Monday, March 18, 2024
மேலும்
  Homeபொழுதுபோக்குஇயலும் இசையும்'முதல் நீ முடிவும் நீ' என அவன் பாட ; அவள் அழுதாள்...பார்த்த நாமும்தான்! -...

  ‘முதல் நீ முடிவும் நீ’ என அவன் பாட ; அவள் அழுதாள்…பார்த்த நாமும்தான்! – சிறப்பு பார்வை

  காதலின் அனைத்து உணர்வும் உடல் உயிர் முழுவதும் காற்றாய் பரவி நம்மை தினந்தோறும் வாழ்வின் பாதையில் செலுத்த, எவ்வளவு புன்னகைத்தாலும், எவ்வளவு பிஸியாய் நம்மை நாம் வைத்துக்கொண்டாலும், அந்த ஒரு நபரின் எண்ணங்கள், அவர்களுடனான நினைவுகள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என கடந்த பின்பும் நம்முடனே இருக்கும். 

  நெடுங்காலமாக நம்முடன் இருக்கும் இத்தகைய உணர்வை என்னவென்று நீங்கள் வரையறுப்பீர்கள்? காதல் என்றா? வெறுமனே நினைவு என்றா? தாகம் என்றா? தெரியவில்லை. ஆனால் இங்கு அதற்கு காதலின் பித்து என்றே பெயர் சூட்டத் தோன்றுகிறது.

  இப்படியான காதலின் பித்தை அறிய செய்தவர் நம்முடன் எந்தவித உரையாடலிலும், எந்தவித அணுகுதலிலும் இல்லாமல் போக, நம்முடன் இருந்து மொத்தமாய் தொடர்பற்றுப் போக, பல வருடங்களுக்கு பிறகு அதே காதலின் பித்தில் இருப்பவர், காதலின் பித்து தன்னுள் பரவ காரணமாய் இருந்த நபரைச் சந்தித்தால்….

  அந்த நபரின் முன்னே காதலை, பிரிவை, பிரிவின் ரணத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தால்..அப்படி ஒரு வாய்ப்பு ஒருத்தருக்கு கிடைக்க அவர் தன் உணர்வை பாடலாக பாடத் தொடங்குகிறார்.

  முதல் நீ, முடிவும் நீ, மூன்று காலம் நீ, கடல் நீ கரையும் நீ, காற்று கூட நீ என தொடங்குகிறது, அப்பாடல். என் அத்தனையும் நீ என்பதை நான்கு வரியில் கூறிவிட்டுதான் மற்ற எண்ணங்களை வரிகளாக தொகுக்கிறான் அவன்! 

  நேசித்தவரை பிரிந்துவிட்டு, பிரிவின் முறிவிலேயே நாட்களை கடக்கும் ஒருவன் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை, இடையில் உறவுகள் நேர வாய்ப்பு இருந்தாலும் அவற்றில் முன்பு உணர்ந்த காதலின் சாயல் துளியும் இல்லாமல் போக, அந்த உணர்வை ‘மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே’ என்றும் கீழ்வரும் வரிகளின் மூலமும் விவரிக்கிறான். 

  வழி எங்கும் பல பிம்பம்

  அதில் நான் சாய தோள் இல்லையே

  உன் போல யாரும் இல்லையே

   

  தீரா நதி நீதானடி

  நீந்தாமல் நான் மூழ்கி போனேன்

  நீதானடி வானில் மதி

  நீயல்ல நான்தானே தேய்ந்தேன் என்ற வரிகளில் தான் தேய்ந்துக்கொண்டிருக்கும் உணர்வினை கடத்தி விட்டு அடுத்த வரிக்கு போகும் முன் அவன் தன் பார்வையால், அவளை நோக்கி ஏக்கத்தை கடத்துவான். அவ்வுணர்வு அவளுக்கு சென்றடைந்தப் பின் அவன் கீழ்காணும் வரிகளில் அவனின் பாரத்தை தெரிவிக்கிறான். 

  பாதி கானகம்

  அதில் காணாமல் போனவன்

  ஒரு பாவை கால் தடம்

  அதை தேடாமல் தேய்ந்தவன்

   

  காணாத பாரம் என் நெஞ்சிலே

  துணை இல்லா நான் அன்றிலே

  நாளெல்லாம் போகும் ஆனால் நான்

  உயிர் இல்லாத உடலே

  தொடர்ந்து வலியை மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருந்தவன் ஒரு நிமிடம் தொலைந்தவள் கிடைத்துவிட்டாளென்று கற்பனை செய்கிறான். அந்த கற்பனையை இதழில் புன்னகையோடும், கண்களில் பூரிப்புடனும் பாடுகிறான். 

  தூர தேசத்தில்

  தொலைந்தாயோ கண்மணி

  உனை தேடி கண்டதும்

  என் கண்ணெல்லாம் மின்மினி 

  இழைத்த தவறை வெகுகாலம் கழிந்து உணர்ந்தவன், மன்னிப்பை கேட்க நினைக்கிறான். அதை, அவன் ‘பின்னோக்கி காலம் போகும் எனில் உன் மன்னிப்பை கூறுவேன் கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம் பிழை எல்லாமே கலைவேன்’ என மனமுவந்து பாடுகிறான். 

  கவனித்திருந்தால் பாடலில் ஒரு இடத்திலும் துயரத்தை வெளிப்படையாய் கூறாத அவன், ‘அழகான அரிதாரத்தை வெளிப்பார்வைக்கு பூசி கொண்டதாகவும், அந்த அரிதாரம் புன்னைகைக்கு போதும்’ என்பதன் மூலம், இப்போதும் அவனுள், இவளை இழந்த துயரம் வற்றாத ஆறாய் இருப்பதை இயல்பாக வெளிப்படுத்துகிறான். 

  நீ கேட்கவே என் பாடலை

  உன் ஆசை ராகத்தில் செய்தேன்

  உன் புன்னகை பொன் மின்னலை

  நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்

  என பாடலின் இறுதியில், இன்னொரு உண்மையையும் கூறி அவளுக்கு மீண்டும் தெரிவிக்கிறான், முதலும் முடிவும் அவள்தான் என்று. 

  பாடலைக் காண : https://www.youtube.com/watch?v=ATElufr0OiE

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....