Tuesday, May 16, 2023
மேலும்
  Homeவாழ்வியல்சுற்றுலாத்தளங்கள்காவிரி பிறக்கும் இடம் தெரியுமா?- அங்கிருக்கும் இயற்கை வியப்புகள் உள்ளே!

  காவிரி பிறக்கும் இடம் தெரியுமா?- அங்கிருக்கும் இயற்கை வியப்புகள் உள்ளே!

  குடகு அல்லது கூர்க் என்று அழைக்கப்படும் மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இது இந்தியாவிலேயே மிகப் பெரிய சுற்றுலாத் தளங்களுள் ஒன்றாகும். இங்கு நம்மை வியப்பில் ஆழ்த்த பல இடங்கள் உள்ளன. வாருங்கள் அவற்றைத் தெரிந்துக் கொள்ளலாம். 

  கர்நாடக கூர்க் மாவட்டத்தில் மலைப்பிரதேசங்கள் நிறைந்துள்ளன. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று நம் கண்ணை குளிர்விக்கும் காட்சிகளாக  இருக்கின்றன. இங்கு 20 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை தான் காணப்படுகின்றது. மேலும் இயற்கை அழகு கொஞ்சும் அருவிகள், நீர்நிலைகள், மலைக்காட்சிகள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் ஏராளம். 

  குடகு மலையை ஒட்டிய மலையடிவாரப் பகுதிகளில் அமைதிக்கு பஞ்சம் இருக்காது. அழகான கிராமங்கள் இனிமையான சூழல் என மனதை கவரவே இருக்கின்றன. மேலும் இங்கு காப்பி தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. சர்வதேச அளவில் பெயர்பெற்றது குடகு பகுதியில் விளையும் காஃபி கொட்டைகள். 

  காவிரி ஆற்றின் ஓரம் யானைகள் முகாம்: 

  காவேரி ஆற்றின் கரையோரம் ‘துபாரே’ என்ற யானைகள் முகாம் இருக்கிறது. இவற்றைக் காண வரும் சுற்றுலாப்பயணிகள் அதிகம். அதுமட்டுமில்லாமல் யானைகளுக்கு உண்ண சில குறிப்பிட்ட வகையான உணவுகளை நாமே வழங்கலாம். சிறிது கட்டணம் செலுத்தினால் காவிரி நதிக்கரையோரம்  சென்று யானைகளை குளிப்பாட்டவும் செய்யலாம். இந்த முகாம் மடகேரி பேருந்து நிலையத்தில் இருந்து 29 கி.மீ தொலைவிலும் பைலாகு என்ற இடத்திலிருந்து 26 கி.மீ தொலைவிலும் உள்ளது. 

  இயற்கை எழில் காண: 

  இயற்கையின் இனிமையாக கருதப்படுவது சூரிய உதயமும் மறைவும் அவற்றை ‘ராஜா சீட்’ என்ற இடத்திலிருந்து கண்டால் மிகவும் அழகாக இருக்கும். மலைகளின் இடைவிடாத இணைப்பில் தோன்றி மறையும் சூரியனின் அழகை இங்கு காண முடியும். பள்ளத்தாக்கிற்கு நடுவே வளைந்து நெளிந்து செல்லும் மங்களூர் சாலையின் அழகை இங்கே பார்க்கலாம்.

  மேலும் அந்த காலத்தில் குடகு மலை அரசர்கள் இங்கு வந்து இயற்கை அழகை ரசிப்பதற்கெனவே இடத்தை தேர்வு செய்துள்ளனர். குழந்தைகளுக்கு குட்டி இரயில் அனுபவமும் கிடைக்கும். மடகேரி பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ராஜா சீட். 

  நீர்வீழ்ச்சியின் சாரல்: 

  குடகு மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களுள் ஒன்று இந்த ‘அபே நீர்வீழ்ச்சி’ ஆகும். காஃபி தோட்டங்களுக்கு நடுவே இயற்கையான நறுமணம் வீசி குதிக்கிறது இந்த அபே நீர்வீழ்ச்சி. கண்ணைக்கவரும் காட்சியாக இந்த நீர்வீழ்ச்சி இருக்கிறது. ஆண்டு தோறும் தண்ணீர் வரத்து இருக்கிறது. மேலும் பருவ மழையின் போது அதிக நீர் வரத்து காணப்படுகிறது.

  மேலும் இங்கு யாருக்கும் குளிக்க அனுமதி இல்லை. அருகில் செல்ல முடியவில்லை என்றால் என்ன, சற்று தூரத் தொலைவிலிருந்து நீர்வீழ்ச்சியின் சாரலில் நனைந்தபடி ரசித்து உணரலாம். இங்கு சிறப்பான தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் நின்று நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்தும் புகைப்படம் எடுத்தும் மகிழலாம்.  

  லிங்கராஜாவால் கட்டப்பட்ட கோவில்: 

  மடகேரியில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களில் இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. ராஜ லிங்கராஜாவால் கட்டப்பெற்றது தான் இந்த ‘ஓம்காரேஸ்வர கோவில்’. இக்கோவிலில் சிறப்பம்சமாக காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட லிங்கத்தை கருவறையில் காணலாம்.

  இந்தக் கோவிலானது 1820 ஆம் ஆண்டு கோலிக் ஆற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது. வண்ணமிகும் காட்சிகளை கொண்ட இக்கோவிலின் எதிரே பெரிய குளம் ஒன்று உள்ளது.

  அழகான குட்டி தீவு:

  ‘காவிரி நிசர்காதமா’ என்று தீவு காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது. குஷால் நகரில் காவிரி ஆறு இரண்டாக பிரிந்து மீண்டும் இணைகிறது. அந்த நிலப்பரப்பு குட்டி தீவு போன்று காட்சியளிக்கிறது. மொத்தம் 64 ஏக்கரில் அமைந்துள்ள இக்குட்டி தீவில் பல்வேறு குட்டி விலங்குகளுக்கு பூங்காக்கள் உள்ளன. முயல், மான், வண்ணமலர்களுக்கு அழகான அமைவிடமாக உள்ளது இந்தக் குட்டி தீவு.

  இத்தீவிற்கு செல்ல தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு படகு சவாரி செல்லவும் வசதிகள் உள்ளது. சில இடங்களில் காவிரி ஆற்றில் இறங்க பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இக்குட்டி தீவின் அழகை ரசிக்கவே இங்கு சென்று வரலாம். 

  புத்த மட ஆலயம்: 

  ‘பைல குப்பே’ என்ற திபெத்திய புத்த கோவில் மட ஆலயம் குடகுவில் கட்டாயம் காணத்தக்க ஒன்றாகும். புத்த துறவிகளின் தத்துவங்கள் அங்குள்ள புத்ததுறவிகளின் அழகிய சிலைகளில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. சீனா தீபத்தை கைப்பற்றிய போது அங்கு இருந்து சில திபெத்திய சமூகம் இங்கே வந்து குடியேறி குடுவையை இன்னும் அழகாக மாற்றியுள்ளனர் என்றே கூறலாம். பைல குப்பேவில் விவசாயம் செய்யப்படுகிறது மேலும் அழகான கண்ணைக்கவரும் சிலைகள், கைவினைப்பொருள் கடைகள் உள்ளன. 

  தலைக்காவேரி: 

  பிரம்மகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள தலைக்காவிரி, காவிரி ஆறு தொடங்கும் இடமாகும். குடகு சுற்றுலாத் தளங்களில், இங்கு செல்லாமல் யாரும் திரும்பவே மாட்டார்கள். மடகேரியில் இருந்து 48 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, இந்த தலைக்காவேரி. இங்கு காவிரி ஆற்றைப் பெண் தெய்வமாக வழிபாடு செய்கின்றனர் மக்கள். மேலும் காவிரி என்ற அம்மன் கோவிலும் இந்த காவேரி நதியில் அமைந்துள்ளது. விநாயகருக்கும் அகத்தியருக்கும்(சிவன்) இங்கு கோவில்கள் உள்ளன. பிரம்மகிரி மலை பகுதியில் ஏறினால் இயற்கை கொஞ்சம் அழகை கண் குளிரக் காணலாம்.

  தமிழகத்திற்கு வரும் காவிரி ஆறு, ஆடு தாண்டும் காவிரி என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், மிகக் குறுகிய இடத்தில் இருப்பதாலும் மிக அதிக ஆழத்தைக் கொண்டுள்ளதால் ஆடு க்கோட தாண்டிவிடும் என்பதால் இதற்கு ஆடு தாண்டும் காவிரி என்று சொல்லப்படுகிறது. இஹடைத்தான் கர்நாடக மாநிலத்தில் மேக-தாது (மேக – ஆடு, தாது- தாண்டுதல்) என்கின்றனர்.  

  மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்த இவ்விடங்கள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கின்றன. படகு சவாரி, மீன் பிடித்தல், மலை ஏற்றம், பொழுதுபோக்கு விளையாட்டுகள் போன்றவை இங்கு பொழுதைக் கழிக்க ஏதுவாக உள்ளன. குடகுவின் அழகை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அவ்வளவு இருக்கிறது. நேரம் இருந்தால் இந்த இடங்களுக்கு எல்லாம் சென்று வாருங்கள் மன  மகிழ்ச்சியை நீங்களே உணருவீர்கள்.

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....