Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குஇயலும் இசையும்வரிகளில் வைரமுத்து வெடிக்க...இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் சீற பலரும் அறியா ஒரு காதல் கீதம் இது!

    வரிகளில் வைரமுத்து வெடிக்க…இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் சீற பலரும் அறியா ஒரு காதல் கீதம் இது!

    ‘காதல் இல்லையேல் சாதல்’ எனும் அளவுக்கு காதலின் மீதான பித்து என்பது விளைந்திருக்கிறது. இன்றோ நேற்றோ பிறந்தது அல்ல, காதல். ஆதாமும் ஏவாளும் புவியில் அவதரித்த நாள்தொட்டு காதலும் இப்புவியில் நிலவி வருகிறது. மனிதனின் உணர்ச்சிப் பிழம்புகளில் காதல் என்பது அடிநாதமாகும். இந்த அடிநாதம் இயல்பான ஒன்றாகும். அதன் மீது புனிதத்தன்மையை ஏற்றி வைத்துதான் ஆக வேண்டும் என்றல்ல. காதல் காற்றைப் போல எல்லாருக்குமானது இயல்பானது. 

    துயரங்களை பகிர, கண்ணீரை சக்கரையாக மாற்ற, துன்பத்திலும் இன்பத்தை காட்ட, எவருக்கும் தெரியாத பிரத்யேக காயங்களை நம்பிக்கையுடன் காட்ட, நமக்கு நம்பிக்கையான ஒருவர் கிடைத்துவிட்டார். அதுவும் காதலெனும் உறவில் நம்மை காதல் வயப்படுத்தவும், நம்மின் மீது காதல் வயப்படவும் ஒருவர் கிடைத்துவிட்டார் என்பது எவ்வளவு இனிமையான ஒன்றாக இருக்க முடியும். இப்படியான ஒன்று இங்கு கதாநாயகிக்கு கிடைக்கிறது. 

    மணிரத்னம் இயக்கத்தில், மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில், ஏ. ஆர், ரஹ்மான் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் கதாநாயகிக்குத்தான் மேற்கூறியபடியான காதல் ஒன்று அமைகிறது. தாசில்தாரின் மகளாக இருக்கும் இந்திரா, தங்களுக்கு சொந்தமான வீட்டில் வாடகை இருக்கும் எழுத்தாளர் மற்றும் பொறியியலாளரான திருச்செல்வம் மீது காதல் வயப்படுகிறாள்.  

    திருச்செல்வத்தின் மீது தனக்கு இருக்கும் காதலை மறைமுகமாகவும், நேரிடையாகவும் இந்திரா தெரிவித்தும்…திருச்செல்வம் எந்தவித பதிலும் பெரியதாய் கூறாமல் நழுவிக்கொண்டே இருக்கிறார். காதல் வலையில் சிக்காமல் நழுவிக்கொண்டே இருந்த திருச்செல்வம் ஒரு சூழலில் இந்திராவிடம் சென்று என்னை கல்யாணம் செய்துகொள்கிறாயா என்று கேட்கிறார். அச்சமயத்தில் இந்திராவின் முகத்தில் பரவசமும், தயக்கமும் ஒருங்கே கலந்திருக்கிறது. தயக்கத்துக்கு காரணம் என்னவென்று நோக்கினால், திருச்செல்வம் அமுதா என்ற ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவதுதான். 

    அதன்பின்பு, கடல்பார்த்த வீட்டின் பிற்பக்கத்தில் ஒரு குண்டுபல்பு வெளிச்சத்தின் கீழே நாற்காலியில் அமர்ந்து பொறியில் வேலை சமந்தமானவற்றை திருச்செல்வம் செய்துக்கொண்டிருக்கிறான். உடன் திருச்செல்வத்தின் அக்காவும், அக்காவின் மகனும் இருக்க இந்திரா அந்த இடத்திற்கு வருகிறாள். வந்தவள், திருவின் அக்காவை நோக்கி ‘ கொஞ்சம்..உள்ள போறீங்களா’ என்கிறாள்.  

    அக்கா திடுக்கிட…திருச்செல்வமும் அக்காவை உள்ளே போக சொல்கிறான். அக்காவும் உள்ளே செல்கிறார். அதன்பின்பு திருச்செல்வம் இந்திராவை நோக்கி பேசுகிறான். 

    ‘அழறியா…ஏன் அழுற…இந்திரா’

    ‘ஒரு வருஷமா உங்களுக்காக காத்திருக்க…ஆனா, அந்த சின்னப்பொன்னு வந்ததுக்கு அப்புறம்தான் உங்க கண்ணுல பட்டேனா? நான் என்ன இலவச இணைப்பா‘

    ‘பிடிச்சிருக்குனு சொன்னதுக்கா அழுற‘ என்று கூறியபடியே திருச்செல்வம் இந்திராவின் கையை பிடிக்கிறான். 

    ‘தொடாதீங்க’ என்ற இந்திரா, ‘எனக்காக அமுதா-வ தத்தெடுத்துக்க போறீங்களா இல்ல..அமுதாவுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்க போறீங்களா’ என்ற கேள்வியை முன் வைக்கிறாள். 

    ‘இந்த கண்ணும் வேண்டும், அந்த கண்ணும் வேண்டும்…. இந்த கன்னமும் வேண்டும் அந்த கன்னமும் வேண்டும்’ என எழுத்தாளர் திருச்செல்வம் பேச, இந்திரா சரி சரி போதும் என்று கூறியபடி அடுத்த வாக்கியத்திற்கு நகரும் தருவாயில் இந்திராவை திருச்செல்வம் கட்டியணைத்துக் கொள்கிறான். இச்சூழலில் ஏ.ஆர்.ரஹ்மான இசையில் பாடகி மின்மினி, ‘சட்டென நனைந்தது நெஞ்சம்’ என்று ஒலிக்கிறார். 

    மென்மையாக உரையாடல் நிகழ, அதில் காதல் தவழ்ந்துக் கொண்டிருக்க சட்டென்று ஒலிக்கும் இப்பாடல் இந்திராவின் மனநிலையை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. கூடவே ஒரு குதூகலமும் சேர்கிறது. திருச்செல்வம் இந்திராவை அணைத்துக்கொண்டிருக்க, அவள் கண்ணீர் விடுகிறாள். ஆனந்தக்கண்ணீர் விடுகிறாள். அச்சமயத்தில் ’’சர்க்கரையானது கண்ணீர்’’ என்று வைரமுத்துவின் வரிகள் சூழலுக்கு பொருந்த வருகிறது. 

    மேலும், ’’இன்பம் இன்பம் ஒரு துன்பம்….துன்பம் எத்தனை பேரின்பம்’’ என பாடல் நகர, பாடலின் காட்சியமைப்பும் சிறப்பாக அமைகிறது. இங்கே பாடலின் அடுத்தக் கட்டத்திற்கு நகர அங்கே ’’உடலுக்குள் மல்லிகை தூரல், என் உயிருக்குள் மெல்லிய கீறல்….சுகமாய் சுகமாய் கொள்ளையிடு, என் உயிரை மட்டும் விட்டுவிடு’’ என்ற வரி பின்னணி இசையின் பக்கபலத்தில் ஆழமாகவும் இனிமையாகவும் ஒலிக்கிறது. இங்கே இந்த வரியை பார்ப்பவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப காமத்தையும் காதலையும் ஒரு சேர வடித்துள்ளார், கவிஞர் வைரமுத்து. 

    இதன்பின்பு, பாடலின் வரியிலும் இசையின் ஒலியிலும் நிகழ்ந்தது சரியான பாய்ச்சல் என்றே சொல்லலாம். எப்போது எப்படி எவ்வழியே காதல் என்னை வந்துசேரும் என்று காத்துக்கிடந்த இந்திராவுக்கு காதல் கைகூடியதை, ’’எந்த வாசல் வழி காதல் நடந்து வரும் என்று காத்து கிடந்தேன்… அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன்’’ என மின்மினியின் குரல் எழும்ப இந்திரா மட்டுமல்ல நாமும் பரவச நிலைக்கு செல்ல முடிகிறது. 

    ’’தாவி வந்து எனை அணைத்த போது எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன்..சாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்’’ என வரிகள் வரும்போது இவ்வளவு நாள் இந்திரா தன்னுள் வைத்திருந்த காதலையும், காதல் சேருமா சேராதா என்ற தவிப்பின் வழியே தன்னுள் நிகழ்ந்த சாதலையும் வைரமுத்து அட்டகாசமாய் சொல்லிவிடுகிறார். 

    kannaththil muththamittal song lyrics

    ’’துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை, அணைப்பின் ஆதிக்கத்தால் வெளியேற்று அச்சத்தை’’ என இந்த வரிகள், இந்திராவின் மனதுக்குள் பூத்துக்குலுங்கும் காதலை, கொண்டாட்ட மனநிலையை சொல்கிறது.  காதல் வாய்த்தோருக்கு மட்டுமல்ல, காதல் பிடித்தோருக்கெல்லாம் இப்பாடல் ஒரு கொண்டாட்டம். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....