கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும், கைகளை அடிக்கடி கழுவதும் என தினசரி செயல்பாடாக பின்பற்றி வருகின்றனர். முகக்கவசம் அணிவதால் கொரோனா பெருந்தொற்று பரவாது என்றும், இதனால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். பல நாடுகளில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன.
முகக்கவசம் அணிவதால் ஏற்படும் அசௌகரியங்களால் பலரும் முகக்கவசத்தை அணிவதை தவிர்க்கின்றனர். சிலருக்கு முகக்கவசத்தினால் காற்றோட்டம் இல்லாமல் இருப்பதால் வியர்வை அதிகம் வழிகின்றது. மேக்கப் போடும் பெண்களும் முகக்கவசம் அணிவதை விரும்புவதில்லை. முகம் பாதிக்கு மேல் மறைக்கப்படுவதாலும் பலரும் முகக்கவசம் அணிவதை தவிர்க்கின்றனர். நீண்ட நேரத்திற்கு குழந்தைகளாலும் முகக்கவசம் அணிய முடிவதில்லை. இதனால் பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவதற்கு விருப்பமில்லாமல் இருக்கின்றனர். சிலர் முகக்கவசம் அணிந்து தவறான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென்கொரியாவில் அட்மான் என்ற நிறுவனம் கோஸ்க் தயாரிக்கின்றது. இது முகக்கவசத்திற்கு பதிலாக பயன்படுத்தக்கூடியது. இந்த கோஸ்க் அணிவதால் மூக்கு பகுதியை மட்டுமே மூடும். வாய்ப்பகுதி மூடாமல் இருப்பதால் பலரும் இந்த கோஸ்க் அணிய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கே.எஃப்.80 என்ற பெயரில் ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக இதனை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மற்றொரு வடிவமைப்பு கொண்ட கோஸ்க், எப்போதும் போல முகத்தையும், வாயையும் மூடும் வகையில் இருக்கும். ஆனால் அதை வாடிக்கையாளர்கள் மடித்துக் கொள்ளலாம். சுமார் 0.3 மைக்ரான் அளவு சிறிய துகள்களையும், கிருமிகளையும் தடுக்கக் கூடிய அளவில் 80 சதவீத செயல்திறன் கொண்டதாக இந்த கோஸ்க் இருக்கிறதாம்.
கோ என்றால் தென்கொரிய மொழியில் மூக்கு என்று அர்த்தமாம். அதைத்தான் கொஞ்சம் சேர்த்து கோஸ்க் என பெயர் வைத்துள்ளார்கள். மூக்கு பகுதியை மட்டும் மூடிவிட்டு, வாய் பகுதியை அப்படியே விட்டுவிடும் வகையில் இதை தயார் செய்துள்ளது அட்மான் என்ற நிறுவனம். இதனை உணவகங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.