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டு, அந்த வரிசையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    22. தமிழ்நாட்டில் தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை, உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்பபு ஏற்படுத்தித் தரப்படும்.

    23. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த பணிகள் மூலம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

    ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி தொழில் முதலீடு 

    24. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி என்ற அளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்படும்.

    25. நான்காம் தொழில்நுட்பப் புரட்சியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வேலைவாய்ப்பும் ஏற்றுமதியும் அதிகரிக்கப்படும்.

    ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம் 

    26. தமிழக சட்டப்பேரவை குறைந்தது ஆண்டுக்கு 3 முறையும், 100 நாட்களும் கூடி மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வ விவாதம் நடத்துவதை தமிழக அரசு உறுதி செய்யும்.

    27. ஒவ்வொரு மாவட்டத்திலும் 12 லட்சம் பேர் இருக்கும் வகையில் மாவட்டங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும். தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 60ஆக உயர்த்தப்படும்.

    பெட்ரோல் & டீசல் விலை ரூ.5 குறைப்பு 

    28. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஓரளவு போக்கும் வகையில், அதன் மீதான வரி தமிழ்நாட்டில் லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும்.

    29. தமிழ்நாட்டில் மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இழப்பில் இயங்கினாலும், மின் கட்டணமும், பேருந்துக் கட்டணமும் உயர்த்தப்படாது.

    மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 

    30. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும். அவர்கள் எதுவரை உயர்கல்வி கற்க விரும்புகிறார்களோ, அதுவரை இந்த உதவி வழங்கப்படும்.

    இடைநிற்றலைத் தடுக்க ரூ.15,000 வரை நிதி 

    31. தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்பில் சேரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ரூ.5,000 இடைநிற்றல் தடுப்பு உதவியாக வழங்கப்படும்.

    32. அதேபோல், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11ஆம் வகுப்பில் சேருவோருக்கு ரூ.10 ஆயிரமும், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேருவோருக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும்.

    33. தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த 38 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.50,000 தவிர, கூடுதலாக ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும்.

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு 

    34. அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    35. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி மாணவர் சேர்க்கையிலும் 20% தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் 

    36. நகர்ப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்காக நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதற்கான நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும்.

    37. ஆதரவற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்காமலேயே மாத உதவித் தொகை ரூ.1500 வழங்கப்படும். பயனாளிகளின் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்த்தப்படும்.

     
    வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை 

    38. படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி, மாதம் ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

    உதவித்தொகை விவரம்: 
    1. பத்தாம் வகுப்பில் தோல்வி ரூ.1,000
    2. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி ரூ.2,000
    3. 12ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.3,000
    4. பட்டப்படிப்பு முடித்தவர்கள் ரூ.4,000
    5. பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் ரூ.5,000

    டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணம், நேர்முகத் தேர்வு ரத்து 

    39. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அனைத்துத் தேர்வு வாரியங்கள் மூலம் நடைபெறும் பணி நியமனங்கள் அனைத்திற்கும் நேர்காணல் ரத்து செய்யப்படும்.

    40. அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் அனைவருக்கும் தேர்வுக் கட்டணம் ரத்து செய்யப்படும்.

    ரூ.25 லட்சம் கோடியில் உட்கட்டமைப்பு 

    41. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.25 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்படும்.

    வரி அல்லாத வருவாய் ரூ.1.78 லட்சம் கோடி 

    42. 2022-23ஆம் ஆண்டில் வரி அல்லாத வருவாய் ரூ.1.78 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

    43. கிரானைட், தாதுமணல் விற்பனை மூலம் ரூ.1.15 லட்சம் கோடியும், மணல் இறக்குமதி, செயற்கை மணல் விற்பனை ஆகியவற்றின் மூலம் ரூ.30,000 கோடியும் ஈட்டப்படும்.

    44. பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயங்கச் செய்வதன் மூலம் ரூ.15,000 கோடி கிடைக்கும்.

    45. பிற ஆதாரங்களில் இருந்து வரி அல்லாத வருவாயை கணிசமாக பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    46. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.

    புதிய உயர்கல்வி நிறுவனங்கள்

    47. தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். அவற்றின் விவரம் வருமாறு:
    1. அண்ணா பல்கலைக் கழகம் உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக (Anna University Institute of Eminence (IoE)) மாற்றப்படும். மாணவர் சேர்க்கை மற்றும் இடஒதுக்கீட்டில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும்.
    2. பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க அண்ணா பல்கலைக் கழகம் – இணைப்பு (Anna University Affiliation) என்ற புதிய பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.
    3. சென்னைப் பல்கலைக் கழகம் உயர்சிறப்பு கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.
    4. தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஐ.ஐ.டிக்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology – TIT) ஏற்படுத்தப்படும்.

    மது விலக்கு 

    48. தமிழ்நாட்டில் உழைப்பாளர் நாளான மே 1 முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

    வலிமையான லோக்அயுக்தா 

    49. தமிழ்நாட்டில் தற்போது முடக்கப்பட்டிருக்கும் லோக் அயுக்தாவிற்கு புத்துயிரூட்டப்படுவதுடன், கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்படும்.

    50. முதலமைச்சர், அமைச்சர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் லோக்அயுக்தாவின் அதிகார வரம்பிற்கு கீழ் கொண்டுவரப்படுவார்கள்.

    பொதுச் சேவை உரிமைச் சட்டம்

    51. தமிழ்நாட்டில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.

    மின் கட்டணம் குறைப்பு 

    52. தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். இதனால் மின்கட்டணம் மேலும் 56% குறையும்.

    புதிய மின் திட்டங்கள் 

    53. அடுத்த 5 ஆண்டுகளில் 17,340 மெகாவாட் அனல்மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    54. அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    55. மின்வாரியத்தை இலாபத்தில் இயக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    56. ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்திட்டம் செயல்படுத்தப்படும்.

    மாநில கல்விக் கொள்கை

    57. தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றுக்கு இயைந்த வகையில், மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது.

    58. மாநிலக் கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கல்வியாளர்களையும், சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களையும் கொண்ட வல்லுநர் குழு ஓரிரு நாட்களில் அமைக்கப்படும்.

    59. தமிழகத்தில் மும்மொழிக்கொள்கை அறிமுகப்படுத்தப்படாது. அதனால் இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் எதுவும் மாணவர்கள் மீது திணிக்கப்படாது.

    பள்ளிக் கல்விக்கு ரூ.75,000 கோடி

    60. தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 25 பள்ளிகள் வீதம் தமிழகம் முழுவதும் 1,000 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். இந்தப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருக்கும்.

    61. சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தைவிட சிறப்பானதாக தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் வலுப்படுத்தப்படும்.

    62. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி வழங்க ஆண்டுக்கு ரூ.37,500 செலவிடப்படும்.

    63. அருகமைப் பள்ளி முறை நடைமுறைப்படுத்தப்படும். மாநிலப் பாடத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருந்தால், அவர்களுக்கு அவர்கள் வாழும் பகுதியில் உள்ள பள்ளியில் தானாக இடம் ஒதுக்கப்படும்.

    64. பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    பள்ளி கல்விக்கு தனி நிதியம்

    65. பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்காக சமூக அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நிதிதிரட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியைப் போன்று, தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.

    உயர்கல்வி

    66. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் விகிதத்தை 2025ஆம் ஆண்டுக்குள் 55 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    67. உயர்கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    68. அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் ஆராய்ச்சிக்கான இருக்கைகள் ஏற்படுத்தப்படும்.

    கல்விக் கடன்கள் தள்ளுபடி

    69. தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று படித்து வேலையில்லாமல் தவிக்கும் மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தமிழக மாணவர்களுக்கு ரூ.18,000 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் வாராக்கடனின் அளவு ரூ.2,000 கோடி ஆகும். இந்தக் கடன் உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கான தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு தமிழக அரசே செலுத்தும்.

    மருத்துவ ஸ்மார்ட் அட்டை

    70. தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முழு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அது குறித்த விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும். அது குறித்த விவரங்களை பதிவு செய்ய மருத்துவ தகவல் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் தமிழக மக்கள் எந்த ஊரிலும், எந்த மருத்துவமனையிலும் சென்று சிகிச்சை பெற முடியும்.

    71. அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, எவருக்கேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.

    72. 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கை 1,303&லிருந்து, 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை

    73. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடப்பாண்டில் தொடங்கப்படும். 2025ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படத் தொடங்கும்.

    74. மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தில் நடப்பாண்டில் 50 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு இது 150 இடங்களாக உயர்த்தப்படும்.

    75. மயிலாடுதுறை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நடப்பாண்டில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

    76. விழுப்புரத்தில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்.

    சட்டம் – ஒழுங்கு

    77. சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு டிஜிபி நிலை அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.

    78. காவல்துறையினருக்கு 8 மணிநேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.

    79. காவல்துறையினரின் நலன்களைக் காக்க அமைக்கப்பட்டுள்ள 4ஆவது காவல் ஆணையத்தின் தலைவராக இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.

    வன்னியர் இடஒதுக்கீடு

    80. வன்னியர் உள்இடஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு புத்துயிரூட்ட உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. வன்னியர் உள்ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

    81. விஸ்வகர்மாக்கள், யாதவர்கள், முத்தரையர்கள், ஆகியோருக்கு மக்கள் தொகை அடிப்படையில் உள்இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    82. நாவிதர், வண்ணார், பருவதராசகுலம், ஒட்டர், வலையர், அம்பலக்காரர், குரும்பர், குயவர், வேட்டுவக்கவுண்டர், ஊராளி கவுண்டர் ஆகிய 10 சமுதாயங்களும் ஒரு பிரிவாக உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    83. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் உள்ள மற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு / தொகுப்பு ஒதுக்கீடு வழங்கப்படும்.

    பிற்படுத்தப்பட்ட வகுப்பு கார்ப்பரேஷன்

    84. தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இடஒதுக்கீட்டின் பயன்கள் எந்த அளவுக்கு கிடைத்துள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

    85. ஆந்திராவில் உள்ளதைப் போன்று, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சாதிகளில் 30 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட அனைத்து சாதிகளின் முன்னேற்றத்திற்கும் தனித்தனியாக கார்ப்பரேஷன்கள் அமைக்கப்படும்.

    86. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த கார்ப்பரேஷன்கள் மூலமாக ரூ.3 லட்சம் கோடி செலவிடப்படும்.

    வேளாண்மை

    87. வேளாண்துறைக்கு 2022-23ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

    88. 2022 – 23ஆம் ஆண்டு வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் கட்டமைப்பு மேம்பாட்டு சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.

    89. தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 2,654இல் இருந்து 3,500ஆக உயர்த்தப்படும். நெல் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கை 400ஆக உயர்த்தப்படும்.

    அறுபது இலட்சம் டன் நெல் கொள்முதல் – ரூ.3,000 கோடி ஊக்கத்தொகை

    90. 2020-21ஆம் ஆண்டில் 39.39 இலட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில், 2022&23ஆம் ஆண்டில் 60 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும்.

    91. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,600 விலை வழங்கப்படும்.

    92. தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் உழவர்கள் உற்பத்தி செய்யும் நாட்டுச் சர்க்கரையை ஒரு கிலோ ரூ.60 என்ற விலையில் தமிழக அரசே கொள்முதல் செய்யும்.

    மணல் குவாரிகள் திறக்கப்படாது

    93. தமிழ்நாட்டில் 48 மணல் குவாரிகளும், 62 இடங்களிலும் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. கொரோனா மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இந்தக் குவாரிகள் படிப்படியாக மூடப்பட்ட நிலையில், அவை நிரந்தரமாக மூடப்படும். எந்த மணல் குவாரியும் இனி திறக்கப்படாது.

    94. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையிலும், அதற்குப் பிறகு பருவம் தவறி பெய்த மழையிலும் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.

    95. தமிழ்நாட்டில் தரிசு நிலங்களில் சீமைக்கருவேல மரங்களை அழித்துவிட்டு, பனை மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு ஏக்கர் நிலத்தில் 400 பனை மரக்கன்றுகளை நட்டு, அது வளர்ந்த பின் ஒரு மரத்திற்கு ரூ.4,000 வீதம் ஒரு ஏக்கருக்கு இன்றைய மதிப்பில் ரூ.16 இலட்சம் வரை வருவாய் ஈட்டமுடியும்.

    96. வேளாண் சார்ந்த கடன்களின் தேவை அதிகரித்திருப்பதால், அவற்றை வழங்குவதற்கு வசதியாக, கூட்டுறவுச் சங்கங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5,000 கோடி மறுமுதலீடு வழங்கப்படும்.

    தர்மபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் – ஆகஸ்ட் மாதம் அடிக்கல்

    97. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை நீரேற்றும் மின் மோட்டார்கள் மூலம் இறைத்து குழாய்கள் மூலம் கொண்டு சென்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிரப்புவதற்கான, தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்படும்.

    98. கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்கும் படி மத்திய அரசை தமிழக அரச வலியுறுத்தும். இதற்காக தமிழக அமைச்சர்கள் குழு தில்லி சென்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் பேச்சு நடத்தும்.

    99. கொள்ளிடம் தடுப்பணைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.396 கோடி நிதி செலவழித்துவிட்டதால் கூடுதலாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைக் கொண்டு அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, ஜூலை மாதத்தில் கொள்ளிடம் தடுப்பணை திறக்கப்படும்.

    100. 2022-23ஆம் ஆண்டு முதல் 2025-26 வரை நீர்ப்பாசன நான்காண்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 4 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படும். இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    தமிழ்நாடு பருத்திக் கழகம் அமைப்பு 

    101. கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் மலிவு விலையில் பருத்தி இழை நூல் கிடைப்பதை உறுதி செய்யவும், பருத்திக்கு நல்ல கொள்முதல் விலை கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழ்நாடு பருத்திக் கழகம் (Tamilnadu Cotton Corporation) என்ற நிறுவனம் தொடங்கப்படும். உழவர்களிடம் இருந்து பருத்திப் பஞ்சை வாங்கி, அதை நூலாக்கி விற்பனை செய்யும் பணியை இந்த நிறுவனம் மேற்கொள்ளும்.

    சுங்கக் கட்டணம்

    102. முதலீடு திரும்ப எடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை இரத்து செய்யவும், பராமரிப்பில்லாத சாலைகளில் 40% கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கவும் மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும்.

    103. மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் முற்றிலுமாக இரத்து செய்யப்படும்.

    104. சென்னை – கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படும்.

    மெட்ரோ ரயில்

    105. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சென்னை மாதவரம் – சிறுசேரி சிப்காட், சென்னை மாதவரம் – சோழிங்கநல்லூர், சென்னை கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களை அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும். 2026ஆம் ஆண்டுக்குள் இந்தப் பணிகள் முடிக்கப்படும்.

    106. சென்னை விமானம் நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடப்பாண்டில் தொடங்கப்படும்.

    அரசு ஊழியர் நலன்- மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்

    107. புதிய ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும்.

    108. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். இதன் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.

    109. 01.06.2006 அன்று பணிநிலைப்பு செய்யப்பட்ட 45,000 ஆசிரியர்கள் அதற்குமுன் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய 23 மாதங்கள் அவர்களின் பணிக்காலமாக சேர்க்கப்படும். இக்காலத்திற்கான ஊதிய நிலுவையும் வழங்கப்படும்.

    110. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12,483 பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிலைப்பு வழங்கப்படும்.

    கீழடி அகழாய்வு – விரைவில் அறிக்கை

    111. கீழடி அகழாய்வின் 5, 6 மற்றும் 7ஆம் கட்ட அறிக்கைகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

    112. தமிழ்நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து சென்று உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பதற்காக இணையவழி தமிழ் கற்பித்தல் சேவை தொடங்கப்படும். இதற்காக இணையதளம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் தமிழ் கற்பிக்கப்படும்.

    113. இணையவழியில் தமிழ் கற்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    பத்திரிகையாளர்களுக்கு ரூ.5 ஆயிரத்தில் மடிக்கணினி

    114. பத்திரிகையாளர்களுக்கு 90% மானியத்தில் மடிக்கணினி வழங்கப்படும். அதன்படி, பத்திரிகையாளர்கள் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் செலுத்தி மடிக்கணினி பெறலாம்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....